0,00 INR

No products in the cart.

யாகாவாராயினும் நாகாக்க….

கட்டுரை: ஜி.எஸ்.எஸ்

செபாஸ்டியன் மைக்கேல் என்பவரின் சுவை அரும்புகளை பத்து லட்சம் டாலர் தொகைக்கு இன்ஷ்யூர் செய்திருக்கிறது அவரைப் பணிக்கு அமர்த்தி இருக்கும், ‘டெட்லி’என்ற பிரபல பிரிட்டிஷ் தேயிலை தயாரிப்பு நிறுவனம். எதற்காக அவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு ஊழியரின் நாவை காப்பீடு செய்ய வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பெயர் கொண்ட தேயிலைத்தூளை நீங்கள் ஆசையுடன் வாங்கி அருந்துகிறீர்கள் என்றால், இதற்கு முன்பு அதன் சுவை எப்படி இருந்ததோ அதேபோல இப்போது நீங்கள் வாங்கும் தேயிலைத்தூளும் அதே சுவையை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அர்த் தம். ஆனால், இது நடைமுறையில் சுலபத்தில் சாத்தியமாகும் ஒரு விஷயமல்ல.

ஒவ்வொரு தேயிலையின் மணம் மற்றும் சுவை ஆகியவை அது எந்த வகை மண்ணில் விளைந்தது, எந்த அளவுக்கு மழைநீர் அதன் மீது பட்டது, எவ்வளவு சூரிய ஒளி அதன் மீது பாய்ந்தது போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. இப்படியிருக்க, தங்கள் தயாரிப்பு எப்போதுமே ஒரே மாதிரியான சுவையைத்தான் மக்களுக்கு அளிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது? அதே ருசியைத் தரும் இலைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இதற்காகவென்றே சிலரை நியமித்தது மேற்படி நிறுவனம். அவர்களின் ஒரே வேலை பல்வேறு இலைகளிலிருந்து உருவான தேநீரை சுவைத்துவிட்டு, தொன்றுதொட்டு அந்த நிறுவனம் தயாரிக்கும் தேநீரின் சுவையைக் கொடுக்கும் இலைகளைத் தேர்ந்தெடுப்பதுதான்.

அப்படிப்பட்டவர்களில் முக்கியமான, நாம் முதலில் குறிப்பிட்ட, செபாஸ்டியன் மைக்கேல் தினமும் 250 வகை தேநீரை சுவைத்துப் பார்த்து, தொன்றுதொட்டு உள்ள சுவையை அளிக்கும் தேநீருக்குரிய இலைகளைத் தேர்ந்தெடுக்கிறாராம். இவரது சுவை அரும்புகள் தவறான முடிவு எடுத்தால் தினமும் நாலு கோடி கோப்பைகள் என்று அந்தத் தேநீரை அருந்தும் வாடிக்கையாளர்கள், அதை வாங்கு வதை நிறுத்தி விடலாம்.

இவ்வளவு பெரிய தவறு நடந்துவிடக்கூடாது. அவரது சுவை அரும்புகள் ஏமாற்றத் தொடங்கினால் நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம். இதை ஓரளவாவது ஈடுகட்டுவதற்காகத்தான் பல லட்சம் டாலருக்கு அவரது நாக்கின் சுவை அரும்புகள் இன்ஷ்யூர் செய்யப் பட்டிருக்கின்றன. இவர்களை, ‘டீ டேஸ்டர்கள்’என்பர். இவர்கள் வெளியூர் அல்லது வெளிநாடு ஒன்றில் நடக்கும் அந்த நிறுவனத்தின் மாநாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கூட, தனித்தனி விமானத்தில்தான் செல்ல அனுமதிப்பர். (ஒரே நேரத்தில் அனைவருக்கும் விபத்து என்றால் நிறுவனத்தை மூடவேண்டி வரலாம்!)

இவர்களில் சிலருக்கு கொரோனா காலத்தில் வைரஸ் பாதிப்பால் வாசனை மற்றும் சுவை அறியும் தன்மை பாதிக்கப்பட்டது. நோயிலிருந்து மீண்ட பிறகும் அவர்களில் சிலருக்கு பழைய அளவுக்கு சுவை பார்க்கும் திறமை மீண்டும்வர வில்லையாம். இது குறித்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றன இது போன்ற நிறுவனங்கள்.

