0,00 INR

No products in the cart.

பாலாபிஷேகம்

தமிழ்
ஹெச்.என்.ஹரிஹரன்

“மெய்யாலுமா சொல்றே..?”

காலி பிளாஸ்டிக் குடங்களின் கழுத்திற்குள் கையை நுழைத்து பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக திரேசாவைப் பின் தொடர்ந்தாள் கண்ணம்மா.

“ஆமாக்கா.. விடிகார்த்தால டமார்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான் நானும் புரண்டு படுத்தேனா… எப்பவும் போல ஏதோ சாதா விபத்துன்னு நெனச்சு விட்டுட்டேன். எதிர்வீட்டு அம்மிணியக்கா வந்து சொன்ன துக்கப்புறந்தான் தெரியும். அதுக்கு முன்னாடியே விவரமா அது வீடு முழுக்கக் குடம் குடமா ரொப்பிடுச்சு…”

அரைகுறை விடியலில் அவர்களைப் போலவே இன்னும் ஏழெட்டுப் பேர்கள் கையில் கிடைத்த ஏனங்களுடன் விபத்து நிகழ்ந்த திசையை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

அவர்களது கிராமத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில்தான் வயல்காடுகளின் நடுவே தார் போட்ட வயல் வரப்பாய் தேசிய நெடுஞ்சாலை ஓடுகிறது.

சாலைகள் அகலமாக இருந்தும் விபத்துகள் இல்லாமலா இருக்கும்? அந்தக் கிராம எல்லையைத் தாண்டி வளைந்து செல்லும் சாலையைக் கவனிக்கத் தவறும் ஓட்டுநர்கள் கடைசி நிமிடத்தில் வண்டியைத் திருப்ப முயற்சித்து, தோற்றுப் போகையில், வண்டிகள் தடுமாறிச் சறுக்கிக் கொண்டு வயற்காட்டுக்குள் லாடம் அடிக்கிற மாடுகள் மாதிரி பக்கவாட்டில் படுத்தபடி விழுந்து கிடப்பது வாடிக்கையான நிகழ்வு ஆகிவிட்டது. அப்படித்தான் அந்தப் பால் வண்டிக்கும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

காலைக்கடன் கழிக்க இருட்டில் இடம் தேடும் சமயத்தில் அம்மிணியக்கா அதைப் பார்த்திருக்கிறாள். தன்னுடைய தேவையை முடித்துக்கொண்டு செய்தியைப் பரப்ப,இப்போது கிராமமே காலையில் சுறுசுறுப் பாகத் திரிகிறது.

தூரத்தில் பளபளவென்று ஸ்டீல் டாங்கர் கண்ணில் தெரியும்படி பால் வண்டி படுத்துக் கிடந்தது. அதன் உலோக மடியிலிருந்து பால் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. அதை ஓட்டிவந்த டிரைவர் யாரையும் அருகில் காணவில்லை. மொபைல் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் உதவி கேட்டு நெடுஞ்சாலைப் பகுதிக்குப் போயிருக்க வேண்டும்.

“களுவறதுக்குக் கையில் இருந்த சொம்பை அப்பிடியே தரையில கவுத்திட்டு நாந்தான் முதன்முதலா பாலைப் புடிச்சேன். சும்மா சொல்லக்கூடாதுடி. நொப்பும் நுரையுமா நல்லா வாசனையா இருக்குது பாலு. நமக்கு வர பால்காரன் எங்கேந்து கறந்துட்டு வரானோ?” அம்மிணியக்கா நீட்டி முழக்கி னாள்.

பத்து நிமிட நடையில் பால் வண்டி படுத்துக் கிடப்பது மங்கலாகத் தெரிந்தது. அதன் அருகிலும், வண்டியின் மேலும் நிற்கும் ஜனங்களின் தலைகள் தெரிந்தன.

வயற்காட்டில் பால் ஒழுகியதில் வெள்ளைக் குட்டைகளாய் அங்கங்கே தேங்கி நின்றன. தங்களுக்குள் சண்டையிட்டபடி சில நாய்கள் அதை நக்கிக் குடித்துக் கொண்டிருந்தன.

