14 rules to follow for a green home environment
14 rules to follow for a green home environment https://m.indiamart.com
பசுமை / சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாமும் உதவலாமே: இதோ 14 எளிய குறிப்புகள்!

நாராயணி சுப்ரமணியன்

சுற்றுச்சூழல் பற்றிய பிரச்னைகளைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் நம் அனைவருக்குள்ளும் ஒரு சிறிய கேள்வி எழும்: ‘நம் அளவில் ஏதாவது செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவ முடியுமா?’ வாழ்வின் அன்றாட நெருக்கடிகளுக்கு மத்தியில் நம்மாலான சிறு முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடிந்தால் நன்றாக இருக்கும், இல்லையா? அதற்கான சில எளிமையான குறிப்புகளைப் பார்க்கலாம்.

* முடிந்த வரை தண்ணீர் வீணாவதைக் குறைக்கவும். காய்கறி மற்றும் அரிசி கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றுவது போன்ற மறுசுழற்சி முறைகளைப் பின்பற்றவும்.

* பழுதடைந்து ஒழுகும் குழாய்களை உடனடியாக மாற்றவும். வீணாகும் ஒவ்வொரு சிறு துளி நீரும் பெருவெள்ளமாக மாறும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

* மின்சார சேமிப்புக்கு நம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். அடுத்த முறை பல்புகளை மாற்றும்போது எல்.ஈ.டி. பல்புகளை வாங்கி மாட்டுங்கள். அவை குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.

* தொலைக்காட்சி, ஏ.சி. போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கும்போது ‘ஸ்டாண்ட்-பை’ மோடில் வைக்க வேண்டாம். பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை உடனே அணைத்துவிடவும்.

* கூடியவரையில் உணவுப்பொருட்களை வீணடிக்க வேண்டாம். வாங்கி வந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்துங்கள். அவை அழுகி வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கோடைக்காலங்களில் உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுப்போய்விடும் என்பதால் கவனமாக இருங்கள்.

* குப்பையை மக்கும் குப்பையாகவும் மக்காத குப்பையாகவும் தனித்தனியாகப் பிரித்து குப்பைத் தொட்டியில் சேருங்கள்.

* கூடியவரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து விடுங்கள்.

* உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் காய்கறி மற்றும் பழக் கழிவுகளை வைத்து கம்போஸ்டிங் முறையில் உரம் தயாரியுங்கள்.

* வசதி இருந்தால் வீட்டின் மொட்டை மாடியில் சூரியத் தகடுகளைப் பொருத்தலாம். சூரிய ஒளி மின்சாரத்தில் முதற்கட்ட முதலீடு அதிகம் என்றாலும் சில ஆண்டுகளிலேயே நமக்கு லாபம் வரும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்.

* வீட்டில் உள்ள இட வசதிக்கு ஏற்ப செடிகளை வளர்த்து பயனடையுங்கள்.

* வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது அவற்றின் செயல்திறனை கவனித்து முடிவெடுக்கவும். இது மின்சார கட்டணத்தையும் குறைக்கும்.

* வெளியில் செல்லும்போது தவறாமல் வீட்டிலிருந்தே தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.

* கூடியவரையில் வீட்டில் இருக்கும்போது டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் போன்றவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.

* சூழலைப் பேணவேண்டியதன் அவசியத்தைப் பற்றி குழந்தைகளிடம் அடிக்கடி உரையாடுங்கள். இது வருங்கால தலைமுறையினரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும்.

இவற்றை எல்லாம் பின்பற்றினாலே உங்கள் வீடு பசுமையைப் பேணும் வீடாக மாறிவிடும்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT