​சிவ அம்சமாய் சாமுண்டா தேவி!

​சிவ அம்சமாய் சாமுண்டா தேவி!
Published on

 2

ராஜி ராதா

மாசலப் பிரதேசம், காங்கரா ஜில்லாவில், காங்கராவிலிருந்து 24 கி.மீ. தொலைவில், பானெர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ சாமுண்டா தேவி திருக்கோயில். பாலாம்பூரிலிருந்து பயணித்தால் 10 கி.மீ. தொலைவில் இக்கோயிலை அடையலாம்.

ஒருசமயம் சண்டா, முண்டா என்ற இரு அரக்கர்கள் இப்பகுதியில் வசித்த மக்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தனர். அத்துடன் அங்கு தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கும் பலவித கேடுகளை விளைவித்தனர். அரக்கர்களின் தொல்லை தாங்காத மக்கள், "இவர்களின் தொல்லைகளுக்குத் தாங்கள்தான் முடிவுகட்ட வேண்டும்" என ரிஷிகளிடம் கோரினர்.

அதை ஏற்றுக்கொண்ட ரிஷிகள், அன்னை சக்தியை கடுமையாகப் பிரார்த்தனை செய்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் முன் தோன்றிய சக்தி தேவி, "கவலை வேண்டாம். விரைவில் எனது அம்சமான பகவதி கௌசகி இதற்கு முடிவு கட்டுவாள்" எனக் கூறி மறைந்து விட்டாள்.

இதனிடையே சண்டா, முண்டாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் எல்லை மீறி, மக்கள் அலறியபோது, பகவதி கௌசகி அவர்கள் முன் தோன்றினாள். அத்துடன் அரக்கர்களைக் கொன்று ஒழிக்க, தனது புருவத்திலிருந்து சந்திரிகா எனும் ஒரு சக்தியை உருவாக்கி, அரக்கர்களுடன் போருக்கு அனுப்பினாள்.

சந்திரிகாவும் சக்தியின் அம்சம் என்பதனால், ஆக்ரோஷ வடிவம் எடுத்து அரக்கர்களுடன் கடுமையாகப் போராடி, இருவரையும் கொன்று, அவர்களின் தலைகளை ஒரு தட்டில் வைத்து பகவதி கௌசகியிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

சந்திரிகாவின் வெற்றியைப் பாராட்டிய பகவதி கௌசகி, "நீ சண்டா, முண்டாவை கொன்றதனால், இன்று முதல் நீ, 'சாமுண்டா' என அழைக்கப்படுவாய். அதோடு இனி, மக்களும் உன்னை தங்களின் குலதெய்வமாக வணங்கி வழிபடுவர்" என ஆசி கூறி மறைந்தாள். இந்த சாமுண்டா தேவிக்குத்தான் மேற்கூறிய இடத்தில் கோயில் அமைந்துள்ளது.

நானூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவன், ஒரு நாள் கோயில் பூசாரியிடம், "அம்மனுக்குப் புதிய இடத்தில் விஸ்தாரமாய் கோயில் கட்ட வேண்டும்" எனக் கூறினான். அன்று இரவு பூசாரி அதே நினைவாக உறங்க, கனவில் துர்கா தேவி தோன்றி ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, "அங்கு சாமுண்டாவின் சிலை தென்படும். அந்தச் சிலையை எடுத்த இடத்திலேயே கோயில் கட்டி, அம்மனையும் அங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள்" எனக் கூறி மறைந்தாள்.

பூசாரியும் தான் கண்ட கனவை மன்னனிடம் கூற, அவன் ஆட்களை வைத்து மண்ணில் புதையுண்டிருந்த சிலையைத் தேடி கண்டுபிடித்தான். இன்று நமக்கு தரிசனம் தருவது இந்த சாமுண்டா தேவியின் திருச்சிலைதான்.

வடநாட்டு அம்மன் கோயில்களில் பெரும்பாலும் நேரடியாகவே கருவறைகள் அமைந்திருக்கும். அதேபோல், கோயில்களும் சாதாரண கட்டடம் போலவே இருக்கும். உள்ளே நீண்ட வழியாக கருவறை நோக்கிச் செல்ல வேண்டும். வழி நெடுகிலும் அலங்காரம் உண்டு.

கருவறையில் அம்மன் சிவப்புப் புடைவை போர்த்தப்பட்டு, முகத்தில் செந்தூரம் பூசப்பட்டு, கண்களில் ஆக்ரோஷம் பொங்க, காட்சி தருவதை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இவளே காங்கரா பகுதி மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகிறாள். அதனால் அம்மனின் மீது மாலைகளுக்குப் பஞ்சமேயில்லை. சுற்றிலும் அலங்காரங்கள் படு ஜோர்! மொத்தத்தில், அம்பிகை கம்பீரமாகக் காட்சி தருகிறாள்! திருப்தியாக தரிசித்து விட்டு வெளியே வரலாம்.

கருவறைக்கு வெளியில் சிவபெருமான் நந்திகேஸ்வரராகக் காட்சி தருகிறார். இதனால் இந்தக் கோயிலை, 'ஸ்ரீ சாமுண்டா நந்திகேஸ்வரர் திருக்கோயில்' என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கோயிலின் உள்ளே ராமாயண, மகாபாரதக் காட்சிகளை அழகு ஓவியங்களாக தரிசிக்கலாம்.

சாமுண்டா தேவியை சிவனின் அம்சம் எனக் கூறுவோரும் உண்டு. இந்த தேவி, புலித்தோல் உடுத்தி, கபால மாலை அணிந்து, கோர பற்களும், மூன்று கண்களுமாய், நான்கு கரங்களுடன், சில இடங்களில் எட்டு கரங்களுடன், ஓவியங்களாகவும்

சிற்பங்களாகவும் பல இடங்களில் காட்சி தருகிறாள். சில இடங்களில் சூலம், கபாலத்தை கைகளில் ஏந்தி, பிணத்தின் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறாள்.

குளிர் காலங்களில் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், பிற்பகல் 1 முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்துள்ளது. இந்தக் கோயிலில் சாமுண்டா தேவிக்கு செய்யப்படும் ஆரத்தி மிகவும் விசேஷம். இது, காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. வெய்யில் காலத்தில் மட்டும் இரவு 8 மணிக்கு இந்த ஆரத்தி நடைபெறும்.

இந்தக் கோயிலில் வருடத்துக்கு இருமுறை நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த நவராத்திரி மார்ச் ஏப்ரல் மாதங்களிலும், சாரதா நவராத்திரி செப்டம்பர் அக்டோபர் மாதங்களிலும் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் வந்து கலந்து கொள்கின்றனர். இக்கோயிலுக்கு மிக அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பதான்கோட் என்பது குறிப்பிடத்தக்கது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com