0,00 INR

No products in the cart.

350 வாரங்கள்; 10,000 மரங்கள்!

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

பொன்னேரியில் வசித்துவரும் ஸ்ரீதர்பாபு ஒரு வழக்கறிஞர். அவருக்கு வயது நாற்பத்தியேழு. அவர் தனது நண்பர்கள் சிலரை ஒருங்கிணைத்து 1997ல், ‘நேதாஜி சமூக நல அமைப்பு’ என்கிற சேவை அமைப்பினை உருவாக்குகிறார். அந்த அமைப்பின் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் சிற்சில வாரங்கள் தவிர்த்து, மொத்தம் முன்னூற்றி ஐம்பது வாரங்களின் ஞாயிறு விடுமுறை தினங்களில் சுமார் பத்தாயிரம் மரக்கன்றுகள் நட்டு, அவை இப்போது நிழல் தரும் மரங்களாக, பொன்னேரி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் செழித்து வளர்ந்து நிற்கின்றன.

‘‘மரக்கன்றுகள் நட்டு வைத்துவிட்டு வந்து விடுவதுடன் எங்கள் பணி நிறைவாகிப் போனதென்று நாங்கள் எண்ணுவதில்லை. அதனைத் தொடர்ந்து பராமரித்து, கண்காணித்து வந்தால்தான், நாம் வைத்த நூறு கன்றுகளில் எண்பது மரங்களாவது வளர்ந்து வரும். நாங்கள் இதனை ஒரு இயக்கமாகச் செய்து வருவதால், முன்னூற்றி ஐம்பது வாரங்களில் பத்தாயிரம் மரங்கள் என்கிற இலக்கினை எங்களால் எட்டிப்பிடிக்க முடிந்தது” என்று கூறும் அவர், “ரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதன் பின்னர் ரத்த தான முகாம்களை நடத்தினோம். இதுவரை ஐம்பது இடங்களில் ரத்த தான முகாம்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். அதேபோல், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போல உதவிகள் வேண்டி சட்டென்று அரசு அலுவலகங்களுக்குச் சென்று வந்து விட இயலாது. எங்கள், ‘நேதாஜி சமூக நல அமைப்பினர்’ தாங்களாகவே குறிப்பிட்ட அவர்களை நேரில் சென்று சந்தித்து, மனுக்கள் எழுதி வாங்கி அவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத் தருகிறோம்” என்றும் கூறுகிறார் வழக்கறிஞர் ஸ்ரீதர்பாபு. தொடர்ந்து அவரிடம் பேசியபோது

மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு எப்போது முன்வந்தீர்கள்?

நேதாஜி மர வங்கி’ என்கிற ஒன்றினை 2012ல் தொடங்கினோம். அந்தந்தப் பகுதி கோயில் திருவிழாக்களில்போது மக்களுக்குக் கட்டணமில்லாத மரக் கன்றுகள் வழங்கினோம். நமக்கு அறிமுகமான நண்பர்களின் இல்லத்தில் நடைபெறும் விசேஷங்களில் அன்பளிப்பாக மரக்கன்றுகள் வழங்கினோம். அதனைப் பெற்றுச் செல்பவர்களில் நூற்றுக்கு எழுபது, எண்பது பேராவது மரக்கன்றினை நட்டு வளர்த்து விடுவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு. அதன் பின்னர்தான் மற்றவர்களுக்கு நாம் அன்பளிப்பாக மரக்கன்றுகள் தருகின்ற அதேநேரத்தில், நம் பகுதிகளில் களத்தில் நாமே நேரடியாக இறங்கி, மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாமே என்று தோன்றியது. 2013ல் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆங்காங்கு மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்க்கத் தொடங்கினோம்.

வக்கீலாகப் பணியாற்றும் உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதா?

