0,00 INR

No products in the cart.

விடியலை நோக்கிய வீதி வகுப்பறைகள்!

-சந்திப்பு, படங்கள் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

கொரோனா கால மருத்துவப் பேரிடர் நாட்களில் பள்ளிகள் இயங்கவில்லை. பொது ஊரடங்கினால் பல்வேறு இயங்குதல்கள் நடைபெறவில்லை. அதில் பள்ளிக்கல்வியும் ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுதான் நிலை. எது எப்படி இருப்பினும், பள்ளி மாணவ, மாணவியர்க்கு இந்த இடைப்பட்ட காலத்தில், ‘கல்வி ஆற்றல் சேமிப்பு இழப்பு’ நேர்வதை உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளது, ‘பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.’

இதன் ஆலோசகர் கல்வியாளர் பேராசிரியர் ச.மாடசாமி, தலைவர் கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஜெயராமன். இவர்களின் சிந்தனையில் உருவானதுதான். ‘வீதி வகுப்பறைகள்.’கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற வீதி வகுப்பறைகளை மிகுந்த ஆர்வத்துடனும், தேர்ந்த செயல் திறத்துடனும், சீரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் தொடர்ந்து நடத்திவருகிறார் புவனா கோபாலன் என்கிற ஆசிரியை புவனேஸ்வரி. இவர் கும்பகோணம் அருகேயுள்ள வலங்கைமான், அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி. பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தன்னார்வல ஆசிரியை. அவரைச் சந்தித்தபோது…

உங்களுக்கு இதில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

நான், ‘நானாக’யோசிக்கையில், கொரோனா பொது ஊரடங்கு காலங்களில் படிக்கும் பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதும், அவர்களின் மனநிலை குறித்தும், அவர்களின் வாசித்தல், எழுதுதல் போன்ற பழக்கவழக்கங்கள் நின்றுபோவிடுதல் குறித்தும் பெருங்கவலை எனக்கு ஏற்பட்டது. என் சிந்தனை அவ்விதம் ஓடிக்கொண்டிருக்கையில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின், ‘வீதி வகுப்பறைகளின்’ சீரிய செயல்பாடுகள், அதற்குள் என்னை இழுத்துக் கொண்டது.

எப்போதிருந்து வீதி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? வீதி ஓ.கே. வகுப்பறைகளுக்கு என்ன செய்தீர்கள்?

2020, மே மாதத்தில் இருந்து வீதி வகுப்புகள் நடத்துகிறோம். வீதி ஓ.கே. வகுப்பறைகள் எங்கே? உங்க கேள்வி சரிதான். இன்ன வீதி என்று கணக்கில்லை. எங்களுக்குத் தேவையெல்லாம் வீதியில் ஒரு அமைதியான இடம். நிழலான பகுதி. சுவர்கள் இல்லை. கதவு, ஜன்னல்கள் இல்லை. மேற்கூரை இல்லை. டெஸ்க், பெஞ்சுகள் ஏதுமில்லை. அமைதியான ஆனந்தமான சூழல் அது. அனுபவித்துப் பார்த்தால் உணரலாம். சில பகுதிகளில் சற்று ஓரமாகப் பெற்றோர்களும் வந்தமர்ந்து கொண்டு கவனித்துக் கொண்டிருப்பார்கள் எனில், நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். கோடு கிழித்தாற்போலச் சொல்ல வேண்டும் என்றால், அவை, ‘வீதி வகுப்புகள்’தான். அதனை நாங்கள் சற்று மெருகூட்டி, ‘வீதி வகுப்பறைகள்’என்று சொல்லி வருகிறோம்.

வீதி வகுப்புகளுக்கு இந்த நாள், நேரம், காலம், பாடங்கள் என்று வரைமுறைகள் ஏதேனும் உண்டா?

