0,00 INR

No products in the cart.

விபரீதம் கோபம்

நூல் அறிமுகம்
மஞ்சுநாத்

அறிவின் கழிக்கூத்தாட்டம் எல்லா நேரங்களிலும் சிறப்பாக அமைந்து விடுவதில்லை. ஆனால் அந்தக் காட்சியை கச்சிதமாகக் கட்டமைப்பதற்கான முயற்சிகளின் அரங்கேற்றம் சுவாரசியமானதா? இல்லை, அயற்சியைத் தரக்கூடியதா? என்பது வாசகனின் மன அனுபவங்களைப் பொறுத்தது.

‘காலிப்` தனது கதையைச் சொல்கிறான். இந்தக் கதை தீராத வலி களையும் அதற்கான மனிதர்களையும் அவர்களை மையப்படுத்தும் காட்சிகளையும் நிகழ்வுகளையும் கொண்டு அது அவனுள் பேருவுரு வாகி அவனைவிட்டு விலகாமல் முதுகின் பின்னால் ஒரு நிழல்போல் அமர்ந்து அச்சுறுத்தி ஓடும், ஓட வைக்கும் வாழ்க்கையைத் தருகிறது.

ஒருநாள் அவன் துயில் களையும் காலை வேளையில் அவனது காதல் மனைவி ரூயா காணாமல் போகிறாள் என்பது அவனது வாழ்வைத் துயிலற்றதாக மாற்றிவிடுகிறது. ஒரு கதையின் மூலத் தைத் தேடிக் கண்டடைவது போன்ற சிரமத்தை அவன் மனைவியைத் தேடிச் செல்லும்போது உணர்ந்து கொள்கிறான். அவள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச் சென்றதற்கான காரணங்களை அவன் மனம் தேடத் தொடங்கியபோது அதில் அவனது பங்கும் அதிகமிருப்பதைக் கண்டு கொள்கிறான்.

வக்கீல் தொழிலில் மூழ்கியுள்ள அவனால் துப்பறியும் நாவல் களை விரும்பி வாசிக்கும் அவனது மனைவி ரூயாவின் மீது கவனம் செலுத்துவதற்கு நேரமில்லை. அதே சமயம் அவளது ஒன்றுவிட்ட சகோதரனும் பத்திக் கட்டுரைகள் எழுதும் பிரபல வார இதழின் பிரபல் யமான எழுத்தாளன் ஜெலால் மீது அவனுக்கொரு ஈடுபாடு இருக் கிறது. அதே போன்றதல்லாத ஈடுபாடு அவன் மனைவி ரூயாவுக்கும் இருந்ததென்பதைப் பிற்பாடு தெரிந்து கொள்கிறான்.

இந்நாவலை முக்கோணத்தின் மூன்று புள்ளிகளாகக் கருதும் வேளையில் இந்த மூன்றாவது புள்ளியான ஜெலாலின் வாழ்க்கையைத் தனது கனவாகக் கொள்வதுடன் அதை நினைவெளியிலும் பொருத்திப் பார்க்கிறான் காலிப். இவனைப் போலவே ஜெலாலின் வாசகர்களும் எழுத்தின் மாய மையைத் தங்கள் மீது பூசிக்கொண்டு அவர்கள் வாழ் வைத் தொலைத்துவிட்டு எழுத்தாளனின் அங்கியை அணிந்து கொள் வதைப் பெருமிதமாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த அங்கி ஒருநாள் கிழிபடும்போது தங்கள் உண்மையான சுயத்தைக் கண்டு கொள்கிறார் கள். ஆனால் வேறொருவரின் வாழ்க்கையைத் தங்கள் வாழ்வில் வைத்துருட்டிய காலம் திரும்ப மீளுமா?

விபரீதம் என்பது இழப்பின் பிரதியான கோபம். அது ஒருநாள் பூஜித்த எழுத்தாளன் மீது மூர்க்கமாகத் திரும்பும். இழப்பின் பினை மீட்பான கோபம் என்பது ஒரு இறுதியான தற்கொலையைத் தவிர வேறில்லை.

