மஹாளயம் – கர்ணனே காரணம்

மஹாளயம் – கர்ணனே காரணம்
Published on

-ஆர். மீனலதா

காபாரதத்தின் கர்ணனே மஹாளயத்திற்குக் காரணமென பலராலும் கூறப்படுகிறது. கர்ணனின் இறப்பிற்குப் பின் அவன் செய்த புண்ணிய பலன்கள் காரணமாக, உரிய மரியாதைகளோடு எமதர்மராஜன் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துக்கொண்டார்.
சொர்க்கத்திற்குச் சென்ற கர்ணனுக்கு பசி எடுக்க, "உணவு கிடைக்குமிடம் எங்கே?'' எனக் கேட்கையில், சொர்க்கவாசிகள் திகைப்படைந்து, "இங்கே பசியே எடுக்காது; அதனால் உணவு தேவைப்படாது" என்று கூறினார்கள்.
கர்ணனுக்கோ பசி! நடப்பவற்றை கவனித்துக்கொண்டிருந்த தேவகுரு பிரகஸ்பதி, தனது ஆழ்ந்த தியானத்தின் மூலம் இதற்கான விடையைக் கண்டறிந்தார்.
கர்ணனின் ஆட்காட்டி விரலைச் சுவைக்கச் சொல்ல, அவரும் அப்படியே செய்ய, பசி மறைந்து விட்டது.
தேவ குருவிடம் காரணம் கேட்கையில், "நீ (கர்ணன்) பிறப்பால் வள்ளலாக இருந்து, தான தருமங்கள் செய்தபோதிலும், அன்னதானம் செய்தது கிடையாது. இதன் காரணமாகவே உனக்குப் பசி உணரப்பட்டது.
மேலும், ஆட்காட்டி விரலைச் சுவைக்க, பசி மறைந்தது எப்படி என்றால் ஒருமுறை உன்னிடம் ஏழை பிராமணர் ஒருவர் வந்து உணவு கேட்டபோது, மறுத்து, பிறகு பொதுவாக அன்னதானம் நடக்கும் இடத்தை ஆட்காட்டி விரலினால் சுட்டிக்காட்டியதின் புண்ணியம். அதுவே உனது பசியைத் தீர்த்தது" என்று விளக்கமாகக் கூறினார்.


இதனால் கர்ணன் மிகவும் வருத்தப்பட்டு, பூலோகம் சென்று 15 நாட்கள் அன்னதானம் செய்து வர அனுமதி கேட்க, எமதர்மராஜரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
சொன்ன சொல் தவறாமல், 15 நாட்கள் சென்றபின் கர்ணன் திரும்பி வந்ததால், மகிழ்ந்த எமதர்மர், அவரை ஒரு வரம் கேட்கச் சொல்ல, கர்ணனும் கேட்டான்.
"மஹாளய பட்சம் 15 நாட்களும், மக்கள் முன்னோர்களை அன்புடன் வணங்கி வழிபடுதல்; திதி கொடுத்தல்; அன்னதானம் போன்றவைகளை செய்தால், தோஷங்கள் நீங்கி புண்ணியம் கிடைப்பதோடு, கர்ம வினைகளால் இடையே திரிசங்கு சொர்க்கமாக தத்தளித்துக் கொண்டிருக் கும் முன்னோர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்க வேண்டும்'' என்பதாகும்.
எமதர்மராஜனும் மனமகிழ்ந்து வரமருள, மஹாளயம் ஆரம்பமானது.
மஹாளய பட்சத்தில் எமதர்மராஜன், கர்ணன், தேவகுரு ஆகியோர்களை யும் மனதில் நினைத்து முடிந்த அளவு தான, தர்மங்களைச் செய்து புண்ணியம் பெறலாம்.
அள்ளிக் கொடுக்க இயலவில்லையென்றாலும் இருப்பதில் சிறிது கிள்ளிக் கொடுக்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com