நல்ல கணவன் அல்லது மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நல்ல உறவுகள் அமைவதும் கொடுப்பினை. நல்ல நட்பு அமைவது நம் கையில்தான் இருக்கிறது. அவர்களை எப்போதும் நம் வாழ்வில் தக்கவைத்துக் கொள்வது மிக முக்கியம்.
எல்லா உறவுகளும் நட்பும் பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துகொள்ளும் தன்மையினால்தான் அமைகின்றன. அவை நீடித்து இருக்க வேண்டும் என்றால் அவரவருக்கான எல்லைக்கோட்டை வகுத்துக்கொள்வது மிக மிக அவசியம்.
என்னதான் கருத்தொருமித்த காதல் தம்பதிகள், உயிர் நண்பர்கள், நெருங்கிய உறவுகள் ஆனாலும் அவர்களுக்கிடையேயும் சில குறிப்பிட்ட எல்லைக் கோடுகள் உண்டு. அவற்றை இருவருமே தாண்டாமல் இருக்கும்போதுதான் அந்த உறவும் நட்பும் இனிக்கும். அன்பும், காதலும் பலப்படும்.
தனிப்பட்ட இடம் (பெர்சனல் ஸ்பேஸ்): காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள், நெருங்கிய உறவுகள் இவர்களுக்கு இடையே அன்பும் நெருக்கமும் இருப்பது அவசியம். அனுபவப் பகிர்தலும் நல்ல நினைவுகளை உருவாக்குவதும் முக்கியம். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல எவ்வளவு நெருக்கமான தம்பதிகள் அல்லது நண்பர்கள் என்றாலும் அவரவருக்கான பர்சனல் ஸ்பேஸ் எனப்படும் தனிப்பட்ட இடத்தை கொடுத்தே ஆக வேண்டும். அந்த எல்லைக் கோடுகளை யாருமே தாண்டக்கூடாது. எல்லா நேரங்களிலுமே அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதும் அவர்களுடனே நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று விரும்புவதும் ஒருவிதமான மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உறவையும் நட்பையும் பாழாக்கிவிடும்.
அவர்களுக்குப் பிடித்த வேலையை செய்யும்போது அல்லது பிடித்த பொழுதுபோக்கில் மூழ்கி இருக்கும்போது அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களை அந்த வேலையை அல்லது பொழுதுபோக்கை அனுபவிக்க அனுமதிப்பதுதான் அவர்களுக்கு நாம் தரும் மரியாதையும் கௌரவமும். அந்த இடைவெளி மிக மிக அவசியம். ‘’என்னை விட உனக்கு அந்தப் பொழுதுபோக்கு அல்லது வேலை முக்கியமா?’’ என்று கேட்பது அபத்தம்.
இணக்கமாக இருப்பது: இணக்கமாக இருப்பது என்றால் ஒருவர் சொல்லும் எல்லா விஷயங்களுக்கும் தலையாட்டிக்கொண்டு அவர்கள் விருப்பப்படி நடப்பது அல்ல. இணக்கம் என்பது எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தானாக முன்வந்து அன்பைப் பரிமாறிக் கொள்ளுதல். அதேசமயம் அவரவர்க்கு விருப்பமானது என்ன என்று கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு திரைப்படத்திற்கு செல்வதாகட்டும் பிரயாணத்திற்கு திட்டமிடுவதாகட்டும், வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் எடுப்பதாகட்டும், இருவரின் இணக்கமான பதில்களும் மிக முக்கியம். பிரியத்துக்குரியவரின் மனதைப் புரிந்துகொண்டு அவர் விரும்பும் படமோ அல்லது இடத்திற்கோ செல்லலாம். அடுத்த முறை தனது விருப்பத்திற்கேற்ப அவரும் நடந்து கொள்வார்.
உணர்வுபூர்வமான புரிந்துகொள்ளல்: உண்மையான காதல், அன்பு, நட்பு என்பது ஒருவரை சரியாகப் புரிந்துகொள்வதுதான். அதாவது அவர்களுடைய உணர்வுகளை, எண்ணங்களை மதித்து புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடப்பதுதான். மாறாக தன்னுடைய உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் மேல் திணிப்பது அல்ல. ஒரு விஷயம் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் அதை மதித்து மீண்டும் அதை செய்யாமல் இருக்கும் போதுதான் அந்த உறவும் நட்பும் இனிக்கும். உதாரணமாக, பூஜை செய்யும்போது வீட்டில் எந்தவித சத்தமும் இருக்கக் கூடாது என்று அந்தப் பெண் விரும்பினால் அதற்கு மரியாதை கொடுத்து டிவியின் ஒலியை குறைத்து வைப்பது அன்பின் வெளிப்பாடு. அதை விடுத்து, ‘’நீ பூஜை செய். நான் டிவி பார்க்கிறேன்’’ என்பதல்ல.
தனி உரிமையை மீறக்கூடாது: தனி ஸ்பேஸ் கொடுப்பது போல, தனிப்பட்ட உரிமையையும் மதித்து நடக்க வேண்டும். அன்புக்குரியவரின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து துருவித் துருவி கேள்வி கேட்பது அந்த உறவு அல்லது நட்பையே ஆட்டம் காண செய்துவிடும். காதலியோ, கணவரோ அல்லது நண்பரோ வெளியில் சென்றால், ‘’நீ எங்கே போன? யாரைப் பார்த்த? என்ன பேசின?’’ என்று ஒவ்வொன்றையும் கேட்பது அபத்தம். அவர்களாக சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்டு துளைத்தெடுத்தால் அன்பில் விரிசல் நிச்சயம்.
எதிர்மறையான விஷயங்களை அனுமதிப்பது: உறவு மற்றும் நட்பு விரிசலுக்கு உள்ளாவதற்குக் காரணம் எதிர்மறையான விஷயங்களால்தான். எந்த தம்பதியருக்குள்ளும் அல்லது எந்த நெருங்கிய நண்பர்களுக்கும் எல்லா நேரங்களிலுமே எல்லா நாட்களுமே சரியாக இருந்தது என்று சொல்ல முடியாது. அவர்களுக்குள்ளும் சில மோசமான நேரங்கள், வாக்குவாதங்கள், சில உரசல்கள் வரும். இது இயற்கை. ஆனால், அவை அடிக்கடி நிகழும்போது சண்டைகள் குற்றச்சாட்டுகள் அதிகரித்து அமைதி இன்மை நிலவும்போது அந்த உறவு, நட்பில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது.
பொருளாதார எல்லைகளைத் தாண்டுதல்: நெருங்கிய நண்பர் உங்களிடம் பணம் கடன் கேட்கலாம். உங்களுக்குத் தர விருப்பமில்லாமல் இருக்கலாம். தயங்கிக்கொண்டே பணத்தை கொடுக்கிறீர்கள். ஆனால், மறுபடியும் மறுபடியும் பணம் கேட்டு நண்பர் தொந்தரவு செய்யும்போது ஒருவிதமான தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாகிறீர்கள். அந்தப் பணத்தை அவர்கள் சரியான நேரத்தில் திருப்பித் தராமல் இருப்பது நட்பின் அடிப்படையையே கேள்விக்குறியாகிவிடும். இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். நெருங்கிய உறவுகளுக்குள்ளும் பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது.