ரோஜா பன்னீர் சோடா

0
250
அது ஒரு கனாக் காலம், தொடர் -2
ஜெயராமன் ரகுநாதன்

எங்கள் ஸ்கூல் வாசலில் அழுக்கான சைக்கிள் டயர் வைத்துக் கட்டின அலுமினிய கூடையில் வரிசையாக அடுக்கிவைத்து விற்கும் இந்த ரோஜா பன்னீர் சோடா என் தூக்கத்தைப் பல நாட்கள் கெடுத் திருக்கிறது. அதன் விலை அப்போதெல்லாம் ஆறு பைசாதான். ஸ்கூல் இன்டர்வெல்லில் அன்று கையில் ஆறு பைசா இருக்கும் செல்வந்தர் கள் பெல் அடித்த கையோடு கேட்டுக்கு ஓடுவார்கள். காசில்லாத இன் னொரு சிறிய கும்பல் எதற்கோ அவர்கள் பின்னாலேயே ஓடும்.

இப்போது ஹாட் சிப்ஸ் இருக்கிறதே, அங்கே அப்போதெல்லாம் கற்பகா காபி சென்டர் என்னும் பிறாமணாள், ஆம் வல்லின ‘றா’தான் போட்டிருக்கும். சாப்பாடு ஹோட்டல் இருக்கும். நாங்களெல்லாம் அடிக்கடி அங்கே போகமாட்டோம். அங்கே சாப்பிட்ட வடையில் ஒருமுறை நூல் இருந்ததாக சேகர் சொன்ன பிற்பாடு இந்த தூஷணை. எட்டாங்கிளாசிலேயே மூன்று வருடங்கள் தங்கின பாளையம் மட்டும் மத்தியான வேளையில் அங்க போய் ‘துண்ட்டு’ வந்ததாகச் சொல்லுவான்.

“அயிருங்க வூட்ல மேரி சாம்பார் வெக்க ஆளே கிடையாது” என்பதும் அவன் துணிபு.

இந்த ஹோட்டலைத் தாண்டிப்போனால். ஐ.ஐ.டி.க்கும் இந்தப் பக்கம் வால்டார்ஃப் என்னும் சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுக்கும் இடை யிலே எப்போதும் பள்ளம் நோண்டி வைத்திருக்கும் ஒரு ரோடு தெற் காலப் போகும். அது எங்கியோ கானகம் என்னும் ஏரியாவுக்குப் போகிற ராஸ்தா என்பார்கள். அந்த ரோடிலேயே நூறு நூத்தைம்பது அடிக்குப் பின்னால் தார் ரோடு நின்று போய் கப்பி ராஸ்தாதான். தார் ரோடு முடியும் இடத்தில்தான் சுத்தானந்தா அச்சகம் இருந்தது. அதை யும் தாண்டி கப்பியில் கொஞ்சம் நடந்தோமானால் வெட்டவெளி பரப்புவரும். அதற்கு நேர் எதிரே தகரக்கொட்டகை போட்டு கதவுக்குப் பதிலாகப் பாதி கிழிந்த எம்.ஜி.ஆர். பட போஸ்டர் ஒட்டின தட்டி வைத்திருக்கும். அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர்., முகம் கிழிந்த, சரிகை வைத்துத் தைத்த பாண்ட் மாதிரி வஸ்து அணிந்த ஹீரோயினின் இடையில் கை வைத்தபடி நிற்க, அவரின் கிரீடத்தில் ஓட்டை இருக் கும். இடதுபுறம் அழுக்கான போர்டில் ரோஜா பன்னீர் சோடா, REGD என்று எழுதியிருக்கும்.

“REGDனா என்னடா” என்று ஒருமுறை கேட்டதற்கு எல்லாம் தெரிந்த முரளிதான் சொன்னான்.

“ரெக்டு (REGD) பண்ணாம வியாபாரம் பண்ணக்கூடாதுடா, அதான்!”

இந்த REGDன் பாரம்பரியத்தை ப்ரொஃபசர் ஆரோக்கியசாமி லயோலா வில் சொன்னபோது எனக்கு ஏனோ இந்த ரோஜா பன்னீர் சோடாதான் ஞாபகம் வந்தது.

நாங்கள் ஏழெட்டு பேர் ஒருமுறை ஐ.ஐ.டி.யில் கிரிக்கெட் மாட்ச் ஆடி, செம்ம உதை வாங்கித் திரும்பும்போது கையில் உள்ள சொத்தை எண்ணிப் பார்த்தோம். முப்பது பைசா தேறியது. ஈயம் என்று எதற்கோ செல்லப்பெயர் கொண்ட ராமநாதன்தான் ஐடியா கொடுத்தான்.

“ரோஜா ஃபாக்டரிக்குப் போய்டலாம்! காசு குறைச்சு தருவாங்கடா!” போய்க் கேட்டபோது அந்தச் சட்டை அணியாத முள்ளு தாடித் தாத்தா மறுத்துவிட்டார்.

“சோடா ஒரு டப்பி ஆறு பைசா தெரியும்ல?”“அது கடையிலங்க! இது ஃபாக்டரியாச்சே! குறையாதா?”

ஈயத்தின் வியாபாரத் திறமையில் தாத்தா கொஞ்சம் ஆடித்தான் போனார்.

“சரி ஏழு பேர் இருக்கீங்க. முப்பதஞ்சு பைசா!”

“சரி எனக்கு வாணாண்டா, நீங்களெல்லாம் சாப்பிடுங்க!”

ஈயத்தின் தியாகத்தில் நாங்களும் ஒரு கணம் மயங்கினோம்.

“அதென்ன உனுக்கு மட்டும் இல்லாம! நீயும் சின்னப் புள்ளதானே! முப்பது பைசாதான் இருக்கா. சரி குடுங்க, இந்தாங்க ஏழு சோடா!”

நாங்கள் முகத்தில், சட்டையிலெல்லாம் கொட்டிக்கொண்டு பரக்க பரக்க குடித்த காட்சியைப் பார்த்துச் சிரித்துக்கொண்ட அந்த தாத்தா வின் முகத்தில் துல்லியமான வாத்ஸல்யம் கலந்திருந்தது.

இத்தனை வருஷத்தில் உலகமெங்கும் சுற்றி விதவிதமான பானங்கள் அருந்தியாயிற்று. அதுபோன்ற சந்தோஷ இனிமை இதுவரை கிடைக்கவில்லை. சமீபத்தில் வந்திருக்கும் பன்னீர் சோடா வாங்கிக் குடிக்கும்போதும், சில நிமிஷங்களுக்குப் பிறகு எதுக்களித்து ஏப்பம் வரும்போதும், “சட்ட மேலெல்லாம் கொட்டிண்டு… உங்க பேரன் கூட ஜாக்கிரதையாப் பாத்து குடிப்பான்” என்று மனைவி கேலி செய்யும் போதும், அந்த வாத்ஸல்யம் மிக்க கிழவரின் சினேகமான அன்போடு கூடவே ரோஜா பன்னீர் சோடாவும் நினைவில் வந்து இன்பமாக வலிக்கிறது.

(தொடரும்)