விநாயகர் சதுர்த்தியும் காக்கைகளும் !

விநாயகர் சதுர்த்தியும் காக்கைகளும் !
Published on

– மங்கை ஜெய்குமார்

ங்கள் குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசிக்கும் பெண்மணி தினமும் மொட்டை மாடியில் காக்கைகளுக்கு சாதம் வைப்பது வழக்கம். நானும் என் கணவரும் காலையில் மொட்டை மாடிக்கு நடை பயிற்சிக்காகச் செல்லும் போது, காக்கைகளுக்குத் தண்ணீர் வைப்பது எங்கள் வழக்கம். காக்கை களும் ஒருசில புறாக்களும் சாப்பிடுவதும் பின் தண்ணீர் அருந்துவதும் பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு! அதிலும், சாதத்துடன் ஓமப்பொடி, காராபூந்தி போட்டால் அத்தனையும் நிமிடத்தில் காலியாகிவிடும். (அவற்றுக்கு தொட்டுக்கொள்ள சைடிஷ் வேண்டாமா?)
கடந்த விநாயகர் சதுர்த்தியன்று (செப்டம்பர் 10, வெள்ளிக்கிழமை) மொட்டை மாடிக்குப் போனால், எல்லா காக்கைகளும் சுற்றுச் சுவரில் அணிவகுத்து உட்கார்ந்திருந்தன. ஆனால், தட்டில் சாப்பாடு இல்லை. பூஜைக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் அப்பெண்மணி சாப்பாடு வைக்கவில்லை போலும்!

என் மனம் கேட்கவில்லை. நான் உடனே எங்கள் ஃப்ளாட்டுக்கு வந்து, முதல் நாள் இரவு செய்து, மீதம் இருந்த சப்பாத்தியை எடுத்துச் சென்று, சிறு சிறு துண்டுகளாக்கிப் போட்டேன். என்ன ஏமாற்றம்! எல்லா காக்கைகளும் பறந்து விட்டன. ஒரு காக்கைகூட சாப்பிட வரவில்லை. ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. எங்கள் நடைப் பயிற்சியும் தொடர்ந்தது. அரை மணியாயிற்று ஊஹூம் காக்கைகளையும் காணவில்லை, புறாக்களையும் காணவில்லை.

விநாயகா! காக்கை வடிவில் வந்து அகத்தியரின் கமண்டலத்தைத் தட்டி விட்டு, காவிரி பெருக்கெடுக்கக் காரணமாக இருந்த பெருமானே! இது என்ன சோதனை? எங்கே போயின காக்கைகள்?

"எனக்கு காக்கா பாஷை தெரியுமாக்கும். எல்லா காக்காவும் ஏன் ஓடிப் போச்சு தெரியுமா? எங்களுக்கே இத சாப்பிட தோணலயே, நீ எப்படித்தான் நேத்திக்கு சாப்பிட்டியோன்னு காக்கா என்னைக் கேட்டுதாக்கும்" என்று கணவரின் கேலி வேறு.

ஒரு நிமிடம் நின்று விநாயகப் பெருமானை மனதார வேண்டினேன். என்ன ஆச்சரியம்! சொன்னால் நம்ப மாட்டீர்கள்… எங்கிருந்தோ ஒரு கூட்டமாக காக்கைகள் வந்து அமர்ந்ததுதான் தெரியும்… சப்பாத்தி இருந்ததற்கான அடையாளமே தெரியாதபடி நிமிடத்தில் அந்த இடம் சுத்தமாக ஆகி விட்டது. பின் தண்ணீரையும் குடித்து விட்டு காக்கைகள் பறந்தன.

விநாயகரின் உடனடி அருளை எண்ணி மனம் நிறைந்த மகிழ்ச்சி. 'உள்ளார்ந்த அன்போடு எது செய்தாலும் அதற்கு நிச்சயம் பலன் உண்டு' என்ற எனது கணவரின் பாராட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி!!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com