சமீபத்தில் பிஹைண்ட் வுட்ஸ் ஷ்ருதி ஹாசன் ஃபேன்ஸ் ஃபெஸ்டிவல் என்றொரு நிகழ்ச்சி நடத்தியது. அதில் ஒரு பங்கேற்றுப் பேசிய ஷ்ருதி ஹாசன் தனக்கு சுத்தமாகப் விருப்பமில்லாத விஷயம் என்று ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அது அவருக்குப் பிடிக்காது, ஆனால் இயக்குநர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொன்ன ஷ்ருதி, இனிமேல் தான் நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் அப்படி காட்சி அமைப்புகள் இல்லாமல் இருந்தால் சந்தோஷமாக உணர்வதாகச் சொன்னார். அப்படி என்ன காட்சி அது? அது தான் ஸ்னோ வித் ஸாரி டான்ஸ்.
தென்னிந்திய சினிமாக்களின் அபத்தங்களில் ஒன்று இது. பனிமலைகளில் பாடல் காட்சிகளைப் படமாக்குவது வாடிக்கை. அப்படி படமாக்கும் போது தென்னிந்திய சினிமா நாயகர்கள் குளிருக்கு இதமாக முழு ஜெர்கின் உடை அணிந்து கொண்டு நடனமாட, நாயகிகள் மட்டும் அன்றும், இன்றும், என்றென்றைக்குமாக புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அல்லது மாடர்ன் உடைகள் எனில் தொடையை மறைக்காத ஸ்க்ர்ட்டுகள், தோள்பட்டையை மறைக்காத டாப்ஸ்கள் என அணிந்து கொண்டு நடமாடவோ, நடனமாடவோ வேண்டும். இதைத்தான் ஷ்ருதி ஹாசன் தனக்கு சுத்தமாக விருப்பமில்லாத விஷயம் என்கிறார்.
தனது விருப்பமின்மையை இயக்குநர்களிடம் அவர் எப்போதாவது தெரிவித்திருக்கிறாரா? என்ற கேள்விக்கு ஷ்ருதி அளித்த பதில்;
’சொன்னா கேட்பாங்களா? டைரக்டர்ஸ் லைக் ஸ்னோ டான்ஸ் இல்லையா? ’ என்றார்.
சரி தான். இயக்குநர்களிடம் கேட்டால் அவர்கள் மாத்திரம் என்ன சொல்லி விடப் போகிறார்கள்?
ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், அதனால் தான் நாங்கள் அப்படிப் பட்ட காட்சிகளை வைக்கிறோம் என்று சொல்லப் போகிறார்கள்.
பதில் சொன்ன ஷ்ருதி, சமீபத்தில் கூட நான் அப்படி ஒரு ஸ்னோ டான்ஸ் ஆடி விட்டுத்தான் வந்தேன் என்றார்.
ஷ்ருதி ஹாசன் மட்டுமல்ல பல்வேறு சந்தர்பங்களில் தென்னிந்திய நாயகிகள் முன் வைக்கும் விருப்பமின்மை தான் இது.
ஆனால் இதற்கு தீர்வு தான் இதுவரையிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை.