தி காஷ்மீர் பைல்ஸ்: திரைப்படத்தில் அரசியல் திணிப்பா?

தி காஷ்மீர் பைல்ஸ்: திரைப்படத்தில் அரசியல் திணிப்பா?

-ராஜ்மோகன் சுப்ரமண்யன்

திரைப்படம் எனும் ஊடகம்  கூர்மையான ஈட்டி போன்றது. அதனை மிகவும் தந்திரமாக பயன்படுத்தி பாஜக தனது ஆதரவை பெருக்கிகொள்ளும் யுக்தியை பார்த்து எதிர்கட்சிகள் திணற ஆரம்பித்துள்ளன. 'தி காஷ்மீர் பைல்ஸ்" எனும் திரைப்படம்தான் அந்த கத்தி!.

கடந்த மார்ச் 1-ம் தேதி விவேக் அக்னிஹோத்திரி இயக்கத்தில் ஜீ தொலைக்காட்சியின் தயாரிப்பாக இந்தியா முழுவதும் வெறும் 700 தியேட்டர்களில் வெளியானது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம். முதல் வாரம் அத்தனை விறுவிறுப்பான வரவேற்பு இல்லை. அதிகபட்சமாக ஒட்டுமொத்த வருவாய் ரூ. 3 கோடியை தாண்டவில்லை. இந்த திரைப்படம் பத்தோடு பதினொன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்தவாரம் நிலைமை அப்படியே தலைகிழாக மாறியது. பாஜக ஆளும் மத்திய பிரதேச அரசு இந்த திரைப்படத்தை காண அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்க, இப்படத்தை நோக்கிய தேசத்தின் பார்வை திரும்பியது. தொடர்ந்து பாஜக ஆளும்  மாநிலங்களான கர்னாடகா, கோவா, உத்திரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் விடுமுறையை அறிவிக்க அடுத்து திரையிடல் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்து  ஒரே வாரத்தில் ரூ. 60 கோடி வசூலை அள்ளியது 'தி காஷ்மீர் பைல்ஸ்'.

 பிரதமர் மோடி இந்த படத்தை பிரத்யோக காட்சியாக பார்த்த பிரதமர் மோடி, ''இப்படத்தை முடக்க சதி நடக்கிறது" என்று சொல்லப் போக, அதுவே இந்த படத்துக்கு ஒரு மறைமுக பிரச்சாரமாக மாறியது.  இப்படி அரசியல்வாதிகளும், அரசு இயந்திரங்களும் கொண்டாடும் வகையில் அப்படி என்ன பிரச்சனையை பேசுகிறது இந்த படம் ?

காஷ்மீரில் 1980-க்கும் 90-க்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கிருந்த இந்துக்களையும் இந்து பண்டிட்களையும் இஸ்லாமிய மதவாதிகள் வெளியேறச் செய்தார்கள் என்பது குறித்துப் பேசுகிறது இந்தப் படம். காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக குடியேறியனர் என்பதே படத்தின் கதைக்கரு.

1990 ல் உமர் பரூக் முதலமைச்சராக இருந்தபோது காஷ்மீரில் பெரும் கலவரம் நிகழ்ந்தது. அந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் கை கொஞ்சம் ஓங்க ஆயிரக்கணக்கில் காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். பலரை காஷ்மீரிலிருந்தே விரட்டினர். சொந்த பூமியான காஷ்மீரை விட்டுவிட்டு அகதிகளாக, ஜம்மு,பஞ்சாப், டில்லி என்று பல இடங்களுக்கு ஓடி உயிர்பிழைத்தனர் பண்டிட்டுகள். அந்த நிகழ்வை  ஒரு திரைப்படமாக வடிவமைத்துள்ளார் விவேக அக்னிகோத்திரி.

இந்த படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளை அத்தனையும் கற்பனை என்று சொல்லிவிடமுடியாது. சில காட்சிகள் நம்மை பதைபதைக்க செய்கின்றன.

தீவிரவாதிகளிடம்  இருந்து தப்பிக்க அரிசி டிரம்மில் ஒளிந்துகொள்கிறான் கணவன். அந்த டிரம்மை சுடுகிறான் தீவிரவாதி. அதில் இரத்தமும் அரிசியும் கலந்து வழிய அதனை தின்ன வேண்டும் என்று மனைவி வாய்களில் திணிப்பது…பார்க்கவே மனம் பதைக்கிறது.