அந்த வரைமுறைகள் எதுவுமே கிடையாது. கல்வி நிலை ரீதியாகவும், உணர்வுநிலை ரீதியாகவும் மிகவும் சுதந்திரமான வகுப்பறைகள் அவை. அங்கு சொல்லிக் கொடுப்பவர், கற்றுக்கொள்ள வந்திருப்பவர் என்கிற இருவேறு மனநிலைகூடக் கிடையாது. குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட பாடங்கள் என்ற அட்ட வணையும் கிடையாது. வீதி வகுப்புகளுக்கு முன்னதாக முதல் நாளே அந்தப்பகுதி பிள்ளைகளுக்குத் தகவல் தெரிவிப்போம். அவ்வளவுதான். பிள்ளைகள் எண்ணிக்கையும் கணக்கு இல்லை. பத்துப் பிள்ளைகள் இருந்தாலும் சரி, இருபது அல்லது முப்பது பிள்ளைகள் இருந்தாலும் சரி, வீதி வகுப்புகள் இயங்கத் தொடங்கிவிடும். அவ்வளவு ஏன்? ஒரே ஒரு பிள்ளைக்குக் கூட, அவரது வீடு தேடிச்சென்று வாசலில் அமர்ந்து சொல்லிக்கொடுத்து வந்துள்ளேன். இடம், பொருள் ஏதும் முக்கியமில்லை. சொல்பவர், கேட்பவர் இருவருக்கும் இயைந்து போகும் மனநிலையும், சொல்பவர்க்கு அர்ப்பணிப்பு உணர்வும் கேட்பவர்க்கு உள்வாங்கிக்கொள்ளும் உணர்வாற்றலும் இருந்தாலே போதும்.

வரைமுறைகள் ஏதுமில்லாது, வீதி வகுப்புகளில் அப்படி என்னதான் கற்றுக்கொடுத்து விட முடியும்?

சரியான கேள்வி… தேவையான கேள்வி. பிள்ளைகளின் அந்தந்த வகுப்புப்பாடங்கள் கொஞ்சம், எழுத்துப்பயிற்சி கொஞ்சம். இவற்றால் பிள்ளைகளின் கற்றல் ஆற்றல்திறன் மேம்படும். கொரோனா பொது ஊரடங்கினாலும் பள்ளிகள் இயங்காததாலும் அவர்களின் கல்வி ஆற்றல் சேமிப்புத் திறன் கூடுத லாகும். மற்றதிறன் வகுப்புகளும் இந்த வீதி வகுப்புகளின் சிறப்பம்சங்களாகும். வந்திருக்கும் பிள்ளைகளில் ஒவ்வொருவரின் ஆர்வம், ஈடுபாடு உணர்ந்து, அவர்களுக்கு அதிலதில் பயிற்சி வழங்கி வருகிறோம். ஓவியம் வரைதல், பாட்டுப்பாடுதல், நடனம் ஆடுதல், பாடங்களைக் கேட்டல், அவர்களே பாடங்கள் நடத்துதல், கதைகள் கேட்டல், அவர்களே கதைகள் சொல்லுதல் என்று பன்முக ஆற்றல்கள், பன்முகத் திறன்களை வளர்ப்பதே, ‘வீதி வகுப்பறைகளின்’குறிக்கோள்கள்.

இதுபோன்ற வீதி வகுப்புகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு நடைபெற்று வருகின்றன?

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் வழிகாட்டுதலின் வாயிலாக தமிழ்நாட்டில் சுமார் எழுபது இடங்களில்,‘வீதி வகுப்புகள்’இயங்கி வருகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவில், கோவை மாவட்ட மலைப்பிரதேசத்தில் பழங்குடியினப் பிள்ளைகள் மத்தியில், சமூக ஆர்வலர் தோழர் லெட்சுமணசாமி ஓடியன், ‘வீதி வகுப்புகளை’சிறப்பாக நடத்தி வருகிறார். சேலத்தில் கல்வராயன் மலைப்பகுதிகளில் சமூக நல ஆர்வலர் தோழர் ராம்ஜி ராமு, பழங்குடியினப் பிள்ளைகளுக்கென வீதி வகுப்புகளை நடத்துகிறார்.

ஊரடங்கு முற்றிலும் தளர்வாகி பள்ளிகள் ரெகுலராக இயங்கத் தொடங்கிவிட்டால், இந்த வீதி வகுப்பறைகள், அதாவது வீதி வகுப்புகள் என்னவாகும்?

ஒன்றும் ஆகிவிடாது. பிள்ளைகள், பெற்றோர்கள் மத்தியில் ஒருவகை புரிதலையும் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திவிட்டோம். அது குன்றிப்போய் விடாது. எனவே, பொது ஊரடங்கு முற்றிலும் விலக்கப்பட்டு, பள்ளிகள் இயங்கத் தொடங்கினாலும் இதுபோன்ற வீதி வகுப்புகள் விடுமுறை நாட்களில், ‘பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்’தின் அனுமதியுடனும் வழிகாட்டுதலுடனும் தொடர்ந்து இயங்கும் என்கிற ஆர்வமும் நம்பிக்கையும் எங்களிடம் இருக்கின்றது. ஏனெனில், இதில் பங்கேற்ற ஆசிரியைகளுக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த வீதி வகுப்புகள் தந்திருக்கும் மன நிறைவும் ஆனந்தமும் நிறைய நிறையவே.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

0
-ஜி.எஸ்.எஸ். கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...