நான் மட்டுமா இதில் ஈடுபட்டுள்ளேன்? இல்லை. என்னுடைய நண்பர்கள் இதனைக் கேள்விப்பட்டு இந்த அமைப்பில் ஆர்வமுடன் வந்து இணைந்துள்ளனர். இவர்களைக் கொண்டுதான் இதனை நிறைவேற்ற முடிகிறது. சனி அல்லது ஞாயிறுக்கிழமைகளில் ஏதேனும் ஒன்றினை இதற்கெனத் திட்டமிட்டு ஒதுக்கி விடுவோம். குறிப்பிட்ட நாளில் ஓரிடத்தில் ஒன்றிணைந்து கிளம்புவோம். மரக்கன்றுகள் நட்டு அதற்கு கூண்டு வேலி கட்டி, தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்து விடுவோம்.

அன்று ஒரு நாள் மட்டும் அதனைச் செய்தால் போதுமா? அதனை அம்போ என விட்டுவிட்டால் பின்னர் அது எப்படி வளரும்?

அந்தப் பாராமுகம்தான் எங்களிடம் இல்லை. நகரில் ஒரு இடத்துக்கோ அல்லது ஒரு கிராமத்துக்கோ செல்லும்போது முதலில் அங்குள்ள முக்கிய மனிதர்களைச் சந்தித்துப் பேசுவோம். அவர்களையும் இந்தப் பணியில் இணைத்துக்கொள்வோம். ஓரிடத்தில் மரக்கன்று நட்டால், அதன் அருகாமை வீட்டுக்காரர்களைத் தவறாமல் அந்த மரக்கன்றுக்கு தண்ணீர் விட்டு வருமாறு கேட்டுக்கொள்வோம். ஒவ்வொரு நாளும் அவர்களில் யாராவது ஒருவராவது தண்ணீர் விடுவார்கள். எப்போதேனும் பின்னர் அந்தப் பகுதி வழியாக நாங்கள் போய் வர நேர்கையில், அப்போது நாங்கள் நட்டு வைத்த மரக்கன்றுகளைக் கண்காணித்து வருவோம். சில மாதங்கள் கழித்துப் போய் பார்த்தால் நன்கு மரமாக வளர்ந்து நிற்கும். அந்த நேரத்தில் அந்த மரத்தினைக் காண்கையில் மனதுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

எந்தெந்த ஊர்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வைத்துள்ளீர்கள்? இது உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும் திருப்திகரமாக உள்ளதா?

பொன்னேரி நகரப் பகுதிகள், தடப்புரம்பாக்கம், கொடூர், ஆளாடு, அரசூர், மீஞ்சூர், மேட்டுப்பாளையம், கூடுவாஞ்சேரி, ஆண்டார்குப்பம், பழவேற்காடு போன்ற கிராமங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வைத்துள்ளோம். ஏரிக்கரைகளில் பனை விதைப் பந்துகள் ஆங்காங்கு புதைத்துள்ளோம். ஊரின் பொதுவான சாலையோரங்களில் புங்கன், பூவரசு, நாவல், இலுப்பை போன்ற மரங்களை நட்டு வளர்த்து வைத்துள்ளோம். கோயில்களில் வில்வம், நாகலிங்கம் மரங்களை வளர்த்து வைத்துள்ளோம். எனக்கும், பொதுவாக எங்கள் குழுவின் ஒவ்வொருவருக்கும் இது மிக மிக ஆத்ம திருப்தியான செயல்பாடாகும். ஒவ்வொரு மரக்கன்று நட்டு வைக்கும்போதும் எங்கள் ஒவ்வொருவர் மனதுக்குள்ளே இதுதான் தோன்றும். ‘இந்த மரக்கன்று நட்டு வைக்கும் நான், நாளையோ அதன் பின்னரோ இருப்பேன் என்று சொல்ல முடியாது. எனினும், நான் நட்டு வைத்த இந்த மரக்கன்று என் ஆயுளுக்குப் பின்னரும் நன்றாக எல்லோர்க்கும் நிழல் தரும் மரமாக இருக்கும்’ என்று எண்ணிக்கொள்வோம். இதைவிட, எங்கள் ஒவ்வொருவருக்கும் வேறென்ன வேண்டும்? என்கிறார் பொன்னேரி வழக்கறிஞர் ஸ்ரீதர் பாபு.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

0
-தனுஜா ஜெயராமன்    மகாபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது.   சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்  என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல...

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

0
-தனுஜா ஜெயராமன். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.   "சிவரஞ்சனியும்...