தினை கேப்சிகம் தோசை ... image credit - youtube.com
உணவு / சமையல்

திகட்டாத தினை கேப்சிகம் தோசை செய்து அசத்துங்கள்!

சேலம் சுபா

சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது பெருகியுள்ளது. தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்றாகும். இது கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் இயற்கையில் காரத்தன்மை கொண்ட மிகவும் சத்தான தானியம்  தினை.  அனைத்து சமையல் உணவுகளிலும் அரிசி மற்றும் கோதுமைக்கு பதிலாக தினைகளை பயன்படுத்தலாம். சமீப காலமாக பொதுவாக பயன்படுத்தப்படும் தினையான ராகியுடன் தினைகளான சாமை, வரகு, குதிரைவாலி போன்ற பலவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

நன்கு ஊறவைத்து அரிசிபோல சமைப்பதே தினைகளை சமைக்கும் சிறந்த வழிமுறை. தினைகளில் இருக்கும் அதிக நார்ச்சத்து முழுவதையும் நாம் பெற்று ஆரோக்கியம் காண தினைகளைத் தவிர்க்காமல் உணவில் சேர்ப்பது சிறந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாம் அரிசியின் சுவைக்கு மிகவும் பழகிவிட்டதால் இன்னும் பலர் அரிசிக்கு பதில் தினைகளை ஏற்க மறுக்கின்றனர்.

இட்லி, தோசை, பொங்கல், கிச்சிடி போன்ற பொதுவான மற்றும் எளிதான உணவுகளில் தினை சேர்த்து முதலில் குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தலாம். ருசியாக இருந்தால் எந்த உணவையும் வேண்டாம் என சொல்லமாட்டார்கள். இதோ தினையுடன் பாசிப்பருப்பு மற்றும் குடைமிளகாய் ருசியும் இணைந்த தோசை ரெசிபி உங்களுக்காக.      

தேவையான பொருட்கள்:
முழு பாசிப்பருப்பு - 1 கப்
ஃபாக்ஸ்டெயில் தினை (தினை) ½ கப்
குடைமிளகாய் - 1 (நடுத்தர அளவு)
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி -  சிறிய துண்டு
கறிவேப்பிலை அல்லது கொத்து மல்லித்தழை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் -2 டே. ஸ்பூன்

செய்முறை:
தினை மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி  6 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த தண்ணீரை  வடிகட்டி அதனுடன் அரிந்த குடைமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, புளி மற்றும் சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.

ஒரு தோசை தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் தடவி ஒரு சீரான வட்டத்தில் மாவை ஊற்றி  தோசையாக பரப்பவும். தோசையைச் சுற்றி சிறிது எண்ணெய் தடவி, கீழ் பக்கம் வெந்ததும் மெதுவாக திருப்பி சிறிது எண்ணெய் சேர்த்து மறுபுறம் மிருதுவாக மாறும் வரை வேகவைத்து எடுக்கவும். சூடான தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

இதில் உங்களுக்கு விருப்பமான  கீரை வகைகளையும்  சேர்த்து அரைக்கலாம். ஃபாக்ஸ்டெயில் தினைக்கு பதிலாக வேறு எந்த தினை வகையையும் பயன் படுத்தலாம். கலர் கலரான காய்கறிகளை துருவி மேலே பரத்தி சீஸ் உடன் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் உணவாகத் தரலாம்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT