தர்மம் தலைகாக்கும்.. யோகா உயிர்காக்கும் !

தர்மம் தலைகாக்கும்.. யோகா உயிர்காக்கும் !

-ராஜ்மோகன்

"சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்த விபத்து. அதில் என் மூட்டுக்களில் உள்ள எலும்புகள் நொறுங்கிவிட்டன. மருத்துவர்கள் என்னால் நடக்க கூட கட்டுப்பாடு விதித்தனர். அதன் பின்னர் தான் என் மனதில் நான் அதிகம் தன்னம்பிக்கையை வளர்த்துகொண்டேன். ஒரு சங்கல்பம் எடுத்துகொண்டேன்" என்று சொல்லத் தொடங்கினார், தமிழ்நாடு சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தன் அரசியல் வாழ்க்கையை வார்டு கவுன்சிலராகத் தொடங்கி, சென்னை மேயராக பணியாற்றி தற்போது சுகாதார அமைச்சரான மா.சுப்ரமண்யன், ஒரு சர்வதேச மாராத்தான் ஓட்ட வீரர் மற்றும் தீவிர யோகா பயிற்சியாளர் என்பது மிக சிலருக்கே தெரியும். அந்த வகையில் நேற்று ( செப்டம்பர் 22) சென்னை புழுதிவாக்கத்தில் நடந்த ஒரு விழாவில் யோகாவின் சிறப்புகளை பட்டியலிட்டு தன் வாழ்க்கையின் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு, யோகா எப்படி தனது உயிர் காக்க உதவியது என்பதை உருக்கமாக பேசினார் மாண்புமிகு அமைச்சர்.

''விபத்தினால் என் கால் எலும்புகள் நொறுங்கி, நடக்கவே முடியாதோ என்ற நிலமை! ஆனால் நான் மனம்தளராமல் தொடர்ந்து யோகப்பயிற்சிகளையும், தியானப்பயிற்சிகளையும் கற்று இடைவிடாது செய்தேன். அதன் அற்புத பலன் என்னை இயல்புநிலைக்கு திருப்பியது மட்டுமல்ல.. என்னை ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீரனாகவும் மாற்றியது. எலும்பு மூட்டுக்கள் நொறுங்கிய நிலையில் நடப்பதே சிரமம். ஆனால் இப்பொழுது நான் உலக அளவில் 21 நாடுகளில் மாரத்தன் ஓட்டப்பந்தயம் ஓடியிருக்கிறேன். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மாராத்தான் ஓடவேண்டும் என்பது என் ஆசை. இந்த கொரோனா பேரலையின் காரணமாக பயணிக்க முடியவில்லை. இருப்பினும் என் வீட்டு மொட்டை மாடியில் 8 வடிவில் ஒரு சிறு ஓட்டத்தளம் அமைத்துள்ளேன். அதில் தொடர்ந்து நான்கரை மணி நேரம் ஓடி உலக சாதனைபுரிந்துள்ளேன். யோகா அந்த அளவிற்கு உயிரையும் மனதையும் காக்கவல்லது.தொடர்ந்து யோகாவும் தியானமும் செய்யும் போது அளப்பரிய சாதனைகள் செய்யமுடியும் " என்று உருக்கமாக சொல்லி முடித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மனவளக்கலை உருவாக்கிய யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியின் 'உலக சமுதாய சேவா சங்கம்' சார்பில் "கிராம சேவைதிட்டம்" 2012-ல் தொடங்கி இதுவரை 215-க்கும் அதிகமான கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு யோகா,தொழில்பயிற்சி, சுற்றுசூழல் அறிவு, வாழ்வியல் ஆலோசனை என பல்வேறு பயிற்சிகள் கட்டணமின்றி அளிக்கப்படுகின்றன. அந்த கிராமத்தை ஒரு முழுமையான தன்னம்பிக்கை கிராமமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 75 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம மக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். சாதி, மதம், சடங்குகள், சம்பிரதாயங்களற்ற அறிவியல்பூர்வமான இந்த யோகா முறையை அனைத்து தரப்பு மக்களும் கற்று பயனடைந்து வருகின்றனர். பயிற்சி நடைபெறும் கிராமங்களில் மக்கள் குடிபோதை, புகை மற்றும் தீயபழக்கங்களில் இருந்து விடுதலை பெற்று அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையை தொடர்கின்றனர்.

இந்த வகையில் சென்னை புழுதிவாக்கம் கிராமத்தில் பயிற்சி நிறைவு விழா நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இதில்தான் அமைச்சர் மா.சுப்ரமண்யன் கலந்துகொண்டு யோகா பற்றிய தன் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த விழாவில் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன் காணொலி காட்சி மூலமாக கிராம சேவை திட்டம் பற்றி விளக்கி பேசினார். கிராம சேவை திட்டத்தின் இயக்குனர் முருகானந்தன் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் பேசிய கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் "கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து கவனிப்பது என்பது ஒரு சம்பிரதாயமானதாக கூட கருதலாம். தியானம் என்பது நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வுடனும் ஈடுபாட்டுடனும் செய்வது!. நீங்கள் துணி துவைக்கலாம், சமையல் செய்யலாம், வேறு வீட்டுபணிகள் செய்யலாம் இப்படி அன்றாட பணிகளை செய்யும்போதும் அதில் மனம்ஒன்றி செய்கிறீர்கள் எனில் அதற்குள் ஒரு தியானம் இருக்கிறது. தியானம் என்பது ஒரு விழிப்புணர்வு நிலை. அதனை புரிந்துகொண்டால் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து நிற்கும்'' என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com