திராவிடம் என்பதே மாயை! பிஜேபி செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தடாலடி!

திராவிடம் என்பதே மாயை! பிஜேபி செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தடாலடி!

பேட்டி; ஜாசன்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. அக்கட்சியை இங்கு உயிரோட்டமாக வைத்திருப்பதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது உக்ரைன் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை.. திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் என்று பிஜேபி-யை சீண்டிப் பார்க்கும் எல்லோருக்கும் இவரது பதிலடி நச்சென்று இருக்கும். நாராயணன் திருப்பதியுடன் ஒரு பேட்டி

தமிழக பிஜேபி தலைவராக இருந்தபோது தமிழிசை சௌந்தரராஜன் 'தமிழ்நாட்டில் தாமரை மலரும்' என்ற கோஷத்தை துவக்கி வைத்தார் தற்போது அது எந்த அளவில் இருக்கிறது?

வறண்டிருந்த தமிழகத்தில் தாமரை மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது தமிழகம் செழிப்பான பாதையை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது இது ஒரு ஆரம்பம்! சட்டசபை முடிவுகள் உள்ளாட்சி தேர்தல் வெற்றி இதெல்லாம் தமிழ்நாட்டில் தாமரை பட்டிதொட்டியெல்லாம் பரவிவிட்டது என்பதற்கு முக்கிய சாட்சி>

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி முடிவுக்கு யார் காரணம்? அதிமுகவா பாரதிய ஜனதாவா?

இரண்டுமே அல்ல. "காலம்" தான் காரணம்!

உண்மையை சொல்லுங்கள்.. பாரதிய ஜனதா ஓட்டுக்கு பணம் தரவில்லையா?

தந்ததில்லை-தரவில்லை. எதிர்காலத்திலும் தர மாட்டோம் இது எங்கள் கொள்கை முடிவு! வாக்குகளை விலை பேசி அதன் மதிப்பை குறைக்கும் வேலையில் பாரதிய ஜனதா என்றுமே ஈடுபடாது. மக்கள்மேல் என்களுக்கு நம்பிக்கையுண்டு. மேலும் எங்கள் கொள்கை மேல், எங்கள் செயல்பாடு இவையெல்லாம் எங்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

திமுகவின் பண நாயகத்தால் ஜனநாயகம் தோல்வியுற்றது. ஆனால் அந்த பண நாயகத்தை முறியடித்து பாரதிய ஜனதாவின் நற்கொள்கையால் ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் எங்களை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். பாரதிய ஜனதாவின் பரவலான வெற்றியானது – மக்கள் ஜனநாயகம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இனி வரக்கூடிய காலங்களிலும் பாரதிய ஜனதாவின் தொடர் வெற்றி ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும்.

மத அரசியல் செய்வதாக பாரதிய ஜனதா மீது தமிழக முதல்வர் சொல்லும் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

மதசார்பற்ற அரசு என்று என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைத்து மதத்திற்கும் பொதுவாக செயல்பட வேண்டும்! ஆனால் இங்கே நடப்பதே வேறு1 சிறுபான்மை மத வாக்குகளை பெறவேண்டி அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிற்து இந்த அரசு. அதேசமயம் பெரும்பான்மை வாக்குகளை பிரிப்பதற்காக அந்த மதத்தை விமர்சித்து பிளப்பதுதான் மதவாதம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது திமுகதான் மதவாதக் கட்சி.

எதிர்காலத்தில் பாரதிய ஜனதா அதிமுக உறவு எப்படி இருக்கும்?

அதையும் "காலம்"முடிவு செய்யும்.

குற்றப் பின்னணி உடையவர்கள் பாரதிய ஜனதாவில் அடைக்கலம் ஆகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?

ஒரு கட்சி வளரும்போது அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இணைகிறார்கள். அப்போது சில சமயங்களில் இதுபோன்ற பிழைகள் நடந்திருக்கலாம். தவறுகளிலிருந்துதான் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட பிழைகளைத் தவிர்ப்பதற்கு கட்சியின் அமைப்பு இயந்திரம் செம்மையாக பணியாற்றுகிறது அதற்கான வழிகாட்டுதல் வகுக்கப்பட்டிருக்கிறது.

திராவிட அரசியலை பாரதிய ஜனதா எப்படி சமாளிக்கும்?

திராவிடம் என்பதே மாயை! திராவிட அரசியல் என்பது பொய். மாயையும் பொய்யையும் சமாளிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் கழக அரசியல் என்பது ஊழல் அரசியலே! ஊழலை முற்றிலும் ஒழிக்க பாரதிய ஜனதா திட்டங்கள் வகுத்து அதை நோக்கி பயணித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தற்சமயம் பிஜேபி-க்கு மூன்றாவது இடம்! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நீங்கள் உரிமை கோருவதை ஆட்சேபணை செய்கிறாரே?!

திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்த பெரிய அரசியல் சக்தி பாரதிய ஜனதாதான் என்பதில் தமிழக அரசியல் தெரிந்த யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி இந்திய அரசியலில் காணாமல் போனதுபோல் அழகிரியும் தமிழக அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்.

தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தொடர்ந்து மத்திய அரசு மீது திமுக அரசு சொல்லும் குற்றச்சாட்டு பற்றி?

ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற வாசகத்தை நம்பி மத்திய அரசின் மீது நிதி கொடுக்கவில்லை என்ற விமர்சனத்தை திமுக தொடர்ந்து வைத்து வருகிறது. ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட அவர்கள் சொல்லும் எந்த புள்ளிவிவரங்களிலும் உண்மை இல்லை. இந்திய சுதந்திர வரலாற்றில் கடந்த ஏழு வருடங்களில் தமிழகத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது இதுதான் உண்மை. வளர்ச்சியில் தமிழகம் முன்னேறி உள்ளது என்று மார்தட்டிக் கொள்வது உண்மை என்றால் மத்திய அரசு தமிழகத்தின் கட்டமைப்புக்கு அளிக்கும் முக்கியத்துவமும் இந்த மாநிலத்துக்கு ஒதுக்கும் நிதியுமே காரணம்.

ன்று காரசாரமாக சொல்லி முடித்தார், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com