மனிதம்

மனிதம்
Published on
முகநூல் பக்கம்
குப்புசாமி கணேசன்

பாரிமுனையிலிருந்து ராயப்பேட்டை செல்வதற்கு அந்த ஆட்டோக்காரர் ₹150 கேட்டார். நான் ₹100ல் இருந்தேன். பிறகு ₹120க்கு உடன் பட்டு, கிளம்பி மேம்பாலத்தின் மீது சென்றுகொண் டிருந்தபோது அவர் சட்டென்று வேகத்தைக் குறைத்து நடைபாதை ஓரத்தில் ஆட்டோவை நிறுத்தியபோதுதான் அங்கே வெயில் சூடு உறைக்காமல் ஒருவன் விழுந்து கிடப்பதைக் கவனித்தேன். குடித்து விட்டு விழுந்திருக்கிறான் என்று நினைத்தேன். இல்லையென்று பிறகு தெரிந்தது.

ஆட்டோ டிரைவர் என்னிடம், "உங்க பின்னால மீல்ஸ் பாக்கெட் இருக்கும், அதை எடுங்க சார்" என்றார்.

சீட்டுக்குப் பின்னால் இருந்த அந்தச் சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு அவனிடம் சென்று தட்டி எழுப்பி னார். அவன் எழவில்லை. மீண்டும் ஆட்டோவுக்கு வந்து அவருடைய இருக்கைக்கு பின்னாலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்து அவனை எழுப்பி உட்கார வைத்தார். "டேய் கம்னாட்டி… இதோ சாப்பாடு இருக்கு, துண்றா" என்று அவனை உலுக்கினார். அவன் தலை ஆடிக்கொண்டு இருந்தது. பாட்டிலைத் திறந்து தண்ணீர் புகட்டினார். என் பக்கம் திரும்பி "ஃபைவ் மினிட்ஸ் சார். வந்துர்ரேன்" என்றார். பொட்டலத் தைப் பிரித்து அவன் முன்னால் வைத்தார். சாம்பார், ரசம், பொரியல், கூட்டு எல்லாம் தனித்தனியாக பிளாஸ்டிக் கப்களில் இருந்தன.

கடந்து சென்றுகொண்டிருந்த வேறு எவனோ ஒருவன் அருகில் வந்து "நீ போ அண்ணா. நான் பாத்துக்கிறேன்" என்றவனை விரட்டினார்.

அந்தப் கப்புகளைப் பிரித்து சோற்றில் சாம்பாரை ஊற்றிப் பிசைந்தார். அவன் இலையைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்ததும்தான் எழுந்து வந்தார்.

ஆட்டோவைக் கிளப்பியவரிடம், "உங்களுக்கு தெரிஞ்சவரா?" என்று கேட்டேன். "யாரோ எவனோ… யாரு கண்டா… கொஞ்சம் புத்தி மாறாட்டம் போலத் தெரியுது. பசியில உயுந்து கிடக்கிறான். நான் தினமும் மதியம் எங்கியாவது நிறுத்தி சாப்பிடறப்போ மூணு பேருக்கு பொட்டலம் வாங்கிடுவேன் சார். இந்த மாரி ரோட்ல உயுந்திருக்கவன் உட்கார்ந்திருக்கவனா பாத்து குட்த்துருவேன். இன்னிக்கு ரெண்டு பேருக்கு குட்த்துட்டேன். இவன் மூணாவது. நம்மால முடிஞ்சது அவ்ளோதான்…" என்றார்.

இந்த மனிதரிடம்தான் முப்பது ரூபாய்க்கு பேரம் பேசியிருக்கிறேன். வெட்கமாக இருந்தது.

Kuppuswamy Ganesan

முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com