0,00 INR

No products in the cart.

முகம் மாறும் தமிழ் சினிமா!

அட்டைப்படக் கட்டுரை
எஸ்.சந்திரமௌலி

கொ.மு. என்னும் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்திலேயே தமிழ் சினிமா உட்கட்சிப் பூசல், வெளிக்கட்சிப் பூசல், மேல், கீழ் கட்சிப் பூசல் எனப் பல்வேறுவிதமான பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததது.

கொரோனா காலத்திலோ லாக்டவுன் என்ற ராட்சசனின் அதிரடி அட்டாக்கில் தமிழ் சினிமா ஐ.சி.யூ.வுக்கே போய்விட்டது. இது ஒரு பக்கம் என்றாலும், இன்னொரு பக்கம், ஓ.டி.டி. தளத்தின் அபரிமிதமான வளர்ச்சியால், தமிழ் சினிமாவின் முகத்தில் ஒரு மாற்றத்தையும், லேசான புன்னகைக் கீற்றையும் பார்க்க முடிகிறது.

இன்று இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் இரண்டு, இரண்டரை மணி நேரத்துக்கு ஒரே கதையைப் படமாக எடுக்காமல், நான்கைந்து கதைகளைத் தொகுத்து வழங்குவது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இந்தியில் வெளியான லவ் ஸ்டோரிஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்றவை ஓ.டி.டி. தளத்தின் மூலமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றன.

இப்படி நாலைந்து கதைகளின் தொகுப் பினை ‘ஆந்தாலஜி’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஓ.டி.டி. தளங்கள் அறிமுகமாவதற்கு முன்பாகவே, 2009ல், மலையாளத்தில் ‘கேரளா கஃபே’ என்ற தலைப்பில் 10 இயக்குநர்கள் இயக்கிய தனித் தனிக் கதைகள் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டினைப் பெற்றதை தீவிர சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கோலிவுட்டிலும் ஓ.டி.டி. தளங்கள் மூலமாக இப்போது இத்தகைய முயற்சிகள் நடக்கின்றன. சில மாதங்களுக்கு முன் ‘பாவக் கதைகள்’ என்ற கதைத் தொகுப்பு வெளியானது. சற்றே எதிர் மறையான கதை அம்சமும், கதாபாத்திரங்களும் கொண்ட அவற்றை சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றி மாறன் ஆகியோர் இயக்கினார்கள்.

அண்மையில், கொரோனாவில் துவண்டு போன தமிழ் சினிமாவை கைகொடுத்துத் தூக்கிவிடும் நோக்கத்துடன் மணிரத்னம் – ஜயேந்திரா முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸில் ‘நவரசா’ என்ற ஒன்பது கதைகளின் தொகுப்பு வெளியானது. அதில் ஒன்பது இயக்குநர்கள் நவரசங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பல் வேறு கதைகளைக் கையாண்டிருந்தார்கள்.

அதனையடுத்து, இயக்குநர் சிம்புதேவன், இன்னும் ஒரு புது முயற்சி செய்த படம் ‘கசடதபற’. இதனை ஆறு கதைகளின் தொகுப்பு என்று சொல்லலாம் என்றாலும், படம் பார்த்து முடிக்கும்போது ஒரே படத்தைப் பார்த்த உணர்வினை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில், முகம் மாறுகிறதா தமிழ் சினிமா? கோலிவுட் புது கெட்-அப்பிற்குத் தயாராகி வருகிறதா? என்ற கேள்வியையும் எழுந்திருக்கிறது.

“மாற்றம் என்பதுதானே இந்த உலகத்தில் நிலையானது? தமிழ் சினிமா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? 75 வருட கால வரலாற்றில் தமிழ் சினிமாவில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் நீட்சிதான் தற்போது நாம் பார்க்கும் புது முயற்சிகள். இது வரவேற்கத்தக்கது” என்றார் இயக்குநர் வஸந்த் சாய்.

அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘நவரசா’ கதைத் தொகுப்புப் படங்களில் ‘பாயசம்’ என்ற படத்தை இயக்கியவர் இவர். பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய கதைக்குத் திரைக்கதை அமைத்து, இவர் இயக்கிய பாயசம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“எனது குருநாதர் டைரக்டர் பாலசந்தர் இப்படி ஒரு புதுமையை 1990ஆம் ஆண்டிலேயே செய்துவிட்டார். ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்த இரு எழுத்தாளர்களின் கதைகளை இடைவேளை வரை ஒரு கதை, அதன் பின் இன்னொன்று என்று எடுத்திருந்தார்.

‘முதல் படம் முடிந்து இடைவேளை யின்போது ஆடியன்ஸ் போய்விடுவார்கள், இரண்டாவது படத்துக்கு உட்காரமாட்டார்கள்’ என்று சொன்னார்கள். வர்த்தக ரீதியாகப் பெரிய வெற்றி இல்லை என்றாலும், தேசியத் திரைப்பட விழாவில் சமூகப் பிரச்னையை எடுத்துச் சொன்னதற்காக ‘ஒரு வீடு; இரு வாசல்’ படம் விருது பெற் றது. நான் இயக்கியிருக்கும் ‘சிவரஞ்சனியும் இன் னும் சில பெண்களும்’ என்ற படமும் ஒரு ஆந்தாலஜி முயற்சிதான். நான்கு கதைகள் கொண்ட இந்தப் படம் விரைவில் சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது” என்றார் வஸந்த் சாய்.

‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் இதுவரை உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளைக் குவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

“இது பாஸ்ட் ஃபுட் கலாசார காலம். எனவே பொழுதுபோக்கு என்றாலும், அதை நிதானமாக உட்கார்ந்து ரசிக்கவேண்டும் என்ற மனோபாவம் மாறிவிட்டது. ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும், வெப் சீரிஸ் கதைகளில், காட்சிகளில் ஏராளமாகத் திடீர் திருப்பங்கள் வைத்து, தொடர்ந்து ரசிகர்களை இழுத்துப் பிடித்து வைத்திருக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள்.

அதை வைத்துப் பார்க்கும்போது, தனித்தனிக் கதைகளைத் தொகுப்பாக இணைத்து வழங்கும் ஆந்தாலஜிகளுக்கு ஓ.டி.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், எல்லா ரசிகர்களும், எல்லா கதைகளையும் முழுமையாக உட்கார்ந்து பார்ப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. தனக்குப் பிடித்த இயக்குநர், நடிகர், சப்ஜெக்ட் என்று தேர்ந்தெடுத்துப் பார்த்துவிட்டால், அனைத்துக்குமான பார்வை யாளர்கள் கிடைக்காமல் போய் விடுமே!” என்றார் இயக்குநர் சிம்பு தேவன்.

இவர் சொல்லும் இன்னொரு கருத்து: “இத்தகைய ஆந்தாலஜி ரகங்கள், திரையுலகில் இயக்கம், நடிப்பு மற்றும் இதரத் தொழில்நுட்ப வாய்ப்புகளை அதிகமானவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் என்பது நிச்சயம்.

எந்த ஒரு விஷயத்தையும் விஷுவல் மீடியம் மூலமாக அரை மணி நேரத்திலும் சொல்லலாம்; இரண்டு மணி நேரத்திலும் சொல்லலாம். ஆனால், ஒரு இயக்குநர் குறைந்த நேரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் அதிகமாக உழைக்க வேண்டும். ரத்தினச்சுருக்கமாக, சொல்ல வந்ததைச் சொல்லி, தாக்கம் ஏற்படுத்த வேண்டும். ஒரு முழு நேரப் படம் எடுப்பதைவிட, ஆந்தாலஜி வகையில் அரை மணியில் படம் எடுப்பது சவாலானது” என்றார் இயக்குநர் வஸந்த் சாய்.

‘ஆந்தாலஜி’ என்ற வகையில் ஒரு சிலர் படம் எடுத்து ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி இருக் கிறது. அவற்றுக்குக் கலவையான ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. உடனே, இனிமேல் தமிழ் சினிமாவில் டிரெண்ட் இதுதான் என்று நாம் முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

‘நவரசா’ என்று ஒன்பது படங்களின் தொகுப்பினைத் தயாரித்த டைரக்டர் மணி ரத்னம் இப்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். கல்கி எழுதிய ஐந்து பாகங்கள் கொண்ட கதையை சினிமாவில் இரண்டு பாகங்களாக அவர் எடுக்கிறார். முன்பு ‘பாகுபலி’, இப்போது ‘பொன்னியின் செல்வன்’.