‘ஆஹா, இருக்கும் இடத்திலேயே தேநீர் குடித்துவிட்டு அதற்குப் பெரும் ஊதியமும் பெறுவது எவ்வளவு ஈஸியான விஷயம்’என்று நினைக்க வேண்டாம். வழக்கமான தேநீரைவிட, அவருக்கு அளிக்கப்படும் தேநீர் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும். அப்போதுதான் சுவை அரும்புகள் வித்தியாசம் தெரியும். ஒவ்வொரு ஸ்பூன் தேநீரையும் சுமார் ஆறு நிமிடங்களுக்கு சுவைக்க வேண்டும். அதை சத்தம்போட்டு உறிஞ்ச வேண்டும். அப்போதுதான் தேநீரின் வாசனை மூக்கை சரியாக எட்டும். பெரும்பாலும் இப்படி நாக்கில் சுவைக்கப்படும் தேநீரை பிறகு துப்பி விடுவார்கள்.

‘எனக்கு எந்த வகைத் தேநீர் பிடிக்கும் என்பது முக்கியமல்ல. இந்த பிராண்டை வாங்கும் மக்களுக்கு எந்த சுவை பிடித்திருக்கிறது என்பதை நான் தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும்’ என்கிறார் டீ டேஸ்டர் மைக்கேல். மேற்படி நிறுவனம் மட்டுமல்ல, பல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை சுவை பார்க்கவென்று ஒரு குழுவை வைத்திருப்பதுண்டு. அமெரிக்காவிலுள்ள, ‘ட்ரெயர்ஸ்’என்ற பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம், ஜான் ஹாரிசன் என்பவரை நியமித்து, அவரது சுவை அரும்புகளை பெரும் தொகைக்கு இன்ஷ்யூர் செய்துள்ளது.

தனது நிறுவனத்தில் சுவை பார்க்கும் பணியைச் செய்யும் ஒரு பெண் விஞ்ஞானிக்கு ஒரு பட்டியலை அளித்து, அதில் உள்ள உணவுப் பொருட்களை அவர் சாப்பிடக்கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள். காரணம், அவை அவரது சுவை அரும்புகள் தன்மையை மாற்றியமைத்து விடக்கூடும் என்பதுதான். சுவை அறியும் ரோபோட்கள் குறித்த ஆராய்ச்சி வேகமெடுத்து இருக்கிறது. குறிப்பாக, சீனாவில் இந்த ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். என்றாலும் இது தொடக்க வெற்றியைப் பெறவே ஒரு வருடமாவது ஆகுமாம். ஒரு குறிப்பிட்ட ருசியை கணினியில் சங்கேத மொழி முறையில் உள் செலுத்த முடியுமா என்பதுதான் இதில் இருக்கும் மாபெரும் சவால்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

மழலை சொன்ன பாடம்!

0
சிறுகதை சுமதி ராணி ஓவியம் : தமிழ் சூரியன், அதிகாலை ஆரஞ்சு வண்ண சேலையை வானம் முழுவதும் வாரி இறைக்க, சிக்னல் கிடைத்துவிட்ட சுறுசுறுப்பில் பறவைகள் சங்கீத மொழியில் விடியலைக் கொண்டாடின. இவற்றால் உறக்கம் கலைந்த சங்கரன்,...

நலந்தரும் நாஞ்சில் நாட்டு உணவு!

0
-ம.லெஷ்மி நீலகண்டன்,ஈத்தாமொழி பல நீண்ட நெடிய வரலாறு படைத்தது நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அதுகுறித்து எனக்குத் தெரிந்த, பழக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே விவரிக்க முயல்கிறேன். காப்பி, தேனீர் : எனது அறிவுக்கு...

யுபிமிஸ்ம்

0
-லதானந்த் ஆங்கிலத்தில் ‘யுபிமிஸ்ம்’(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த...

இங்கிதம்!

0
லதானந்த் ஓவியம் : தமிழ் கோவையில் ஒரு கவியரங்கம் -‘வனத்திலிருந்து வருகிறேன்’அப்படிங்கிற தலைப்பில், ‘உலக வன நாளை’ ஒட்டி நடந்துச்சு. இடம் : அவினாசி லிங்கம் ஹோம் சயின்ஸ் யூனிவர்சிடி. பல கவிஞர்கள் இதில் கலந்துக்...

காலதேவி கோயில்

0
காலதேவி கோயில் மதுரை மாவட்டம், சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோயில். புராணங்களில் வரும் காலராத்ரியைத்தான் இங்கு கால தேவியாக வழிபடுகின்றனர். இந்தக் கோயில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடை திறக்கப்பட்டு, சூரிய...