spot_img
0,00 INR

No products in the cart.

​ஆடல் காணீரோ…

மாலதி சந்திரசேகரன்

மாதங்களில் ஸ்ரேஷ்டமான மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது, ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும்தான், ‘திரு’ எனும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில், ‘ஆர்த்ரா’ என்று கூறுவர். இதுவே ஆருத்ரா என்றாயிற்று.

சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை என்பது எல்லோருக்கும் தெரியும். பிறப்பும் இறப்பும் இல்லாதவர்; ஆதியும் அந்தமும் இல்லாதவர். ‘பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்’ என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது. இவருக்கு திருவாதிரை நட்சத்திரம் உகந்த நட்சத்திரம் என்பது எப்படி வந்தது? அதைப் பற்றிய சில புராணக் குறிப்புகளைப் பார்ப்போம்.

திரேதாயுகா’ என்ற பெண், பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவிற்கு திருமணம் நடைபெற்றது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடைபெறும். ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா, ‘‘பார்வதி தேவியேஉன் பக்தையான என்னை இப்படிச் சோதிக்கலாமா? உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்?’’ என்று கூறி அழுதாள்.

அப்போது பார்வதி தேவி அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க விருப்பம் கொண்டாள். யமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவிற்கும் அவள் கணவனுக்கும் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெற்றது.

ஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் சிவபெருமானை நிந்தித்து, ஒரு முறை தாருகா வனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்கள் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட, கயிலைநாதன் பிட்சாடனர் ரூபமெடுத்து பிட்சை கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.

இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். பரமசிவனை அழிக்க, வேள்வி ஒன்றை உண்டாக்கினார்கள். வேள்வித் தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன், தீப்பிழம்பு ஆகியவற்றை வருவித்து, அதை சிவபெருமான் மீது ஏவினார்கள். சர்வேசுவரன், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அப்படி நிகழ்ந்ததும் ஒரு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான். அதுவே, ஆருத்ரா தரிசனம் என்று கூறப்படுகிறது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே’

என்று திருநாவுக்கரசர் கூறியதுபோல், ஒரு குமிண் சிரிப்பு அந்த உதடுகளில் நெளிகின்றது. ‘இவ்வுலகத்து மர்மங்களை எல்லாம் நான் அறிவேன்’ என்னும் சிரிப்பாக அது இருக்கலாமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

டனக் கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணு தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டார் ஆதிசேஷன். அதுபற்றி மஹாவிஷ்ணுவிடம் கேட்க, தாருகாவனத்தில் சிவபெருமான் ஆடிய அற்புத நடனம் பற்றிச் சொல்ல, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தைக் காண ஆவல் ஏற்பட்டது. அதற்காக பாதி உடல் மனிதனாகவும், மீதி உடல் பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் இருந்தார். அவருக்காக சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆடலைக் காணத்தானே ஆதிசேஷனும், புலிக்கால் முனிவரும் தில்லையில் தவம் கிடந்தார்கள்.

ருத்ரா தரிசன நாள் அன்று சிவபெருமானுக்கு களியை ஏன் நிவேதனம் செய்கிறார்கள்? அதற்கும் ஒரு புராண நிகழ்வு உண்டு.

சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் விறகு விற்று பிழைத்து வந்தார். சிவபக்தரான அவர், தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பிறகு தான் உணவருந்துவார். ஒரு நாள் அதிக மழை பெய்ததால் விறகுகள் ஈரமாயின. விறகுகளை விற்க முடியாமல் போனதால், களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால், யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெருமான், தானே ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.

சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல், எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். சேந்தனார் வீட்டுக்குக் களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்குக் களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை திருநாள் ஆனது.

ம்பெருமான் ஈசன் ஆடும் நடனத்திற்கு ஏற்பவே இப்பூவுலகம் அசைகிறது என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். அணுவை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட அணுவின் அசைவானது நடராஜர் ஆடும் நடனத்தைப் போலவே இருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். அதை உணர்ந்தோ என்னவோ திருமந்திரம் அருளிய திருமூலர், ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று கூறுகிறார்.