காலிப் – ரூயா – ஜெலால் ஆகிய மூவரும் முக்கோணக் கதை யின் புள்ளிகளாக ஆழம் பதிக்கும் அதேவேளையில் அந்தப் புள்ளிகளை இணைக்கும் எழுத்தாளர் பாமூக்கின் நீண்ட நெடிய பார்வை கோடு களுக்கிடையில் முக்கோணத்தின் உள்வெளியில் அடங்கியுள்ள இஸ்தான்புல் நகரின் மீட்கமுடியாத படிமங்களைக் காணலாம். இந் நகரின் வரலாறு, இலக்கியம், ஓவியம், அரசியல், வாழ்வியல், புரட்சி என அனைத்தும் அதில் நிரப்பப்பட்டுள்ளது.

ஜெலாலின் பத்திக் கட்டுரைகள் வழியேயான பன்முக சாளரக் காட்சியின் படிமத்தை இப்புத்தகம் காட்டுகிறது. பொறுமை எனும் கரம் கொண்டு வாசகன் சாளரத்தின் திரையை விலக்கும்போது பனியின் வடிவங்கள் நம் மனதில் உருவாக்கும் மாயபிம்பங்களை நாம் சரிபார்க் கும் தருணத்தில் பனியுருகி வேறொரு உருவில் மீண்டும் நம் மனதை ஆக்கிரமித்து விடுகிறது. ஜெலால் தனது பார்வையில் அறுபத்தி நான்கு குறிப்புகளை ஒரு பத்தி எழுத்தாளனுக்குப் பயன் தரும் குறிப்புகளாகப் பகிர்கிறான்.

மேலை நாடுகள் தங்கள் இலக்கிய கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, கீழை நாடுகளிடமிருந்து மேலை நாடுகள் களவாடிய இலக்கிய குற்றச்சாட்டுகளைத் துணிவாக முன்வைக்கிறார். இலக்கிய மரபுகளை மனநிம்மதி தரும் சுவர்க் கடிகாரங்கள் என உவமைப்படுத்துகிறார். இந்தச் சுவர்க் கடிகாரங்களில் ஒன்று சரி, மற்றொன்று தவறு என்பதெல்லாம் சுத்த அபத்தம் என்கிறார்.

காலிப் தனது அகநிலை தடயங்களைப் புறநிலையில் உறுதி செய்யும்போது அவன் மனைவி ரூயா, எழுத்தாளர் ஜெலாலுடன் ஓடிப் போனதை உறுதி செய்துகொண்டு ஜெலாலின் இருப்பிடங்களை நுகர முயல்கிறான். இந்த முயற்சியில் ரூயா வாசத்தின் நினைவரிப்பைவிட ஜெலால் வாசத்தின் பேரரிப்பே அவனை ஆட்கொண்டு அலைகழிக் கிறது. ஜெலால் எழுதிய பத்திக் கட்டுரைகள் வழியே தடயங்களை தேடினாலும் முதல் மர்ம முடிச்சை (ரூயா) அவிழ்ப்பதற்குள் சிக்கலாகி போன இரண்டாவது (ஜெலால்) முடிச்சில் முயங்கி விடுகிறான்.

நாடகத் திரையில் அவன் தேடிக் கொண்டிருக்கும் முகம் அவனாகிப் போன பின்பு காணாமல்போன ஜெலால் பெயரில் இவன் பத்திக் கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிடுகிறான். இது அவனது சுய அழிப்போடு சேர்த்து அவனது தொலைந்துபோன மனைவியின் தேடுதலுக்கு முடக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடர்துர்க் பாலம், பக்கிர்காய் புகைவண்டி நிலையம், கரக்காய் படகுத்துறை, தாக்ஸிம் சதுக்கம், நியூஏஞ்சல் திரையரங்கம், கேலட்டா பாலம், பொற்கொம்பு கழிமுகம், காபியகம், ஆலாவுதீன் பலசரக்குக் கடை, பாஸ்ஃபரஸ் நீரிணைப்பு என இஸ்தான்புல் நகரின் முக்கிய குறியீட்டு மையங்களைத் தேர்ந்த வரைபடவியல் நிபுணருக்கான கவனத்தோடு காட்சிப்படுத்தும் பாமூக், வாசகனை கதை நாயகன் காலிப்பின் வழி நிழலாய் சேர்ந்தழைத்துப் போகிறார்.

