0,00 INR

No products in the cart.

பாட்டில்தான் உடல் தண்ணீர்தான் உயிர்!

கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்

இருபது வருடங்களுக்குமுன் முதல் முறை ஜெர்மனி சென்றிருந்தபோது நடைபாதை முழு வதும் சிறு கற்களால் ஆன டைல்ஸ் வடிவமைப்பு என்னைக் கவர்ந்தது. மற்ற ஐரோப்பிய தேசங் களுக்குச் சென்றபோதும் அந்த டிசைன் நடை பாதையும் தொடர்ந்தது.

இந்த நடைபாதையின் பெயர் ’Cobblestone pavement’ என்று பிறகு தெரிந்துகொண்டேன். ‘ஜகமே தந்திரம்’ படத்தில் லண்டன் போல செட் அமைத்த தெருக்களில் இந்த வடிவமைப்பு சொதப்பலாக இருந்தது என்று ஒருவர் கழுவி ஊற்றியிருந்தார். இந்த நடைபாதையின் வடிவமைப்பே கழுவி ஊற்றினால் தண்ணீர் நிற்காது என்பதுதான். அதாவது மழை பெய்யும்போது மழைநீர் தேங்காமல் இடுக்கு வழியாகக் கீழே இறங்கி நிலத்தடி நீர் அதிகரிக்கும்.

ரோமானியர்கள் வருவதற்கு முன்பே இந்த நடைபாதைகள் இருந்தது. பிறகு, அமெரிக்கா போன்ற தேசங்களுக்குச் சென்றது. இவற்றைப் பார்க்கும்போது ‘வெள்ளைக்காரன் மூளை’ என்று வியந்து, நம் பாரத தேசத்தில் இதுபோல இல்லை என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

‘கார்மேகம் போன்ற கருணையை மழையாகப் பொழியும் கண்ணனை பிருந்தாவனத்தில் கண்டேன்’ என்று ஆண்டாள் பாடிய பிருந்தாவனத்தில் ‘நந்தி கிராம’ தெருக்களில் நடந்தபோது, ஐரோப்பா நடைபாதை போல இருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். அடுத்த ஆச்சர்யம் ஸ்ரீரங்கத்தில் காத்துக் கொண்டிருந்தது.

ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று முதலாழ் வார்கள் சந்நிதிக்குச் செல்லும் பாதையில் பெருமாளைச் சேவிக்க நீண்ட வரிசையில் நின்றுகொண்டு பழைய காலத்துக் கல்யாணப் பெண் போலத் தரையைப் பார்த்தபோது அதே வடிவமைப்பு தென்பட்டது.

திருவரங்கத்தில் மழை நீர் சேகரிப்பு எல்லாம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வந்துவிட்டது. கோயிலில் பெய்யும் மொத்த நீரும் பாதாள வடிகால் அமைப்பு வழியாகச் சந்திர, சூரிய, வசந்த மண்டபப் புஷ்கரணிகளுக்குச் சென்று நிரம்பிவிடும். இதிலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் மேலே இருக்கும் இன்னொரு வடிகால் அமைப்பு வழியாகக் கோயிலுக்கு வெளியே இருக்கும் குளங்களை நிரப்பிவிடும்.

தண்ணீரின் தன்மை இடுக்கு வழியாகச் செல்வது. ஆனால் நாம் இன்று என்ன செய்கிறோம்? இந்த இடுக்கு வழியாகத் தண்ணீர் போகாதவண்ணம் சிமிண்ட் சலவைக் கற்கள் போட்டு அடைத்துவிடுகிறோம்.

திருப்புட்குழி கோயிலுக்குச் சென்றபோது பழைய கற்களுக்குமேல் புதிய சிமெண்ட் சிலாப் போட்டு அடைத்துவிட்டு, ‘கீழே பழைய கற்கள் இருக்கிறது’ என்று எழுதியிருந்தார்கள்.