சிவபெருமான் தேவர்களுக்காக 42 தாண்டவங்களும், முருகனுக்காக மூன்று தாண்டவங்களும், திருமாலுடன் ஒன்பது தாண்டவங்களும், அம்பிகையுடன் 36 தாண்டவங்களும், தானே ஆடியது 18 தாண்டவங்கள் என மொத்தம் ஆடிய 108 சிவ தாண்டவங்கள் புகழ் பெற்றவை. மார்கழி மாதத்தில் நடராஜ பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவர் என்பது ஐதீகம். மேலும், மார்கழி மாத திருவாதிரை உத்ஸவம் அனைத்து சிவன் கோயில்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. அவை :
ரத்தின சபை திருவாலங்காடு, இங்கு ஆடிய தாண்டவத்திற்கு, ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று பெயர்.
கனக சபை சிதம்பரம், இங்கு ஆடிய தாண்டவத்திற்கு, ‘ஆனந்தத் தாண்டவம்’ என்று பெயர்.
வெள்ளி சபை (ரஜத சபை) – மதுரை, இங்கு ஆடிய தாண்டவத்திற்கு, ‘சந்தியா தாண்டவம்’ என்று பெயர்.
தாமிர சபை திருநெல்வேலி, இங்கு ஆடிய தாண்டவத்திற்கு, ‘திருத்தாண்டவம்’ என்று பெயர்.
சித்திரசபை திருக்குற்றாலம், இங்கு ஆடிய தாண்டவத்திற்கு, ‘திரிபுர தாண்டவம்’ என்று பெயர்.

இறைவன் தனது ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் ஐந்தொழில்களைப் புரிகிறான் என்கின்றன சாஸ்திரங்கள். ஆருத்ரா தரிசனம் நாள் அன்று சுமங்கலிகள், திரேதாயுகாவைப்போல், சுமங்கலித்துவம் பெற வேண்டும் என்பதற்காக நோன்பு இருந்து, கழுத்தில் சரடு கட்டிக்கொள்ளும் வழக்கம் சில இல்லங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுமங்கலிகள் மட்டுமல்லாமல், கன்னிப் பெண்களும் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காக நோன்பிருந்து சரடு கட்டிக்கொள்கிறார்கள். அப்படி நோன்பு மேற்கொள்பவர்கள் ஆருத்ரா தரிசனம் அன்று காலை பூஜைகளை முடித்துக்கொண்டு, பகல் பொழுது முழுவதும் உபவாசம் இருந்து, பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் இருக்கும்பொழுது, மாலை நேரத்தில் களியை நிவேதனம் செய்து, சரடினைக் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு களியையே உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடல்நலக் குறைவால் மருந்து, மாத்திரை உட்கொள்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், உபவாச சமயத்தில் பழங்கள் அல்லது பழச்சாறு போன்ற நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதை அறிவோம். கோயில்களில், ஈசனின் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழிந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால், நடராஜ ரூபத்துக்கோ ஒரு வருடத்தில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அவை :

1. சித்திரையில் திருவோணம் நட்சத்திரத்தன்றும்,
2. ஆனியில் உத்திரம் நட்சத்திரத்தன்றும்,
3. ஆவணியில் சதுர்த்தசி திதியன்றும்,
4 புரட்டாசியில் சதுர்த்தசி திதியன்றும்,
5.
மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தன்றும்,
6.
மாசியில் சதுர்த்தசி திதியன்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
திருவாதிரை உள்ளிட்ட, ஆறு அபிஷேகங்களையும் கண்டு, அந்த முக்கண்ணனை வேண்டிக்கொள்ள, அனைத்துத் துன்பங்களும் தீரும் என்பது ஐதீகம். கங்காதரனை வணங்கி நிற்போம். வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.

 

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

​சாந்தம் அருளும் சாம்பா தசமி!

0
- P.பாலகிருஷ்ணன் நமது இந்தியக் கலாசாரத்தில் கோகுலாஷ்டமி, காலபைரவாஷ்டமி, விஜயதசமி, சாம்பா தசமி போன்ற சில விசேஷங்கள், திதிகளின் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. தை மாதம் பிறக்கும் மகர சங்கராந்தி நன்னாளை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு...

​அம்பிகையின் அருள்!

0
- வி.ரத்தினா, ஹைதராபாத் எனது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார்....

இறைவன் ஏற்கும் விசேஷ நிவேதனங்கள்!

0
lகொல்லூர், ஸ்ரீ மூகாம்பிகைக்கு இரவு அர்த்த ஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. lசிதம்பரம், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா...

​பலன் தரும் ஸ்லோகங்கள்!

0
- எம்.வசந்தா ​உடல் உஷ்ணம் குணமாக... ‘பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம’ பொருள் :...

​தீபப் பலன்!

1
- பொ.பாலாஜிகணேஷ் ‘விளக்கேற்றிய வீடு வீண் போகாது’ என்று கூறுவர். தீபச் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச் சுற்றி பாசிடிவ் எனர்ஜி...