நேரில் பார்த்த பிறகு கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று கண்ணம்மாவிற்குத் தெளிவு வந்தது. ரவிக்கையினுளிருந்த போனை எடுத்து புருஷனை அழைத்தாள். ‘மனுசன் எடுக்குமோ என்னவோ… நேத்திக்கு வேற தலை முழுகிற அளவுக்குக் குடிச்சிட்டு வந்து கிடந்தது’ என்ற நினைப்பு ஓடியது.

அதிசயமாக போனை எடுத்துப் பேசினான் அவளது கணவன். “ஏண்டி பொறம்போக்கு… காலையில அப்படி என்ன அவசரம்னு எழுப்புற…?” என்று அரைகுறைத் தூக்கத் திலும் மறக்காமல் ஏசினான்.

“யோவ்… நான் பெரிய ரோடு வளைவு பக்கத்துல நிக்கறேன். இங்க பால் வண்டி ஒண்ணு கவுந்து கிடக்கு. பசங்களை எழுப்பி விட்டு, வீட்டுல இருக்கிற குடம், குண்டா னோட உடனே வரச் சொல்லு. நீயே அவங் களை சைக்கிள்ல கூட்டியா” என்று கிசுகிசுத் தாள்.

“சரி… எல்லாரையும் கூட்டியாறேன்…” போனை வைத்துவிட்டான்.

திரேசா சிரித்தாள். “அடியே கண்ணம்மா… நீ ஒண்ணும் குசுகுசுன்னு பேசற மாதிரி இது பெரிய ரகசியம் ஒண்ணும் கிடையாது. ஊருக்கே இந்த நேரத்திற்குத் தெரிஞ்சிருக்கும்.”

கிராமத்து மக்கள் அதிகம் கூடுவதற்கு முன்னால், சைக்கிளில் நான்கு பிளாஸ்டிக் குடங்களைக் கட்டிக்கொண்டு வந்தான் கண்ணம்மாவின் புருசன். பின்னால் காரியரில், அவளது மகன் கைகளில் இரண்டு தூக்கு வாளிகளைப் பிடித்துக்கொண்டு வந்தான். அவசர அழைப்பில் அவன் மேல்சட்டை கூடப் போடவில்லை. கண்ணம்மாவிற்கு ஓரளவு திருப்தியாயிற்று. ‘மூத்தவளைக் காணவில்லையே?’ என்ற கேள்வியும் மனதில் உண்டாயிற்று.

“ஏண்டா, ஒங்கக்கா வரலியா? அவ என்ன நேத்திக்குத்தான் சமஞ்ச மாதிரி வீட்டுல ஓரமா குந்திக்கிட்டு இருக்காளோ?” என்று சீறினாள்.

“இல்ல ஆத்தா.. வெளியில நீல பீப்பாயில தண்ணி பிடிச்சு வெச்சுருந்தோம்ல. அதைக் கொட்டிப்புட்டு வாசல்ல எடுத்து வைக்கி றேன்னு சொல்லியிருக்கா. ஒரு நடை போய்ட்டு வந்தா முழுக்க நிரப்பி வெச்சிரு லாம்ல?” என்றான் மகன்.

கண்ணம்மா மகிழ்ச்சியால் பூரித்தாள்.

“இன்னிக்கு நம்ம குடும்பந்தான் நிறையப் பாலைப் புடிக்கும்னு நெனைக்கிறேன்.” என்றபடி பாலைச் சேகரிக்கும் பணியில் இறங்கினாள்.

காலைச் சூரியன் தன் கிரணங்களால் இருட்டை முழுவதுமாக விலக்கியபடி கீழ்த் திசையிலிருந்து உயர்ந்து கொண்டிருந்ததில், மேற்குத் தெரு கோபியும் அவன் மனைவியும், முல்லா தெரு மும்தாஜும் அவளது கணவனும் என்று பால் பிடிக்க வந்தவர்களின் முகங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன.

வரிசையில் நின்று பாலைப் பிடிக்க யாரும் அங்கு தயாரில்லை. முட்டி மோதிக்கொண்டு முன்னேறினாள் கண்ணம்மா. சக கிராம மக்களிடம் சண்டை போட்டுக் கொண்டால் நாளை ஒருத்தொருக்கொருத்தர் முகம் பார்த்துக்கொள்ள வேண்டாமா? அதனால் அங்கு குடங்கள் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டன. பலம் வாய்ந்த கரங்களில் இருந்த குடங்கள் மற்ற நோஞ்சான் குடங் களைத் தள்ளிவிட்டன.

தண்ணீர் லாரியில் லாகவ மாகக் குடங்களில் நீர் பிடிப்பதில் கைதேர்ந்த கண்ணம்மா, சில நிமிடங்களில் பாலை நிரப்பி கணவனிடம் கொடுத்தனுப்பினாள். அவர்கள் வீட்டில் பாலைக் கொட்டிவிட்டு வருவதற்கு குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும். காத்திருந்தாள்.

கூட்டத்திற்குள் இப்போது அறிமுகம் இல்லாத முகங்களும்- அவர்கள் பக்கத்து கிராமத்தவர்களாக இருக்கலாம்- தென்பட்டன. மொத்தத்தில், ஐம்பது அறுபது பேர்களாகக் கூட்டம் பெருகியிருந்தது. திடீரென்று ஒரு சலசலப்பு உண்டாகி அடங்கியது.

“கிராமத்து தலைவர் அண்ணாச்சாமி வந்திருக்காரு.”

‘கிராமத்தில் பெரிய கை. அவருமா?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

அவரும் இரண்டு கைகளில் ப்ளாஸ்டிக் கேனுடன் வந்தார். அவர் பால் பிடிக்க வரவில்லை என்று பின்னரே புரிந்தது. நேராக டீசல் டாங்க் மூடியை உடைத்து, ஒரு குழாயைச் சொருகி கேன்களில் நிரப்பிக் கொண்டு கிளம்பிப் போனார்.

அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த திரேசா, “அக்கா, அவர் வீட்டுல டிராக்டர் இருக்குல்ல. அதுல ஊத்திக்கத் தான்…” என்று கிசுகிசுத்தாள்.

“சரிதான் திரேசா, டீசல் விக்கற வெலைக்கு நாமளும் புடிச்சு வித்து சம்பாதிச்சிருக்கலாம்” என்று குறைபட்டுக் கொண்டாள் கண்ணம்மா. டீசல் விலை ஏறுவதைத்தான் அவள்தான் தினமும் டி.வி.யில் பார்க்கிறாளே!

அதே நேரத்தில் பால் கொட்டும் வேகம் குறையத் தொடங்கியது. அப்படியென்றால் அதன் இருப்பும் குறைந்துவிட்டதென்று அர்த்தம். வண்டியின் மொத்த பாரமும் குறைந்ததனால், மேலே நிற்பவர் களின் நடமாட்டம் தாங்காமல் வண்டி குலுங்கத் தொடங் கியது.

பால் இருப்பு முழுமையாகத் தீர்ந்து போகும் நேரத்தில், கண்ணம்மா புருஷன் காலிக் குடங் களோடு வந்து சேர்ந்தான். அவன் வந்த நேரத்தில்,சுற்றியிருந்த பரபரப்பு நீங்கி, பால் வண்டி டயர் பரப்பி அனாதையைப் போல் தனித்துக் கிடந்தது.

“ஏய்யா விளங்காத ஆளு… ஒரு நாளக் காவது சுறுசுறுப்பா வேலை செய்யக் கூடாதா? நீ ஆடி அசஞ்சு வரதுக்குள்ளேயும் பால் தீர்ந்து போயிருச்சு பாரு” என்றாள்.

அவன் காலி வண்டியை ஒரு நோக்கு விட்டபடி, “இல்ல கண்ணம்மா… நீல பீப்பாய் முழுக்கப் பாலை ஊத்தி நிரப்பிட்டோம்.

சின்னச் சின்ன ஏனங்களிலேயும் நிரப்பி அதுக்கப்புறமும் இரண்டு குடம் பால் இருந்துச்சு. அதை எங்க ஊத்தி வெக்கிற துன்னு தெரியலை. அதுக்குள்ள ஒம் பொண்ணு இருக்கே அது நிறம் செவக்குதான்னு பாக்கறேன்னு சொல்லிக்கிட்டே ரெண்டு குடத்தையும் தலைவழியா ஊத்திக் குளிச்சிருச்சி” என்றான்.

