மஹாளய மாதம்

மஹாளய மாதம்
Published on

– சியாமளா சுவாமிநாதன், திருவனந்தபுரம்

புரட்டாசி மாதம் பௌர்ணமியிலிருந்து 15 நாட்களை, `மஹாளயம்` அல்லது `மஹாளய பக்ஷம்` என்று சொல்கிறோம். 'மஹாளயம்' என்றால் மஹான் களின் இருப்பிடம் என்று அர்த்தம். இறந்துபோன முன்னோர்கள் மஹாளய பக்ஷம் 15 நாட்களும் (21.9.2021 முதல் 6.10.2021) பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான், இந்த 15 நாட்களில் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற பூஜை, ஹோமங்கள் அல்லது தெய்வ ஆராதனைகள் செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம். இந்த பக்ஷத்தில் காசிக்குச் சென்று பிதுர் தர்ப்பணம் செய்வது உத்தமம்.
எதற்காக காசியில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்? காசிக்கு ஏன் அத்தனை மகத்துவம்?
ஒரு முறை சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவருடைய கையில் பிரம்மஹத்தியின் தலையும், நிழல்போல அந்த தோஷமும் அவரைத் தொடர்ந்து வந்தது. தோஷம் போக சிவன் பல இடங்களைக் கடந்து வருகிறார். அலகாபாதில் காலை வைத்ததும் பிரம்மஹத்தி நிழல் அவரை விட்டு விலகுகிறது. சிவனுக்கு மனதில் நிம்மதி பிறக்கிறது. அந்த இடத்தைக் கண் குளிர பார்த்த பின் நடந்து நடந்து காசிக்கு வந்து சேர்ந்தார். அப்போது பிரம்மஹத்தி தலையும் அவரை விட்டு மறைந்தது. அங்கே கங்கை ஓடுவதைக் கண்ட சிவனுக்கு அதிக அமைதியும் சந்தோஷமும் ஏற்படுகிறது. உடனே அங்கே தங்கியிருந்த விஷ்ணுவிடம் தமக்கு இடம் கேட்க, விஷ்ணு அங்கிருந்து விலகி, சிவனுக்கு இடம் தருகிறார்.
அங்குள்ள 64 'காட்'களிலும் பூத கணங்கள் போய் தங்கிவிட, சிவன் பூத கணங்களுடன் நிரந்தரமாக காசியில் தங்கிவிட்டதாக ஐதீகம். அங்குள்ள மணல் துகள்கள் கூட சிவலிங்கமாகக் கருதப்படுகிறது. கங்கா மாதாவிற்கு கீழே 236 நதிகள் அங்கே மறைந்து ஓடுவதாக ஐதீகம். இத்தனை மகத்துவம் நிறைந்தது காசி க்ஷேத்ரம். 'காசியில் இறந்தால் முக்தி' என்று கூறுவதன் பின்னால் இறக்கும் தருவாயில் சிவனே அந்த ஜீவனின் காதில், 'ராம நாமம்' என்ற கர்ண மந்திரத்தைக் கூறி மோட்சத்திற்கு அனுப்புவதாக நம்பிக்கை. இதனால் காசியில் பிதுர் தர்ப்பணம் செய்வது மிக மிகச் சிறந்தது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com