13 வருடங்களுக்குப் பின் அண்ணன் இளையராஜாவைச் சந்தித்தேன்: கங்கை அமரன் நெகிழ்ச்சி!
சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் இசைஞானி இளையராஜாவை அவரது சகோதரர் கங்கை அமரன் நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் பேசிய விபரம் வெளியாகி உள்ளது.
இளையராஜாவும் அவரின் சகோதரர் கங்கை அமரனும் சில வருடங்களாகப் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் 13 ஆண்டுகள் கழித்து நடந்த இந்த சந்திப்பும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த 'கரகாட்டக்காரன்' உள்பட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு குறித்து கங்கை அமரன் தெரிவித்ததாவது;
பல வருடங்களாக அண்ணனுடன் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் சமீபத்தில் அவரின் அழைப்பின் பேரில் நேரில் சென்று சந்தித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் சந்தோஷமாகப் பேசினோம். இனி எங்களுக்குள் பிரிவு நேராது. அண்ணனுடன் நெகிழ்ச்சியாகப் பேசிவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினேன்.
-இவ்வாறு கங்கை அமரன் தெரிவித்தார்.


