15,900 இந்தியர்கள் இதுவரை உக்ரைனிலிருந்து மீட்பு; இந்திய அரசு தகவல்!

15,900 இந்தியர்கள் இதுவரை உக்ரைனிலிருந்து மீட்பு; இந்திய அரசு தகவல்!

உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில உள்ள 20 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா எல்லைகளுக்கு வரச் செய்து, இதுவரை 15,900க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரப்பட்டதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்ததாவது:

உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ், 11-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் நேற்று  2,135 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். கடந்த 22-ம் தேதி முதல் இதுவரை 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். விமானப்படையின் ஜம்போ விமானங்கள் மூலம் 26 டன் நிவாரணப் பொருட்களையும் இந்தியா கொண்டு சென்றது.

இந்த சிறப்பு விமானங்களில் நேற்று 9 விமானங்கள் புதுடெல்லியிலும், 2 விமானங்கள் மும்பையிலும் தரையிறங்கியது. ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்திலிருந்து 6 விமானங்களும், புகாரெஸ்ட் நகரிலிருந்து 2 விமானங்களும், ரெசஸ்சோ நகரில் இருந்து 2 விமானங்களும், கோசிஸ் நகரில் இருந்து ஒரு விமானமும் இந்தியர்களை மீட்டு கொண்டு வந்தன.

இன்று மேலும் 8 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு 1,500 இந்தியர்கள் அழைத்து வரப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இவ்வாறு இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com