0,00 INR

No products in the cart.

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

அருளாடல்

ஸ்ரீதர்

பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற் தொழிலில் கைதேர்ந்த பரமேஸ்டி, டில்லி முகல் பாட்ஷாவிற்கு துணி தைத்து தருமளவிற்கு கீர்த்தி பெற்றவராக இருந்தார்!

ஒரு சமயம் பாட்ஷா தங்க ஜரிகையும், முத்து மற்றும் வைரமும் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த துணியொன்றை இரண்டு தலையணைகளை தைப்பதற்காக பரமேஸ்டிக்கு அனுப்பி வைத்தார்! அழகான துணியைப் பார்த்ததும், ‘இது எனது பிரபு ஜெகந்நாதரின் தலையணைக்கு மட்டுமே பொருத்தமானது’ என்று பரமேஸ்டி மனதிற்குள் எண்ணினார். பரமேஸ்டி, பாட்ஷாவிடமிருந்து துணியைப் பெற்றுக்கொண்டது ரத யாத்ரை காலமாகும். ஜெகந்நாதர் ரதத்திலேறி பஹண்டி விஜயம் செய்யும் சமயம், பரமேஸ்டி தலையணைகளைத் தைக்கத் தொடங்கினார். தைத்து முடித்த பிறகு நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த தலையணைகளைக் கண்டு திருப்தியுடன் கண்ணை மூடிக்கொண்ட பரமேஸ்டி, பிரபு ஜெகந்நாதரின் பஹண்டி விஜய லீலையை மனதில் நினைத்துப் பார்த்தார். ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களின் நடுவே பகவான் ஜெகந்நாதர் எல்லோரது மனதையும் வசீகரித்தபடி வந்து கொண்டிருந்தார்!

ஜெகந்நாதரை கோயிலிலிருந்து எடுத்துச் சென்றபோது, அவர் தலையணையில் சாய்ந்திருந்தார். சேவகர்கள் தலையணையை நகர்த்தி நகர்த்தி ஜெகந்நாதரை ரதத்தில் ஏற்றுவார்கள்! இந்தக் காட்சியனைத்தையும் பரமேஸ்டி தியானத்தில் பார்த்தார். திடீரென தலையணை பொத்துக்கொள்வதைப் பார்த்து, பகவானுக்கு இன்னொரு தலையணை தேவை என்பது அவருக்குத் தெரிந்தது! ஏதோ நிஜமாகவே பிரபு ஜெகந்நாதர் பக்கத்தில் நின்று கொண்டிருப்பதுபோல, அவர் பாட்ஷாவிற்காக தைத்த இரண்டு தலையணையில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்!

மானசீகமாகக் கொடுத்ததை ஜெகந்நாதர் நிஜமாகவே வாங்கிக்கொண்டார்! சேவகர்களும் அவரை ரதத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே போனார்கள். பரமேஸ்டியின் கற்பனை கலைந்தது. தன்வசம் இரண்டு தலையணைகளுக்குப் பதிலாக ஒன்று மட்டுமே இருப்பதைக் கண்டார்! ஒரு தலையணையை ஜெகந்நாதர் நிஜமாகவே எடுத்துக் கொண்டது அவருக்கு திடீரென உரைத்தது!

பரமேஸ்டிக்கு இதைக் காண ஆச்சர்யம்! தான் தைத்த ஒரு தலையணை பகவானுடைய ஏகாந்த சேவைக்கு உபயோகப்படுத்தியதை நினைத்து தையற்காரர் தன்னை பாக்கியசாலியாக எண்ணிக் கொண்டார்! ஜெகந்நாதர் தன்னிடம் கருணை காட்டுவதாக அவர் நெஞ்சுருகினார்! அதேசமயம் பயமும் அவரை தொற்றிக் கொண்டது. ‘ஒற்றை தலையணையை மட்டும் கொண்டுபோய் கொடுத்தால் பாட்ஷா தண்டிப்பார் என்பதில் சந்தேகமில்லை’ என்று பரமேஸ்டி தனக்குள்  நினைத்துக் கொண்டிருக்கையில், பாட்ஷாவின் தூதர் இரண்டு தலையணைகளையும் அரண்மனைக்குக் கொண்டு வரும்படியான பாட்ஷாவின் உத்தரவை தெரிவித்தனர்!

