கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்: தமிழக அரசு!

கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்: தமிழக அரசு!

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையடுத்து கோயில்கள் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்து முன்னேற்ற கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:

செப்டம்பர் 10-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் களிமண்ணாலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தயாராகி வருகின்றனர். பண்டிகை முடிந்தபின், இச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதிக்கக் கோரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

-இவ்வாறு அவர் தன் மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனு இன்று  நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. ஆனால்,  கடந்த ஆண்டை போலவே வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளை கோவில்கள் முன் வைத்தால், அவற்றை சேகரித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நீர்நிலைகளில் கரைப்பார்கள் என்று தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களையும் கொரோனா விதிகளையும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com