ஒரு பண்டிட் கவிஞனை அவரது மகனோடு சேர்த்து நிர்வாணமாக மரத்தில் தொங்கவிடுவது. வசதி வாய்ப்புகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் பண்டிட்டுகளின் சொத்துக்களை சூறையாடி, ''இங்கே இருக்கவேண்டும் எனில் இசுலாத்திற்கு மாறுங்கள், இல்லையெனில் ஓடிவிடுங்கள். ஓட முடியாவிட்டால் செத்து மடியுங்கள்'' என்று கோஷமிடுகின்றனர் கலவரக்காரர்கள்

இத்தனையும் நிகழும்போது அங்கு ஆட்சியில் இருந்த அரசு அமைப்பு எதுவும் செய்யவில்லையா? அப்பொழுது ஆட்சியில் இருந்த பரூக் அப்துல்லா, இந்த கலவரத்தை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்கிறது இந்த படம்.

அதற்கு உதாரணமாக படத்தில் ஒரு காட்சி – அரசின் முக்கிய அதிகாரி முன்னிலையில் மூன்று விமானப்படை அதிகாரிகள் சுட்டு கொல்லப் படுகின்றனர். அதை வேடிக்கை பார்த்த பாதுகாவலர்களிடம் ''நீங்கள் இவரகளை பாதுகாப்பது உங்கள் கடமையல்லவா?  ஏன் காப்பாற்றவில்லை?'' என்று சீறுகிறார் அதிகாரி.. அதற்கு அந்த பாதுகாவலர்கள், ''அதிகாரிகளை காப்பாற்றினால் நாங்கள் உயிரோடு இருக்க முடியாது'' என்கிறார்கள்.

இப்படி அரசு இயந்திரங்களை மீறி வெறியாட்டம் போட யார் அனுமதித்தது? என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை.

ஒட்டுமொத்த படமும் இசுலாமியர்களின் வன்முறை காரணமாக இந்துக்கள் கொடுமையான முறையில் பாதிக்கப்பட்டதாக முடிகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக மதவாதப் பிரிவினை தூண்டப்பட்டது எப்படி எனபது போன்ற கேள்விகளுக்கு பதிலில்லை.

இந்த படத்தை பல மாநிலங்கள் தங்கள் கட்சி பிரச்சாரங்களுக்கு வெளிப்படையாகவே பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அறிவால் சிந்திக்க இயலாத ஒரு உணர்ச்சிகரமான யாரும் இப்படத்தை பார்த்தால் முதல் பார்வையில் யாரை எதிரியாக வைக்கவேண்டும், யாரை கருணையோடு பார்க்கவேண்டும் என்ற முடிவை சுலபமாக எடுத்துவிட முடியும். அது மதசார்பற்ற நாடாக நம்மை சொல்லிக்கொள்ளும் நம் நாட்டின் மதசார்பின்மைக்கு நிச்சயம் நன்மை பயக்காது.

படத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ஜவஹர்லால் பல்கலைகழகமும் ஏ என் யூ  என்று பெயர் மாற்றி காட்டப்படுகிறது. அதில் ''இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் இந்தியாவோடு காஷ்மீர் இருப்பதை விரும்பவில்லை'' என்பது போன்று பல்லவி ஜோஷி எனும் பேராசிரியை கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

ஆக மொத்தத்தில் பாஜக மற்றும் சங் பரிவார் குழுக்களுக்கு வலு சேர்க்கும் வகையில்  இந்த முழுப்படமும் உருவாகியுள்ளது என்று சொல்லலாம்.  மத்திய அரசின் ஆதரவு இப்படத்திற்கு மிகபெரிய அளவில் உள்ளது என்பதற்கு சான்றாக 'இம்" என்றால் கூட கத்தரியை தூக்கிவிடும் சென்சார், இப்படத்தில் பல இடங்களில் கண்டும் காணாமல் விட்டிருக்கிறது. இந்திய சினிமாவில் தவிர்க்கவே முடியாத மிக முக்கியமான திரைப்படமாக இப்படம் மாறக்கூடும். ஏன் எனில் இதை தொடர்ந்து பதில் தருகிறேன் என்று எதிரணி சில படங்களை உருவாக்ககூடும். ஏற்கனவே நம் நாட்டில் தலித்திய அரசியல் பேசுகிறேன் என்ற போர்வையில்  பல படங்கள் அணிவகுத்து கொண்டிருக்கின்றன. இனி மதவாத அரசியல் பேசுகிறேன் என்று புதிய படைப்புகள் அணிவகுத்தால் வியப்பில்லை.

மொத்தத்தில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' ஏற்றி வரும் பரபரப்பு எங்கு முடிகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com