மரபுகளைக் காப்போம்!

மரபுகளைக் காப்போம்!
Published on

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் நமது ஜனநாயகம் நாடாளுமன்றத்தால் எந்நாளும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தீர்க்கதரிசனத்துடன் பல நாடாளுமன்ற விதிகளை வரையறுத்திருக்கிறார்கள்.

இந்த விதிகளின் அடிப்படையில் மசோதாக்களான விதிமுறைகளும் சட்டமியற்றும் நடைமுறையையே தவறில்லாமல் மேற்கொள்வதற்கான வழிமுறைகளும் நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால் அண்மைக்காலமாக நமது நாடாளுமன்றம் இயங்குவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. நடந்து முடிந்துள்ள மழைக்காலக் கூட்டத் தொடரில் 15 சட்ட வரைவுகள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 14 சட்டவரைவுகள் மக்களவையில் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே விவாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 22 கூட்டத் தொடர்களில் மக்களவையிலிருந்து எந்தவொரு சட்டவரைவும் தெரிவுக் குழுவுக்கு அனுப்பி, மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

எந்த ஒரு மசோதாவும் விவாதிக்கப்பட்டு இயற்றப்படுவதாலேயே ஒவ்வொரு சட்டமும் அதற்கான தகுதியைப் பெறுகிறது. விவாதங்களில் ஒலிப்பது மக்களின் குரல். இதைக் கவனத்தில் கொண்டுதான் துறைசார் வல்லுநர்கள், அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கருத்துகளைப் பெற்று உருவாக்கப்படும் தன்வரைவுகள் நேரடியாகச் சட்டமாகிவிடக்கூடாது என்ற கருத்தில்தான் அவை முன்மொழியப்பட்டவுடன் சட்டவரைவுகளைத் தெரிவுக்குழு அல்லது இரு அவைகளின் கூட்டுக்குழு மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற விதிகள் உருவாக்கப்பட்டு அதைக் கோரும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் விடுபட்டுப் போன விஷயங்கள் விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டு வரைவுகள் சட்டமாகும் முன் திருத்தவும் வாய்ப்புண்டு.

ஆனால் அண்மைக்காலமாக மோடி அரசு எதிர்க்கட்சிகளின் அமளியைக் காரணம் காட்டி உரிய விவாதங்கள் இல்லாமலும் தெரிவுக் குழுக்களின் மறு ஆய்வுகளைத் தவிர்த்தும், பெரும்பான்மையின் அடிப்படையில் மட்டுமே சட்டங்களை நிறைவேற்றும் போக்கைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டும் இதுவரை நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களிலும் ஆளும் கட்சி அவசர அவசரமாகக் குரல் வாக்கெடுப்பு மூலமாகச் சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறது. இப்படிச் சட்டமியற்றுவது அவற்றின் நோக்கத் தையே சிதைப்பதாகும். அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் ஆளும் கட்சி ஜனநாயக மாண்புகளையும் விதிகளையும் மீறும் போக்குக் கண்டிக்கத்தக்கது,

நாடாளுமன்றம் என்பது பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கியதே என்பதை ஆளும் கட்சி உணர வேண்டும். எதிர்க்கட்சிகளும் குறிப்பிட்ட ஒரு விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, அதை நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும்போது அந்த நோக்கம் நிறைவேறப் போராடவேண்டும். வெறும் கோஷங்களை எழுப்பி அவைக் கூட்டங்களில் செய்யப்படும் அமளி, ஆளும் கட்சியினருக்கு விவாதங்களைத் தட்டிக்கழிக்க வாய்ப்பாகிவிடும். எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைகளை விட்டுக்கொடுக்காமலேயே விவாதங்களிலும் பங்கெடுப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

ஆளும் கட்சியும், அவர்களுக்கு அவையில் பெரும்பான்மை என்ற ஆயுதம் இருந்தாலும் சட்டங்கள் இயற்றும்போது விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் குரலையும் கேட்கவேண்டும் என்ற ஜனநாயக மரபைக் காப்பாற்ற வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com