‘ஆழி மழைக் கண்ணா’ என்று பாடி, யாகம் வளர்த்து, மழை எப்போது வரும் என்று வேண் டிக்கொள்கிறோம். மழை வரும்போது, பாவம், அந்த நீர் எங்கே செல்லும்? அதனால்தான் இன்று ஆழ்குழாய் அமைத்து அல்லது லாரியில் தண்ணீர் கொண்டுவந்து தெப்பக்குளங்களை நிரப்பும் அவலநிலை. பல ஊருக்குச் செல்லும்போது குளங்கள் வற்றி, அங்கே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் ஆசிரியர்கள் நிலத்திணைகளான குறிஞ்சி (மலை); முல்லை (காடு), மருதம் (வயல்); நெய்தல் (கடல்), பாலை (பாலை வனம்) என்று ஐந்து நிலங்களை உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தது நினைவு இருக்கலாம். தொல்காப்பியம், சங்க இலக்கியம் ‘நானிலம்’ என்று நான்கு வகை நிலங்களைப் பற்றியே கூறுகிறது. வாழ்த்தும் போதும், ‘நானிலமும் தான் வாழ’ என்று நான்கு நிலங்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட நிலங்கள் மழை இல்லாமல் நல்லியல்பு இழந்து பாழானால் அதுவே பாலை நிலம். இன்று வாய்க்கா எல்லாம் குப்பைகள் பரவி பிளாஸ்டிக் பாலை நிலங் களாகக் காட்சி அளிக்கின்றன.

சிறு வயதில் குழாயிலிருந்து, கிணற்றி லிருந்து வரும் நீரை அப்படியே குடிப்போம். கலங்கலாக இருந்தால் துணியில் வடிகட்டி. இன்று நம் குழந்தைகளின் நிலை அப்படி இல்லை. அடுத்த தெருவிற்குக் கூடத் தண்ணீர் பாட்டில் தேவைப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் ஒரு பெரியவர் என் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

“இந்தப் பாட்டிலை எதற்குக் கையில் வைத்திருக்கிறீர்கள்? பாட்டிலுக்கா? அல்லது தண்ணீருக்கா?”

“தண்ணீருக்கு…” என்றேன்.

“தண்ணீர் தீர்ந்துவிட்டால் பாட்டில் உபயோக மற்றது தானே?”

“ஆமாம்.”

“பாட்டில்தான் உடல். தண்ணீர்தான் உயிர். உயிர் உள்ளபோதே நல்லது செய்யவேண்டும்” என்றார்.

நாட்டில் நீரில்லை என்றால், பிளாஸ்டிக் பாட்டில் போல உபயோகம் அற்றதாகிவிடும். நம் உயிர் உள்ளபோதே நம் உயிரான நீரைக் காக்க வேண்டும்.

இப்போது வள்ளுவரின் ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி’ என்ற குறளை நிதானமாக படித்துப் பாருங்கள்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அருள்வாக்கு

0
விநாயகர் வழிபாடு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ‘தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல்,...

உங்கள் நூலகத்துக்குப் பெருமை சேர்க்கும்!

0
நூல் அறிமுகம்,நறுக்குத் தெறிப்புகள் அனுராதா கிருஷ்ணசாமி,திருமூலன் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி, அவர் எழுதிய சிறுகதைகளில், சிறந்த இருபது கதைகளடங்கிய தொகுப்பு ஒன்றை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் தேர்வையும் தொகுப்பையும் மாலன் செய்திருக்கிறார். தொகுப்பில்...

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

0
முகநூல் பக்கம் எழுத்தும் ஓவியமும் ராஜன் ஒரு ஓவியனின் டைரியிலிருந்து... பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை. இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது,...

பாலாபிஷேகம்

0
தமிழ் ஹெச்.என்.ஹரிஹரன் “மெய்யாலுமா சொல்றே..?” காலி பிளாஸ்டிக் குடங்களின் கழுத்திற்குள் கையை நுழைத்து பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக திரேசாவைப் பின் தொடர்ந்தாள் கண்ணம்மா. “ஆமாக்கா.. விடிகார்த்தால டமார்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான் நானும் புரண்டு படுத்தேனா... எப்பவும்...

நியாயமா அய்யா?

0
விஜய்டாலி ஜெகநாதன் வெங்கட் “வாடா... வா...” என்று அவனை வரவேற் றேன். அவனுடைய மகனைப் பார்த்து, “மதன், நல்லாப் படிக்கிறியா?” என்று வினவினேன். அவன், “ஆமாம்” என்று தலையாட்டினான். “என்ன சுப்பு, திடீர் வருகை?” என்று வினவினேன். “ஒரு...