இனிமேல் இரண்டு பாகம் சினிமாதான் டிரெண்டு என்று சொல்லிவிட முடியுமா என்ன? கொரோனா, லாக்டவுன் என்று திரையுலகம் சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது. தியேட்டர்களைத் திறக்க அரசாங்கம் அனுமதி கொடுத்தும்கூட மக்கள் தியேட்டருக்கு வரவில்லை. இப்படிப்பட்ட சவாலான சமயத்தில் திரை உலகம் மீண்டும் எழுந்து நிற்க பலவிதமான முயற்சிகள் தேவையாகிறது. அதில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.

எனவே, இனிமேல் மக்கள் முழு நீளப் படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்க மாட்டார்கள். இனி ஓ.டி.டி. தான்; ஆந்தாலஜிதான் என்றெல்லாம் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார் நடிகரும், சினிமா ஆராய்ச்சியாளருமான மோகன் ராமன்.

“ரசிகர்களைப் பொறுத்தவரை, ஒரு படம் அரைமணி நேரப் படமா, இரண்டரை மணி நேரப் படமா என் பதை எல்லாம் பார்ப்பதில்லை. அதில் சொல் லப்பட்டிருக்கும் விஷயம், சொல்லி இருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கிறதா? ரசிகர் களோடு, இயக்குநர் தன் படத்தின் மூலமாக ‘கனெக்ட்’ ஆகிறாரா? என்பதுதான் முக்கியம்.

ரசிகர்கள் கதையில் ஒன்றிப் போய், லாஜிக் இல்லாதுபோனா லும்கூட, கேள்வி எழுப்பாமல் அதை ஏற்றுக்கொண்டுவிட்டால் அதுதான் சக்ஸஸ்.

இது, தியேட்டரில் வெளியாகும் படம், ஓ.டி.டி. ரிலீஸ், அறை மணி நேர ஆந்தாலஜி, முழுநீளத் திரைப்படம் எல்லா வற்றுக்கும் பொருந்தும்” என்று கருத்துத் தெரிவிக்கிறார் திரைப்பட மக்கள் தொடர் பாளரான நிகில் முருகன்.

மக்கள் விருப்பம்தான் எல்லாவற்றுக்கும் பதில்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அருள்வாக்கு

0
விநாயகர் வழிபாடு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ‘தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல்,...

உங்கள் நூலகத்துக்குப் பெருமை சேர்க்கும்!

0
நூல் அறிமுகம்,நறுக்குத் தெறிப்புகள் அனுராதா கிருஷ்ணசாமி,திருமூலன் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி, அவர் எழுதிய சிறுகதைகளில், சிறந்த இருபது கதைகளடங்கிய தொகுப்பு ஒன்றை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் தேர்வையும் தொகுப்பையும் மாலன் செய்திருக்கிறார். தொகுப்பில்...

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

0
முகநூல் பக்கம் எழுத்தும் ஓவியமும் ராஜன் ஒரு ஓவியனின் டைரியிலிருந்து... பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை. இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது,...

பாலாபிஷேகம்

0
தமிழ் ஹெச்.என்.ஹரிஹரன் “மெய்யாலுமா சொல்றே..?” காலி பிளாஸ்டிக் குடங்களின் கழுத்திற்குள் கையை நுழைத்து பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக திரேசாவைப் பின் தொடர்ந்தாள் கண்ணம்மா. “ஆமாக்கா.. விடிகார்த்தால டமார்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான் நானும் புரண்டு படுத்தேனா... எப்பவும்...

நியாயமா அய்யா?

0
விஜய்டாலி ஜெகநாதன் வெங்கட் “வாடா... வா...” என்று அவனை வரவேற் றேன். அவனுடைய மகனைப் பார்த்து, “மதன், நல்லாப் படிக்கிறியா?” என்று வினவினேன். அவன், “ஆமாம்” என்று தலையாட்டினான். “என்ன சுப்பு, திடீர் வருகை?” என்று வினவினேன். “ஒரு...