பரமேஸ்டி உடனே ஒரேயொரு தலையணையை மட்டும் தன்னுடன் எடுத்துச் சென்றார்!
தன் வணக்கங்களை பாட்ஷாவுக்குத் தெரிவித்து விட்டு, பிறகு அவரிடம் தலையணையைக் கொடுத்தார்! பாட்ஷா குழம்பிப்போய் கேட்டார், “நான் இரண்டு திண்டுகளைச் தைக்கச் சொன்னேனே?! நீ இன்னொரு திண்டு தைக்கவில்லையா?  இன்னொரு திண்டு என்னவாயிற்று? உண்மையைச் சொல்” என்றார்.

பரமேஸ்டி உடனே பாட்ஷாவின் காலில் விழுந்து, “மற்றொரு திண்டை பகவான் ஜெகந்நாதர் எடுத்துக் கொண்டதால் என்னிடம் இந்த ஒரு திண்டு மட்டுமே இருக்கிறது! தயவுசெய்து இதை ஏற்றுக்கொண்டு, குற்றமென கருதினால், அதற்கான தண்டனையை எனக்கு வழங்குங்கள்” என்றார்.

பாட்ஷா புன்னகைத்தார். ஆனாலும், உள்ளம் கொதித்தார்! பரமேஸ்டியை முறைத்துப் பார்த்து விட்டு, “நீ என்ன சுய நினைவில் இல்லையா பரமேஸ்டி? உன்னிடமிருந்து எப்படி அவரால் திண்டை எடுத்துக்கொள்ள முடியும்? ‘ ஸ்ரீ க்ஷேத்திரபுரி இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறது! எப்படி அவரால் ஒரே நாளில் இவ்வளவு தூரம் வந்து உன்னிடமிருந்து திண்டை எடுத்துச் செல்ல முடிந்தது?” என்றார்.

பாட்ஷாவின் அறியாமைக்கு பதில் கூற நினைத்த பரமேஷ்டி, பகவானின் புனித நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்! பின்பு பாட்ஷாவிடம், “பிரபு, நான் மரணத்திற்கு பயப்படவில்லை. பகவானுக்கும் பக்தனுக்குமிடையே எத்தனை தூரம் இருந்தாலும் அது அவருக்கு ஒரு பொருட்டேயில்லை! பக்தனின் மனோபாவத்திற்கு ஏற்ப அவர் தனக்கு அளிப்பதை மிக பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறார்!” என்றார்.

பரமேஸ்டியின் இந்த விளக்கத்தைக் கேட்டு மிகவும் கோபம் கொண்ட பாட்ஷா, “நீ உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்! உனக்கு மரண தண்டனைக்கு ஆணையிடுகிறேன்” என்றார்.

பின்னர் சேவகர்களை அழைத்து, “இவனை கைது செய்யுங்கள். இந்தக் கூன்முதுகனை சிறைச்சாலைக்கு அழைத்துப்போய் கை, கால்களை கட்டி பட்டினி போடுங்கள். அவன் பட்டினியால் சாகட்டும்! அவன் கடவுள் அவனை எப்படிக் காப்பாற்றுகிறாரென்று நானும் பார்கிறேன்!” என்றார்.

பரமேஸ்டி சிறையில் பகவான் ஜெகந்நாதரிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார். ‘ஓ… பிரபு தயவுசெய்து என்னை ரட்சிக்கவும்.  அரசரின் தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றவும்! நீங்கள் என்னை எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்! ஏனென்றால், எதுவும் எனது கட்டுப்பாட்டில் இல்லை.’ இப்படியே பிரார்த்தித்த பரமேஸ்டி, பகவானின் நாமத்தை கண் மூடி உச்சரித்து, தியானத்தில் ஆழ்ந்தார்! அவரது மனம் பகவானின் ரூபத்தில் லயித்திருந்தது!

