மூலிகை சுண்டல்

0
368

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க

தேவையானவை: முளை கட்டிய கொண்டை கடலை 1 கப், துளசி, புதினா – தலா ஒரு கப், வெற்றிலை – இரண்டு, பூண்டு – 3 பல், இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – 10, கடுகு, பெருங்காயம் – தலா ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: துளசி, இஞ்சி, பூண்டு, ஒமம், புதினா, வெற்றிலை, மிளகு, உப்பு ஆகியவற்றை அரைத்து, முளை கட்டிய கொண்டைக் கடலையுடன் சேர்த்து குக்கரில் வேக விடவும். வெந் ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். மருத்துவ குணம் அடங்கிய சுண்டல் ரெடி.
– எம். வசந்தா, சென்னை

————–

கருஞ்சீரக டீ

 

கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, தலைமுடி உதிர்தலைத் தடுப்பது, சருமப் பிரச்னை, உடல் எடையைக் குறைப்பது, சிறுநீரகப் பிரச்சனை, இதய நோய்கள் வராமல் தடுப்பது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என பல பிரச்னைகளுக்கும் கருஞ்சீரகம் தீர்வாக அமையும்.

தேவையான பொருள்கள்: கருஞ்சீரகம் – 2 ஸ்பூன், புதினா – 1 கைப் பிடியளவு, இஞ்சி – 1 துண்டு, தேன் – 2 ஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்தும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.

கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள். புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.

புதினாவைச் சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ ரெடி.
– கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி