பூனை ரோமம் போயே போச்சு!

பூனை ரோமம் போயே போச்சு!
Published on

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க

குப்பைமேனி இலையையும் வேப்பந் துளிரையும் கைப்பிடி அளவு எடுத்து, அதோடு கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்து, அக்கலவையில் சிறிது பன்னீர் ஊற்றிக் குழைத்து இரவு தூங்கும் முன் பூனை ரோமங்கள் இருக்கும் இடத்தில் தடவி, மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்துவந்தால் நாளடைவில் பூனை ரோமங்கள் காணாமல் போகும்.

* கருந்துசி கைப்பிடி அளவு, மாதுளம் பழத்தோல் இரண்டையும் இரண்டு நாட்களுக்கு நிழலில் உலர்த்தி நன்றாக உலர்ந்ததும் இவற்றுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, இரவு தூங்கும் முன் முட்டையின் வெள்ளைக் கருவை இந்தப் பொடியோடு குழைத்து ரோமப் பகுதிகளில் தடவி, மறுநாள் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் பூனை ரோமங்கள் நீங்கும். சருமம் பளபளக்கும்.

* கடலை மாவு, பயத்த மாவு, சீயக்காய்ப் பொடி மூன்றையும் சம அளவு எடுத்து, இவற்றுடன் இரண்டு எலுமிச்சை பழத்தோல், கைப்பிடி வேப்பங் கொழுந்து சேர்த்து அரைக்கவும். இக்கலவையில் மூன்றில் ஒரு பங்கு கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பூசி, ஊறவைத்து குளித்தால் பூனை ரோமம் படிப்படியாகக் குறையும். சருமம் மென்மையாகும்.
ஆர்.சாந்தா, சென்னை

—————————–

தலைமுடி பிரச்னைக்குத் தலையாய தீர்வு!

வெந்தயத்தை அரைத்து தலையில் நன்றாகத் தடவி தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும். தலை முடியும் உதிராது.

* வேப்பிலை இரண்டு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து, அந்த நீரை ஒரு நாள் கழித்து தலை மூழ்கி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரம் கழித்து தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி உதிர்வது விரைவில் நின்று விடும்.

* கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலைக்குத் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இளநரை மறைந்து கருமை நிறத்திற்கு மாறும்.

* கசகசா 25 கிராம், அதிமதுரம் 25 கிராம் இரண்டையும் கலந்து மைய பொடி செய்து, குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு பசும்பாலில் போட்டுப் பிசைந்து தலைக்குத் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு குளித்து வந்தால் சில நாட்களிலேயே முடி கறுப்பாக மாறும்.

* தேவையான அளவு கறிவேப்பிலை அரைத்து, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வர முடி மிக நன்றாக வளரும்.

* மரிக்கொழுந்து இலை, நிலாவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து தலைக்குத் தடவி வந்தால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, பின் வெயிலில் காய வைத்து தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளரத் தொடங்கிவிடும்.

* தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மாறி விடும்.

* முளைக் கீரையை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை நீங்கி விடும்.

* கோபுரந்தாங்கி இலைச் சாறுடன் சமமாக நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி தினமும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர, முடி உதிர்வது நின்றே விடும்.

* எலுமிச்சைப் பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் கால் லிட்டர், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்துக் கொண்டு, அதை தினமும் தலைக்குத் தடவி வர, தலை முடி நீண்டு, அடர்த்தியாக வளரும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர, முடி கறுமையாகும்.

* ஆலமரத்தின் இளம் பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்துத் தூள் செய்து, தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி நன்றாக ஊற வைத்து, தலைக்குத் தடவி வர முடி கறுப்பாக வளரும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் பொடியாக்கி, இரவில் தண்ணீரில் காய்ச்சி, காலை வரை ஊற வைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வர, முடி உதிர்வது அடியோடு நிற்கும்.
ஆர்.உமா ரவிந்திரன், ஈரோடு

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com