0,00 INR

No products in the cart.

ஸ்டார்ட்… கேமரா…-ஆனந்த்16

– எஸ்.சந்திரமெளலி

ஒரு கேமராமேன் என்ற வகையில் நான் ரஜினி சாரை எந்த ஒரு காட்சியிலும் இடுப்புவரை ஃப்ரேமில் கொண்டுவர தயங்க மாட்டேன். காரணம் அவருக்குத் துளியும் தொப்பை கிடையாது. உடம்பை அவ்வளவு ட்ரிம்மாக வைத்திருப்பார். ஒரு நாள் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ‘துளிக்கூட தொப்பையே இல்லாமல் இருக்கீங்களே? அது எப்படி சார்?’ என்று நான் நேரடியாகவே அவரைக் கேட்டுவிட்டேன். பலமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ‘அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல; நாக்கை கட்டினா, தொப்பை இருக்காது’ என்று பட்டென்று ட்ரிம் ரகசியத்தைப் போட்டு உடைத்தார் சூப்பர் ஸ்டார்.

ஒருநாள், காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஷூட்டிங், இரண்டு லொகேஷன்கள் மாறி, கடைசியாக திருப்போரூரில் ஒரு பப்ளிக் டெலிபோனில் காயின் போட்டுப் பேசுவது போல ஒரு சிறிய சீனை எடுத்து முடிக்கும்போது இரவு ரெண்டு மணியாகிவிட்டது.

ஆனாலும், டெலிபோனுக்குள் காசு போடுவது போல கையின் சில குளோஸ்-அப் ஷாட்கள் எடுக்க வேண்டியிருந்தது. அது பற்றி ரஜினி சாரிடம் சொன்னதும், ‘காயின் போடுவதை குளோஸ் -அப்பில் தானே எடுக்கப் போறீங்க? அதற்கு எந்தக் கையானாலும் பரவாயில்லையா? இல்லை இந்தக் கைதான் வேண்டுமா?’ என்று தன் கைகளைக் காட்டிக் கேட்டார். டைரக்டர் ஷங்கர் ‘எந்தக் கையையாவது வைத்து இந்த சீனை எடுக்கறதும், சூப்பர் ஸ்டாரின் கையை வைத்து எடுக்கறதும் ஒண்ணாயிடுமா சார்? உங்க கையால காயின் போடும்போது விரலை ஸ்டைலா ஒரு சுண்டு சுண்டுவீங்க! அதுக்கு தியேட்டர்ல ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்! ஆகவே, உங்க கைதான் எனக்கு வேண்டும். நீங்க காலையிலிருந்து ஷூட்டிங்ல இருக்கீங்க! டயர்டா இருந்தா சொல்லுங்க… ஷாட்டை நாளைக்கு எடுத்துக்கலாம்?’ என்றதும், உடனே, ‘ஓகே… நோ ப்ராப்ளம்.. இப்பவே முடிச்சிடலாம்’ என்று சொல்லிவிட்டு இன்னும் ஒரு மணிநேரம் கூடுதலாக இருந்து அந்தக் காட்சியை எடுக்க ஒத்துழைத்ததை எங்களால் மறக்கவே முடியாது.

(சிவாஜி) படத்தைப் பொறுத்தவரையில் கதையை முடிவு செதபிறகு, ஷங்கர் கவனம் செலுத்தியதெல்லாம் ‘ரஜினி சாரின் ரசிகர்களை என்ன புதுமைகள் செய்து திருப்திப்படுத்தலாம்’ என்பதில்தான். ரஜினியை இளமையாகக் காட்டுவது எப்படி? பாடல் காட்சிகளில், சண்டைக் காட்சிகளில், செட்களில், என்னென்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போதுதான் கறுப்பு வைரமாக இருக்கும் ரஜினியை, ஒரு வெள்ளைக்காரர் போலக் காட்டினால் எப்படி இருக்கும்? என்ற மிகவும் புதுமையான ஐடியா ஷங்கருக்குத் தோன்றிது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதுபோல ஒரு மனிதருடைய உருவத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், கறுப்பு நிறத் தோலின் மீது ஐரோப்பியர்களின் வெள்ளை நிறத்தோலை ஒட்ட முடியும் என்று நான் ஐடியா சொன்னேன்.

‘இந்தியன் ஆர்டிஸ்ட்’ என்ற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் நிறுவனத்துடன் பேசினோம். ‘அவர்கள் கம்ப்யூட்டர் கிராஃபிக்சில் அதை செய்துத் தர சம்மதித்தார்கள். லண்டனிலிருந்து வந்த ஐரோப்பிய மாடல் அழகிகளை வைத்து ஸ்பெயினில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில் ரஜினியுடன் நடனமாடிய ஒரு அழகியையே ரஜினியின் வெள்ளைத் தோலில் தோற்றமளிக்கச் செய்யவும் பயன்படுத்திக் கொண்டோம். அதாவது, ரஜினியையும், மற்ற அழகிகளையும் வைத்து ஒரு ஷாட் எடுத்தவுடன், அதே இடத்தில் ரஜினிக்கு பதிலாக அந்த அழகியை ரஜினியின் மூவ்மெண்ட்கள் செய்யச் சொல்லி மீண்டும் ஒரு ஷாட் எடுத்துக் கொள்வோம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் இரண்டையும் இணைத்து, ரஜினியை வெள்ளைக்காரர்போல மாற்றினோம். இந்த ஸ்பெஷல் எஃப்பெக்ட்டுக்காகத்தான் ‘சிவாஜி’ படத்துக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. சினிமாவில் ஸ்பெஷல் எஃப்பெக்ட்ஸ் குறித்த பல்வேறு முன்னணி இணைய தளங்களிலும் வெள்ளைக்கார ரஜினி பற்றிய தகவல்கள் விரிவாக இடம்பெற்றன.

ஒரு சமயத்தில் ஒரு படத்துக்கு மட்டுமே ஒப்புக்கொள்வது என்பது என் கொள்கை. அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்த பாலசந்தர், பாரதி ராஜா, சேரன், கௌதம் மேனன், முருகதாஸ், செல்வராகவன், மலையாளத்தில் பரதன், ஹரிஹரன், ஜெயராஜ், இந்தியில் ராம்கோபால் வர்மா, அசுதோஷ் கௌரிகர், நாகேஷ் குகுனூர் போன்றவர்களின் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் வந்தபோதும், ஏற்கமுடியாமல் வருத்தப்பட்டிருக்கிறேன்.

என் கனவுகளில் ஏதோ சில படிகளாவது ஏறியிருப்பது என் சாதனை என்று மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு மடையன் அல்ல நான். என்னை சுதந்திரம் கொடுத்து வளர்த்த பெற்றோர்கள், 19 வயதிலேயே என்னைப் பக்குவப்படுத்திய கல்கி, எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய பி.சி. ஸ்ரீராம், என்னைப் பொறுத்துக் கொள்ளும் மனைவி சசி, எழுத்தாளர்கள் சுபா போன்ற நண்பர்கள், என் அற்புதமான டைரக்டர்கள் அத்தனைபேரையும் கொழுக் கொம்பாகப் பற்றிக்கொண்டு வளர்ந்து வரும் கொடி நான்.

விருந்தாளிக்கு வீட்டைச் சுற்றிக் காட்டும்போது, விரிசலான சுவர், ஈரம் கசியும் மூலைகளும் அவர்கள் கண்ணில் பட விடமாட்டோம். அதுபோல நான் ஏறிய படிகளுக்குப் பின்னால் ஏற்பட்ட ஏமாற்ற காயங்களும், அவமானப்பட்ட ரகசிய கண்ணீரும் உண்டு.

‘கனாக் கண்டேன்’ படத்தை ஏ.எம்.ரத்னத்தின் சூரியா மூவிஸ் தயாரிக்க முடிவாகி இருந்தது.

ஷூட்டிங் ஆரம்பிக்க இன்னும் இரண்டே நாட்கள் என்பதால், அலுவலகத்தில் என் உதவியாளர்களுக்கு  படப்பிடிப்பு சம்மந்தமாக இன்ஸ்ட்ரக்ஷன்களை படபடவென்று கொடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்றுதான் யாரிடமும் உற்சாகமில்லாததை கவனித்தேன். விசாரித்தபோது, தயாரிப்பாளருக்கும், ஹீரோவுக்கும் சம்பள விஷயத்தில் மனவேறுபாடு என்பதால் படம் ‘டிராப்’ ஆகிவிட்டதை என் கண்களை நேரடியாகப் பார்க்காமலேயே சொன்னார்கள். எல்லோரையும் கலைந்துபோகச் சொல்லிவிட்டு, என் உடைமைகளை அள்ளிப் போட்டுக்கொண்டு அங்கிருந்து அகன்றேன்.

வீட்டுக்குச் சென்றபோது, ‘ஹை! அப்பா சீக்கிரமே வீட்டுக்கு வந்திடாங்க! எல்லோரும் டின்னருக்கு கிளம்பலம்’ என்று குழந்தைகள் உற்சாகமாகக் குரல் கொடுத்தார்கள். ஆமாம்! அன்று என் பிறந்த நாள்! எனக்குத் தெரியாமலேயே டின்னருக்கு நட்சத்திர ஓட்டலில் டேபிள் ரிசர்வ் செய்திருந்தார் என் மனைவி சசி. யாரிடமும் எதுவும் சோல்லாமல். ஓட்டலுக்குச் சென்றேன். அவர்கள் சிரித்தபோது நானும் சிரித்தேன். இரவு படுத்தபோது என் கண்கள் நனைந்திருந்ததை உணர்ந்தேன். என்னை செல்லமாக ‘கல்லுளி மங்கன்’ என்று திட்டும் சசி, எதுவுமே தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். எனக்கு நினைவு தெரிந்து நான் கண் கலங்கிய தருணம் அதுதான்.

அதன் பிறகு தயாரிப்பாளர் தேனப்பன் ‘கனாக்கண்டேன்’ படத்தை தயாரிக்க முன்வந்தார். படம் வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் எனக்கு அள்ளித்தந்தது. என் இயக்கத்தில் வெளியான ‘அயன்’படத்தின் பெரும் வெற்றிக்குப் பின், அடுத்த அடியை எடுத்து வைத்துவிட்டேன் ஏமாற்றங்கள், வலிகள், வெற்றிகளுக்காக…..

அவரது ஏமாற்றங்கள், வலிகள், வெற்றிகளை நம்மோடு  தொடர்ந்து பகிர்ந்துகொள்ள அவர் இன்று இல்லை   என்ற வருத்ததுடன் இந்த தொடர் நிறைவடைகிறது 

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

1
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...