பரமாத்மாவான பகவான் ஜெகந்நாதருக்கு பரமேஸ்டியின் நிலை தெரிந்தது! பகவானால், அவரது பக்தர்கள் படும் அவஸ்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது! அவர் உடனடியாக சிறைக் கூடத்தில் தோன்றி, பட்டொளி வீசினார்! தனது கருணைப் பார்வையை பரமேஸ்டியின் மீது செலுத்தினார்! பகவானுடைய பார்வை அவர் மீது விழுந்த மாத்திரத்தில் பரமேஸ்டியின் கை, கால்கள் விலங்குகளில் இருந்து விடுபட்டன!

அவர் கண்ணைத் திறந்ததும், தன் முன் பகவான் ஜெகந்நாதர் இருப்பதைப் பார்த்தார். பகவான் தனது தாமரைத் திருவடிகளை பரமேஸ்டியின் தலையில் வைத்தார். உடனடியாக பரமேஸ்டியின் கூன் முதுகு நிமிர்ந்து, அழகான உருவம் பெற்றார்! பகவானின் தாமரைத் திருவடியை தலையில் ஏந்திய பரமேஸ்டி, பக்திப் பரவசமடைந்தார்!

பிறகு, பகவான் ஜெகந்நாதர் அரண்மனையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முகல் பாட்ஷாவின் கனவில் தோன்றி, “முட்டாள் அரசனே, ஒரு எளிய வஸ்துவான திண்டை எனக்களித்தமைக்காக நீ என் பக்தனை தண்டித்துவிட்டாயா? இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் எனக்குரியவை! அவர் எனக்கு உரியதையே திருப்பிக் கொடுத்தார்! உடனடியாக அவரை விடுதலை செய்யும்படி உனக்கு ஆணையிடுகிறேன்! அவரிடம் மன்னிப்பு வேண்டி யாசிக்கவும்!” எனக் கூறி, பாட்ஷாவிற்கு கசையடி கொடுத்து அரண்மனையிலிருந்து வெளியேறினார்.

கத்திக் கதறி படுக்கையிலிருந்து எழுந்த பாட்ஷா, தான் ஏதோ கெட்ட கனவு கண்டோமோ என்று எண்ணினார்! ஆனாலும், தன் முதுகில் செந்தழும்புகள் இருப்பதைப் பார்த்து, தான் கண்டது சாதாரண கனவல்ல என்று அவருக்குப் புரிந்தது! ‘தனது பக்தனின் பொருட்டு, எனக்குப் பாடம் புகட்ட எனது கனவில் வந்து தண்டனை அளித்திருகிறார் பகவான் ஜெகந்நாதர்! அவருடைய ஆணையை நிறைவேற்ற நான் தாமதித்தால், நான் இன்னும் பெரிய ஆபத்திற்கு உள்ளாவேன்’ என்றெண்ணி பரமேஸ்டியை விடுவிக்க சிறைச்சாலைக்கு விரைந்தார் பாட்ஷா.

சிறைச்சாலையில் கட்டுகள் அவிழ்க்கப்பட்டும், முதுகு கூன் நிமிர்ந்தும் அழகு மிளிர பிரகாசத்துடன் இருந்த பரமேஸ்டியை கண்டு வியந்தார்! அவர் எந்தவித பாதிப்பும் இல்லாதவராய் ஹரி நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தைக் கண்டார். பரமேஸ்டியிடம் மன்னிப்பு வேண்டிய பாட்ஷா, அவரை தக்க மரியாதையுடன் வெகுமதிகள் அளித்து, பட்டத்து யானை மேல் அமர்த்தி ராஜ மரியாதையுடன் அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....

தேடிவரும் மோட்சம்!

0
மதுரம் - சந்திரா சேஷாத்திரி ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும்போது மூக்குக்கும், பழமாக இருக்கும்போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன்...