The Impact of Plastic Pollution on Our Oceans. 
பசுமை / சுற்றுச்சூழல்

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.. மனிதர்கள் ஆடும் விபரீத விளையாட்டு!

கிரி கணபதி

பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாக மாறியுள்ளது. பிளாஸ்டிக்கின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் மோசமான கழிவு மேலாண்மை நடைமுறைகளால், கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், இப்போது நாம் பெரிதளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதற்கான விலையை நாம் கொடுக்கப் போகிறோம். அதற்கு முன்னதாக கடலில் பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகளை இந்த பதிவின் வாயிலாகத் தெரிந்து கொள்வோம்.

  1. கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு: பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடலில் வாழும் உயிரினங்கள் பெரும் அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன. ஆமைகள், கடற்பறவைகள், டால்பீன்கள் மற்றும் திமிங்கலங்கள் போன்ற கடல் விலங்குகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகளை உணவு என நினைத்து தவறாக உட்கொண்டு அவதிக்குள்ளாகின்றன. இதனால், உட்புறக் காயங்கள், செரிமான அமைப்பில் அடைப்பு மற்றும் பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் சூழல் நிலவுகிறது. மேலும் கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் குப்பைகளில் சிக்கிக் கொள்வதால் நகர முடியாமல் இறந்து போகின்றன. 

  2. மோசமாகும் சுற்றுச்சூழல் அமைப்புகள்: பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்வேறு வழிகளில் சீர்குலைகிறது. பெரும்பாலும் கடலின் மழைக்காடுகள் என அழைக்கப்படும் பவளப்பாறைகள் பிளாஸ்டிக் குப்பைகளால் பாதிக்கப்படுகின்றன. பவளப்பாறைகள் பல கடல் வாழ் உயிரினங்களின் முக்கியமான வாழ்விடமாக உள்ளதால், அவற்றின் சீரழிவு, பல உயிர்களின் அழிவுக்கு மறைமுகமாக வழிவகுக்கிறது. 

  3. உணவுச் சங்கலியில் மாறுபாடு: பிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் நேரடியாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, நாம் உணவாக உட்கொள்ளும் கடல் உணவுகள் மாசுபடுவதால், மனிதர்களும் மறைமுகமாக பாதிக்கப்படுகின்றனர். கடல் வாழ் உயிரினங்கள் மைக்ரோபிளாஸ்டிகை உட்கொள்வதால், அவற்றின் திசுக்களில் அவை படிந்துவிடுகிறது. இத்தகைய உணவுகளை மனிதர்கள் உட்கொள்ளும்போது, பிளாஸ்டிக்கின் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மனிதர்களைத் தாக்கி புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும். 

  4. கடலோர மக்கள் பாதிப்பு: பிளாஸ்டிக் மாசுபாடு கடல் சுற்றுச்சூழலைக் கெடுப்பது மட்டுமில்லாமல், தங்களின் வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியிருக்கும் கடலோர சமூகங்களையும் பாதிக்கிறது. இதனால் கடலோர சுற்றுலா, மீன்பிடித் தொழில், உள்ளூர் பொருளாதரங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. மேலும் கடற்கரை ஓரங்களில் குவிந்து கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையின் இயற்கை அழகைக் கெடுத்து அப்பகுதியில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. 

இப்படி, பல வழிகளில் பிளாஸ்டிக் மாசுபாடு நம்மையும் இந்தச் சுற்றுச்சூழலையும் பெருமளவுக்கு பாதிக்கிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, முறையான கழிவு மேலாண்மையை மேம்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது மூலமாகவே, இவ்வுலகில் நேர்மறையான தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும். இதைப் புரிந்துகொண்டு, நாம் ஒவ்வொருவரும் விலைமதிப்பற்ற சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். 

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT