லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவர உள்ள லியோ திரைப்படத்திற்கான 4 மணி காட்சிகளுக்கு, அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேரம் எதுவும் குறிப்பிடாமல் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தினை அவரது ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி சிறப்பு காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல 9 மணிக்கு முதல் காட்சி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதி வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தனர்.
எனவே இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 17ஆம் தேதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளதாகவும், கடந்த முறை நான்கு மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதேபோல லியோ திரைப்படம் ட்ரெய்லர் வெளியான போதும் ஒரு தியேட்டர் ரசிகர்களால் சூறையாடப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டு, இதில் அதிக சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.