
இந்தியாவில் சமீபத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, இதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்க கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட்டப் பட்டது. அப்போது கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சோனியாகாந்தியிடம் செயற்குழு கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது;
மாநில காங்கிரஸ் கமிட்டிகளை மறுசீரமைப்பு செய்ய வசதியாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் விருப்பப்படி நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பல்வேறு கோஷ்டி பூசலுக்கு சித்து காரணமாக இருந்தார் என்றும் அவரால்தான் பஞ்சாபில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாக கருதப்பட்டது.
தேர்தல் தோல்வி காரணமாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ராயசோடான்கர் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். அவரும் தனது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.