இன்று சர்வதேச மகளிர் தினம்; அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

இன்று சர்வதேச மகளிர் தினம்; அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

இன்று சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

நம் நாட்டில் ஆன்மிகம், அறிவுசார், சமூகம், அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்களின் தலைமைத்துவம் இருந்துள்ளது. அந்த வகையில்  அவ்வையார், வீர மங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, டாக்டர் அன்னி பெசன்ட் போன்ற்வர்கள் போற்றத்தக்கவர்கள். நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், தொழில்முனைவு, ஆராய்ச்சி, மேம்பாடு,நிர்வாகம் மற்றும் அரசியல் என அனைத்து தளங்களிலும் பெண்கள் தடம் பதித்துள்ளனர்.  அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தனது இலக்கை நிறைவேற்ற-பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது நமது தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பாகும்.

-இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததாவது..

பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வியெழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் நடைபோடும் திராவிட மாடல் அரசு, மகளிர்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 40 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்வு, தொடக்கப் பள்ளிகளில் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயர்வு,மகளிர் சுயஉதவிக் குழு, திருமண நிதி உதவி,கல்விக் கட்டணச் சலுகைகள், நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பெண்களுக்கான சமூக பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

-இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் மகளிர் தினத்துக்கான தமது வாழ்த்துச் செய்திகளை தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com