காஃப் குன்றில் வசிப்பதாக நம்பப்படும் சிமுர்க் எனும் புராணிகப் பறவையைப் பற்றிய மாயக்கதைகளைச் சதுரங்க எழுத்தாக்கத்தில் சிக்க வைப்பதற்கு முன்பு தனக்குள் பொதிந்துபோன வாசகனின் வாசிப்பு எழுச்சியை முன்வாசகமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் முன் தொடக்கமாகத் தந்துள்ளார் பாமூக்.

துருக்கியின் படைப்புகளை ஆங்கில மொழியாக்கம் செய்வதி லுள்ள சிரமங்கள் ஓரான் பாமூக்கின் படைப்புகளைப் பொறுத்தவரை சவால் நிறைந்தது. இது அதன் கடினத்தன்மையைத் தமிழ் மொழி யாக்கத்தில் பிரதிபலித்தாலும் அதன் வசீகரத்தன்மையை இழந்துவிட வில்லை. ஓரான் பாமூக்கை தமிழ் வாசக உலகம் பேசும் தறுவாயில் அவரைத் தமிழ் இலக்கிய உலகிற்கு முதலில் அறிமுகப்படுத்திய ஜி.குப்புசாமி எனும் சிறப்பான மொழிப்பெயர்ப்பாளரை மறந்துவிட முடியாது. கருப்பு புத்தகத்தின் வாசிப்பு தொடக்கத்தில் குப்புசாமியின் சுயமுத்திரையின் பரிட்சயத்தை மனம் ஒப்பிட்டுச் சென்றபோது எத்திராஜ் அகிலன் அதை முறியடித்து தனது கடின உழைப்பின் பொருட்டு நம்மை அவர் மொழியாக்கத்திற்குள் ஈர்த்துவிடுகிறார்.

பாமூக்கின் செறிவான எழுத்து நடையின் லயத்தை வாசகன் தனது அறிவின் முயற்சியால், பொறுமையால், கற்பனையால், வாசிப் பின் நெடிய அனுபவத்தால் மட்டுமே தனதாக்கிக்கொள்ள முடியும். இல்லையெனில் ஒலிக் குறிப்புகள் வழியே நிகழ்ந்தோறும் பொம்ம லாட்டத்தின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே அத்தகைய வாசகர்கள் ஓரான் பாமூக்கின் வரவிற்காகச் சிறிது நாட்கள் காத்திருக்கலாம். அல்லது அவரது வெண்ணிறக் கோட்டையின் வசிப்பி லிருந்து தொடங்கலாம்.

இறுதியில் “அருகிலிருக்கும்போது இருப்பின் உணர்வைத் தவற விடுகிறோம். இல்லாதபோது வலியின் ஆழத்தை உணர்ந்து கொள் வதிலிருந்து நாம் தப்ப முடிவதில்லை” என்பதைச் சொல்லிக் கொண்டு, ஜெலால் எழுதிய பத்திக் கட்டுரைகளை ஒன்று சேர்த்து “கருப்பு புத்தகம்” என்ற பெயரில் தொகுப்பாக்கியது காலிப்பை பொறுத்தவரை அவன் துயரை அது நீட்சிப்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்கிறேன்.

சாகசப் பயணம் செய்து வீடு திரும்பிய பயணியின் சந்தோஷத்திற்கு ஈடானதாக வாசிப்பை நிகழ்த்த முடியும்.

நூல்            :கருப்பு புத்தகம் (துருக்கி நாவல்)
ஆசிரியர்   : ஓரான் பாமுக் (Orhan Pamuk)
தமிழில்      : எத்திராஜ் அகிலன்
வெளியீடு  : காலச்சுவடு பதிப்பகம்
பக்கம்        : 624

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....

400 ஆண்டுகால வியாபாரம்

0
வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும் சோம.வள்ளியப்பன் பங்குச்சந்தை ஒரு வகை சூதாட்டம் தானே! பத்திரிகைகள் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரைகள் எழுதுவதாகவும் அறிகிறேன். பங்கு சந்தை கள் ஏன், எப்படி, எங்கு. என்று தோன்றின?   - திருவரங்க வெங்கடேசன்,...

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்-15 எஸ்.சந்திரமௌலி "டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள்...

அஞ்சலி

0
ஓவியம் : ராஜன்

கொலுவில் ‘அப்பூச்சி’

0
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் கல்கி கடைசிப் பக்கம் படிப்பவரா? நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் இந்த வாரம் உங்கள் ராசி பலனைக் கணிப்பது சுலபம். இந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டு இருக்கும் ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள்...