ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 13 – திருமாலுக்கு உவமை திருமாலேதான்!

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 13 – திருமாலுக்கு உவமை திருமாலேதான்!

பேயாழ்வார் உதித்தது ஒரு செவ்வல்லி மலரில். அந்த மலர் இருந்தது ஒரு கிணற்றில். அந்தக் கிணறு இருந்தது சென்னையின் திருமயிலை யில். இவரைத் திருமாலுடைய வாளின் அம்சம் என்பார்கள். வைணவ இலக்கியத் தொகுப்புகளில் மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவர். அந்த நூல் நூறு செய்யுள்களை உடையது. வெண்பா இலக்கணத்துக்கு ஏற்ப எழுத்தப்பட்டவை அவை. பேயாழ்வார் சைவ, வைணவ மதங்களின் ஒற்றுமையை நாடியவர். பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்களும் இவரது சம காலத்தவரே ஆவர்.

இவருக்கு திருமாலிடம் பக்தி மிக அதிகம். அதீத பக்தியால் இவர் செய்த பல செயல்களும் வித்தியாசமானவையாக இருந்தன. தம்மை மறந்த நிலையில் கண்களைச் சுழற்றுவார்; வெறி வந்தாற்போலச் சிரிப்பார்; அழுது தொழுவார்; ஆடிப் பாடுவார்; இறைவனை பிரிந்திருக்கும் பிரிவுத் துயர் கொண்டு பிதற்றிக் கொண்டிருப்பார். பேய் போல இவரது செய்கைகள் இருந்தமையால் இவருக்கு, பேயாழ்வார் என்று பெயராயிறு.

இவரது பாடல்களில் உவமைகள் நளினமாக வெளிப்பட்டு; படிப்பவர் களைப் பரவசமூட்டும். 'இறைவனின் திருமேனி பொன் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மலை போல இருக்கிறது' என்பதை,

'பொன்தோய் வரை மார்பில் பூந்துழாய் – அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே'

என்று குறிப்பிடுகிறார்.

இறைவனின் திருவடியைப் பற்றிச் சொல்லும்போது, அடுக்கடுக்காக உவமைகள் அருவி போல் கொட்டுகின்றன. பிறவி நோயைத் தீர்க்கும் மருந்து என்றும், வேண்டியவற்றை எல்லாம் பெறும் பொருள் எனவும், உண்ண உண்ணத் திகட்டாத அமுதம் எனவும் அடுக்கிக் கொண்டே போகிறார்.

'மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண்மா லாங்கே…'

என்னும் பாசுரத்தில்தான் இந்த வார்த்தை விளையாட்டு!

வண்ணங்களெல்லாம் மாலவனின் வடிவழகை நினைக்க வைக்கின்றன பேயாழ்வாருக்கு. இறைவனின் திருவடிகளின் நிறம் தாமரை போலும் சிவப்பு; பரந்தாமன் திருமேனியின் நிறமோ, கடல் போல நீலம்; திருமுடி யின் நிறமோ சூரியனின் வெண்மை! என்னே உவமை நயம்!

'அடிவண்ணம் தாமரை; அன்றுலகம் தாயோன்
படிவண்ணம் பார்க்கடல் நீர்வண்ணம் – முடி வண்ணம்
ஓராழிவெய்யோன் ஒளியும் அஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு'

இன்னோர் பாசுரத்தில் இப்படிச் சொல்கிறார்: 'பசுமையான கடலைப் போல வண்ணம்கொண்ட இறைவனைத் தினந்தோறும் போற்றி உருகு பவர்கள் தங்கள் ஐம்புலன்களையும் அலையவிடாமல் ஒரு கதவால் சார்த்தி வைப்பார்களாம். அந்தக் கதவுதான் பக்தி! கதவு என்று ஒன்று இருந்தால், தாழ்பாளும் வேண்டுமல்லவா? அந்தத் தாழ்தான் ஞானம் ஆகும்' என்கிறார். நுட்பமான உவமை நயம் கொண்ட அந்தப் பாடல் இதோ!

'அறிவென்னும் தாள் கொழுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி – மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாள்தோறும்
பைங்கோத வண்ணன் படி'

தாமரை மலருக்கு சூரியனைக் கண்டால் மலர்தலும், சந்திரனைக் கண்டால் கூம்புதலும் இயல்பு. பந்தாமனுடைய நாபியில் இருக்கும் தாமரை மலருக்கும் அந்த இயல்பு உண்டாம். அதுவும் மலர்ந்தும் கூம்பியும் இருக்கிறது. ஆனால், மலர்ந்தது சூரியன்போல இருந்த மாலவனின் வலக்கையில் இருக்கும் சுதர்ஸன சக்கரத்தைப் பார்த்து.

சரி… கூம்பியது? ஓ! அதுவா? திருமாலின் இடக்கையில் இருக்கும் வெண்மையான பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கைப் பார்த்ததும் அது நிலவைப் போல இருந்ததால் கூம்பியதாம். இப்படி ஒரே சமயத்தில் மலர்வதும் கூம்பியதுமாயிருக்கிற தாமரை மலரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் பேயாழ்வார்!

'ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண்போது – ஆங்கைத்
திகிரி சுடர என்றும்; வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து'

என்னதான் பிறவற்றை உவமையாகச் சொன்னாலும் உள்ளம் ஆற வில்லை அந்த உன்னத ஆழ்வாருக்கு. எல்லா ஜீவன்களிடத்தும் இருப்பது எம்பிரானே; தவம் செய்வோரும் அவனே; விண்மீன்களும் அவனே; தகிக்கும் நெருப்பும், ஓங்கி உயர்ந்த மலைகளும், வானிலே மிதக்கும் சந்திர, சூரியர்களும் மாலவனே. அப்படி இருக்கும்போது திருமாலுக்கு உவமை திருமாலேதான் என்று சாதிக்கிறார் பேயாழ்வார்!

(உவமைகள் தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com