“கேடு கெட்ட குட்டிச்சிறுக்கி. வந்து விளக்குமாறால அடிக்கிறேன்” என்றபடி கண்ணம்மா மற்றவர்களோடு வீட்டை நோக்கிப் பரபரவென்று நடக்க ஆரம்பித்தாள்.அவர்களில் சிலர் பால் நிறைந்த குடங்களைத் தலையில் சுமந்தபடி பெருமையுடன் நடந்து கொண்டிருந்தனர். தினசரிக்கு ஒரு ஆழாக்கு பால்கூட வாங்க முடியாதவர்களுக்கு அன்றைக்கு ஒரு விருந்து கிடைத்த மாதிரி. கண்ணம்மா மாதிரி ஒரு சிலர் ஏற்கெனவே பாலைச் சேகரித்து, இரண்டாம் முறைக்குத் திரும்பி வந்தவர்கள் காலிக் குடங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் செய்தி கேள்விப்பட்டு இன்னமும் எதிரில் வந்தபடி, “பால் வண்டி எங்கே கிடக்கு?” என்று சிலர் அவர்களைக் கடந்தார்கள்.

“இதென்ன ஊசி போட்டு கறக்க பசுமாடா என்ன?” என்று நக்க லாகப் பேசி அவர்களிடம் விளக்கித் திருப்பி அனுப்ப வேண்டியதாயிற்று.

வீட்டிற்குள் வந்த பிறகு தான் கண்ணம்மாவிற்கு நிலைமையைக் கணக்கிட முடிந்தது. அவள் கையிலிருந்த காலிக் குடங்களைத் தவிர வீட்டில் இருக்கும் ஏனங்கள் அனைத்தி லும் பால் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.

அவசரமாகச் சமயலறைக்குள் ஓடினாள் கண்ணம்மா. ஒரு மண் குடத்தில் மட்டும் குடிநீர் இருந்தது. ஒரு டம்ளர் நீரை அருந்தி விட்டு அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்தாள் அவள். வீட்டில், அந்தச் சிறிய மண் குடத்தைத் தவிர வேறு எங்கும் தண்ணீரில்லை.

கிராமத்தில் தினமும் மாலை வேளைகளில் அரைமணி நேரம் குழாயில் தண்ணீர் வரும். அச்சமயத்தில்தான் வீட்டின் எல்லாத் தேவை களுக்கும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். நீரில் கடுப்பு அதிகம் இருப்பதால் அதைச் சமையலுக்கும் குடிப்பதற்கும் உபயோகிக்க முடியாது. குடிக்கிற தண்ணீர் குடத்திற்கு ஐந்து ரூபாய் என்று வாசலில் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.

சாயங்காலம் தண்ணீர் வரும் வரை என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்து கொண் டிருந்தபோது பெரியவள் வந்து நின்றாள் அருகில்.

“என்னடி…?” அவளை எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“உடம்பு பிசுபிசுன்னு அரிக்குதம்மா…” என்றாள். பாலில் குளித்தவளாயிற்றே.

“மூதேவி… நல்லா சொறிஞ்சுக்க… ரத்தம் வந்தாவது தோல் செவக்குதா பாக்கலாம்.”

தண்ணீர் குடம் அவள் கண்ணில் பட்டது.

“ஐ… நான் வேணும்னா குடத்து தண்ணிய வெச்சுக் குளிச்சிக் கிறவா?”

“செருப்பால அடிப்பேன். இங்கபேண்டாக் கூட களுவதற்கு என்னடா வழின்னு யோசிச்சுக்கிட் டிருக்கேன். போடி இங் கிருந்து…” என்று துரத்தி விட்டாள்.

அதற்குள் வாசலில் அவள் கணவன் சைக்கிளை ஓட்டிச்செல்லும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள் கண்ணம்மா. ‘எங்கேயிருந்தாவது ஒரு குடம் தண்ணீர் பிடிச்சிட்டு வரச் சொல்ல லாம்’ என்ற எண்ணம். அவள் வாசலுக்கு வருவதற்கும் அவன் ஒரு குடம் நிறைய பாலை கேரியரில் எடுத்துக்கொண்டு செல்வ தற்கும் சரியாக இருந்தது.

உடனே அவளுக்குப் புரிந்து போயிற்று.

“போய்யா போ… நீ பாலை எங்கியாவது வித்துப்புட்டு சாராயக்கடையில போய் கிடக்கப் போறே… அப்பிடியே வாயில பாலை ஊத்திக்கிட்டு நீ செத்துத் தொலஞ்சா லும் எனக்கு நிம்மதிதான்” என்று உரக்கக் கத்தியதில் சமாதானம் அடைந்தாள்.

