- பி.ஆர்.லட்சுமி
சென்னை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வரும் இடம் மெரீனா கடற்கரை! அதை விட்டால் அஷ்டலட்சுமி கோவில், வேளாங்கண்ணி மாதா கோவில், எக்மோர் மியூசியம், திருப்பதி தி.நகர் பெருமாள் கோவில், கிண்டி பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, கோட்டூர்புர நூலகம், கன்னிமரா நூலகம், பிர்லா பிளானிட்டோரியம், தலைமைச் செயலகத்தின் அருகில் உள்ள கோட்டை மியூசியம் எனக் கூறுவார்கள்.
இப்போது இந்த வரிசையில் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள காவலர் மியூசியம் மக்களின் பார்வைக்காக அமைந்துள்ளது.
அரசுப் பேருந்துகள் தமிழ்நாடு சுற்றுலாவிற்கென தனியாக இயங்குகின்றன. அதையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஏழை மக்கள் பயன்படுத்துவதற்கான சுற்றுலா அட்டவணை அவர்களிடம் இல்லை. அவர்களது சுற்றுலா திட்டத்தில் காவல்துறை மியூசியம் இல்லாதது பெருங்குறை.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமான அடிப்படை காவல்துறை நிர்வாகம்தான். அவர்கள் ஆற்றிய பணி குறித்து பல செய்திகள் அங்கு நிறைந்து காணப்படுகின்றன.
கால வரலாறுகளை ஆக்சிஜன் ஊக்கிகளாக மரங்கள் நமது இதயத்தை வருடியபடி காவல்துறையின் தியாகங்களை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. பழைய காவல்துறை அலுவலகத்தை மியூசியமாக மாற்றி ஐபிஎஸ் அதிகாரிகள் புகைப்படங்களை அங்கு அமைத்துள்ளதால் வருங்கால மாணவர்கள் சமுதாயம் தாம் படைக்க நினைக்கும் வாழ்க்கைப் பாதையை தெளிவாக்கிக் கொள்ள இயலும். அதற்கு உதவியாக பல அதிகாரிகளின் புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்துச் செய்தி முதல் சந்தனக்கடத்தல் வீரப்பன், பிரதமர் ராஜீவ்காந்தி வெடிகுண்டு கொலைச் செய்தி வரை அங்கு தெளிவான புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டுகள் எத்தனை வகைகள் இருக்கின்றன, அவை எவ்வாறு வெடிக்க வைக்கப்படுகின்றன, எங்கெல்லாம் வெடிகுண்டுகள் வைக்கப்படுகின்றன போன்ற விபரங்களை அழகாக அங்கிருக்கும் பெண் அதிகாரி எடுத்துரைக்கிறார். பொம்மை, பொக்கே, குக்கர், பெட்டி என்பது வெடிகுண்டுகள் வைக்கும் இடங்கள் என அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் புத்தகத்திலும் குண்டுகள் வைக்கலாம் என அங்கிருந்தவர் விளக்கினார்.
மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் என்பதற்காக காவலர்கள் மக்களின் நண்பர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
காவலர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள், கள்ளநோட்டுகளைக் கண்டுபிடிக்கும் இயந்திரங்கள், முதன்முதலில் கள்ளநோட்டு அறிமுகமான விஷயங்கள், புகைப்படக் கருவிகள் போன்ற பல செய்திகளைத் தாங்கி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பயன்படுத்தும் நாய்கள் குறித்த வீடியோவும் அங்கு அமைந்துள்ளது.
கத்திகளால் அமைக்கப்பட்டிருந்த அரியணை நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த விதத்தைக் காணும்போது கத்திகள் எத்தனை இரத்தக் கறைகளைக் கண்டிருக்குமோ! போரில்லாத வாழ்க்கை அமையுமோ! என்ற உணர்வுகளை உண்டாக்கியது.
போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தும் பல கருவிகள் அங்கு இடம் பெற்றிருந்தன. இது தவிர பண்டைக்காலத்தில் பயன்படுத்திய இரும்புக் கருவிகளும், கற்சிலைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
சுற்றுலா செல்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள்:
சென்னைக்கு வருபவர்கள் முதலில் தங்குவதற்கு தங்களது வசதிக்கு ஏற்றவாறு ஹோட்டல் உணவகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
சென்னையில் அம்மா உணவகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வருவதால் மக்கள் அம்மா உணவகங்களை நம்பி உண்ணலாம். சுத்தமாக உணவுகள் தயாரிக்கப்படுவதால் உணவகங்களை விட குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கின்றன. ரயில்வே நிலையங்களுக்கு அருகில் கிடைக்கும் ஹோட்டல்களைத் தேர்ந்தெடுப்பதால் கால விரயம் தவிர்க்கப்படுகிறது. (ரயில்வே நிலையத்தில் அம்மா உணவகங்கள் இருந்தால் இன்னமும் வசதியாக இருக்கும்.) மேலும், எக்மோர் ரயில்வே நிலையத்திலேயே தங்குவதற்கான இட வசதிகளும் கிடைப்பதால் சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் அங்கு கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.