எதிர்வீட்டு மாரியம்மாள் அவளைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள். எப்போதும் சண்டைக்கென்று வருகிறவள், இன்றைக் கென்ன அதிசயமாய்? மாரியம்மாளே பேச்சை ஆரம்பித்தாள். “என்னக்கா, சிவன் கோவிலுக் குப் போயிட்டு வரலாமா?”

கண்ணம்மாவிற்கு ஒரே ஆச்சர்யம். ஒன்று, அவள் சிரித்தபடி பேசியது. இரண்டாவது,சிவன் கோவிலுக்குச் செல்லக் கூப்பிட்டது.

“என்ன அதிசயமா இருக்கு மாரியக்கா.

நீங்க கொஞ்ச நாளா செபத்துக்குப் போறீங் கன்னு கேள்விப்பட்டேன். சிவன் சாமி கனவுல சூலத்தோடு வந்து ஆடினாரோ?” என்றாள்.

“என்னவோ எங்க பரம்பரை பூராவும் செபம் பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி பேசுறீங்க? அவர்கிட்ட ரெண்டு வார்த்தை போட்டு வைப்போம்னுதான் செபம் பண்றோம். சிவன் கோவிலுக்குப் போனா ஆத்தாளுக்குப் பாலாபிஷேகம் பண்ணி அவ காதிலேயும் போடலாம்னு தான். நீங்களும் வரீங்களா?” என்றாள்.

“வீடு முழுக்கப் பால் கிடக்கு. அதை எப்படிச் செலவு செய்யறதுன்னு தெரியல. அதிலிருந்து ஒரு குடத்தை எடுத்து அம்பா ளுக்கு ஊத்தினாத்தான் என்ன அப்படின்னு சொல்றீங்களாக்கும். இப்படிச் செலவழிக்க வாவது எங்க சாமி வேண்டியிருக்கே உங்க ளுக்கு” என்றாள் கண்ணம்மா. அதே சமயம் பெரியவளுக்கு நல்ல புருஷன் கிடைக்க வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது அவளுக்கு.

‘என்னிக்குமில்லாத திருநாளா இன்னிக்கு கோவில்ல அபிஷேகத்திற்கு குடம் குடமா பாலோட எத்தினி பேர் வரப் போறாங்களோ? அம்பாளுக்கு ஜல்புதான்’ என்று நினைத்ததில் சிரிப்புத்தான் வந்தது.

“என்னக்கா… ஒண்ணும் சொல்லாம சிரிக்கிறீங்க?” மாரியம்மா அவள் சிந்தனை யைக் கலைத்தாள்.

“நல்ல யோசனைதான். அப்படியே துலுக் காணத்தம்மன் கோவிலுக்குப் போய் பாம்பு புத்துலேயும் ஒரு சொம்பு பால் ஊத்திட்டு வந்திருவோம். அதையும் ஏன் விட்டு வைக்கணும்?”

வீட்டிற்குள் திரும்புமுன் திடீர் தண்ணீர் தட்டுப்பாடு ஞாபகத்திற்கு வந்தது.

“மாரியக்கா… பாலைப் புடிச்சு வெக்கி றோம்னு எல்லா குடத்தையும் கவுத்திப்புட் டோம். வீட்டுல தண்ணி இல்லை. கிராமத் தலைவர் கிட்டப் போயி இன்னிக்கு மட்டும் ஒரு பத்து நிமிசமாவது தண்ணிவிடச்

சொல்லலாமா?” என்றாள்.

“அதையேன் கேக்குறீங்க. நம்ம பொம்ப ளைங்க நாலஞ்சு பேராய் போய் கேட்டுட்டு வந்திட்டாங்க. அதுக்கு, ‘அரைச் சொம்பு பாலைக் குடிச்சாலே பேதியாயிரும். அப்படியே வெச்சி நேரமாச்சுன்னா நாறிப் போயிடும். இதுகூடத் தெரியாம வீடு முழுக்கப் பாலை சேகரிச்சு வெச்சுருக்கிறீங்க’ அப்படின்னு சத்தம் போட்டாராம். அதனால தண்ணி எப்பவும் போல சாயங்காலம்தான் என்று சொல்லி விரட்டி விட்டுட்டாராம்.”

“எல்லாம் நம்ம தலையெழுத்து…” என்றபடி கோவிலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவளை மகன் ஓடிவந்து அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டான்.

“என்னடா… அம்மாக்காரி மேல திடீர் பாசம். கண்ணு வேற சிவந்திருக்கு. எதுக் காச்சும் அழுதியா?” என்றபடி அவனது கேசத்தைக் கோதிவிட்டாள்.

“எங்க தளபதி படம் அடுத்த வாரந்தான் வருதாம்” என்றான்.

“அதுக்கு?”

“இல்லம்மா. இன்னிக்குப் படம் வந்திருந்தா நானும் ஒரு குடம் பாலை எடுத்து அவரோட கட்அவுட்டுக்கு ஊத்தி ரகள பண்ணியிருப் பேன்ல…” என்றான்.

“அடப்போடா… உன் கவலை உனக்கு… என் கவலை எனக்கு” என்று செல்லமாய் கடிந்து கொண்டாள்.

இன்னும் சில மணி நேரங்களில் சேகரித்து வைத்த பால் கெட்டுப்போகத் தொடங்கினால் வீடு முழுக்க நாறும். கிராமமே நாறப் போகிறது.

‘பால் வண்டிக்குப் பதிலா குடிதண்ணி லாரி விழுந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்’ என்று நினைப்பு ஓடியது.

குடம் இடுப்பிலும், சொம்பு கையிலுமாகக் கண்ணம்மா கோவிலுக்குக் கிளம்பினாள்.

நேரம் பார்த்து சாம்பல் நிற பூனை எப்போதும் போல் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்தது. எப்போதும் அதை விரட்டி அடிக்கும் கண்ணம்மா அதைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பாத்திரத்தில் சொம்பிலிருந்த பாலை நிரப்பி அதன் முன்னால் வைத்தாள்.

“திருட்டுத்தனமா குடிக்க வேண்டாம். அந்த வேலையை நாங்களே செஞ்சுட்டோம் இன்னிக்கு. நல்லா குடி” என்றாள்.

அவளைச் சந்தேகத்தோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு, பாலை முகர்ந்தது. மீண்டும் அவளைப் பார்த்துவிட்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்தது.

“என்னத்தைப் பாக்குற? எல்லா வீட்டுலே யும் பாலைக் குடிக்க வெச்சுட்டாங்களா? எங்க வீட்டுக்கு முதல்ல வந்திருக்கலாமில்ல. சனியனே. போ வெளியே” என்றபடி கோபத் துடன் கையில் கிடைத்த பாத்திரத்தைத் தூக்கி அதன் மேல் எறிந்தாள்.

பூனை விருட்டென்று வெளியில் பாய்ந்து ஓடியது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அருள்வாக்கு

0
விநாயகர் வழிபாடு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ‘தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல்,...

உங்கள் நூலகத்துக்குப் பெருமை சேர்க்கும்!

0
நூல் அறிமுகம்,நறுக்குத் தெறிப்புகள் அனுராதா கிருஷ்ணசாமி,திருமூலன் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி, அவர் எழுதிய சிறுகதைகளில், சிறந்த இருபது கதைகளடங்கிய தொகுப்பு ஒன்றை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் தேர்வையும் தொகுப்பையும் மாலன் செய்திருக்கிறார். தொகுப்பில்...

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

0
முகநூல் பக்கம் எழுத்தும் ஓவியமும் ராஜன் ஒரு ஓவியனின் டைரியிலிருந்து... பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை. இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது,...

நியாயமா அய்யா?

0
விஜய்டாலி ஜெகநாதன் வெங்கட் “வாடா... வா...” என்று அவனை வரவேற் றேன். அவனுடைய மகனைப் பார்த்து, “மதன், நல்லாப் படிக்கிறியா?” என்று வினவினேன். அவன், “ஆமாம்” என்று தலையாட்டினான். “என்ன சுப்பு, திடீர் வருகை?” என்று வினவினேன். “ஒரு...

ஒரு பாடல் செட்டுக்கு 2 கோடி செலவு செய்யப்பட்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்...!12 எஸ்.சந்திரமௌலி ஐஸ்வர்யா ராயின் முதல் படமான ‘அவுர் பியார் ஓகையா’விலிருந்து விலகி, இரண்டு வாரங்கள் இருக்கும், மும்பையிலிருந்து மிகப் பிரபல மான வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ரத்தன் ஜெயின் டெலிபோன் செய்தார். அடுத்து அவர்கள்...