வீடு / குடும்பம்

குடும்ப சண்டையில் வெற்றி முக்கியமில்லை; சமாதானமே முக்கியம்!

பொ.பாலாஜிகணேஷ்

தெளிந்த எண்ணமும், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனமும் உடைய எந்தக் கணவன், மனைவியும் சண்டை போட விரும்புவது கிடையாது. இருப்பினும் சில நேரங்களில், அப்படிப்பட்டவர்கள் இடையேயும் தவிர்க்க முடியாமல் சண்டை வருவதெல்லாம் தற்போது மிகவும் சாதாரணமாகப் போய் விட்டது.

கணவன், மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்படுகையில், எரிச்சலூட்டுவது போன்று ஏதாவது ஒன்றை ஒருவர் சொல்கிறார். உடனே சத்தம் அக்கம் பக்கம் வீட்டுக்குக் கேட்கிறது. இதனால் கோபம் தீப்பொறி போல் பறக்கிறது. அதன் விளைவாக குத்தலான பேச்சுகள் உணர்ச்சிப் பிழம்பாகப் பற்றி எரிகின்றன.

அதன் பிறகு இருவரும் சில வாரம் மௌன விரதம் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது துளிகூட அவர்கள் இருவரும் வாய் திறக்க மாட்டார்கள். நாளாக நாளாகக் கோபம் மெதுவாகத் தணிகிறது. ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இப்பொழுது சமாதானமாகி விடுகிறார்கள்; இன்னொரு முறை பிரச்னை வரும் வரை.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை வந்தாலும் சமாதானமாக இருக்க முடியும். குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீச வேண்டுமா? அல்லது புயல் அடிக்க வேண்டுமா? என்பது கணவன், மனைவி கைகளில்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய துயரமான நிலை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். எப்படி? இரண்டு பேரும் ஏட்டிக்குப் போட்டி பேசிக்கொண்டே இருந்தால்தான் குடும்பத்தில் சண்டை வரும். யாராவது ஒருவர் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். ஒருவர் கோபத்தைக் கிளறும்படி பேசினாலும் மற்றவர் பதிலுக்கு எதுவும் பேசாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவி இருவர் இடையே யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை, குடும்பத்தில் சண்டை இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்.

கோபத்தில் கணவனோ அல்லது மனைவியோ யோசிக்காமல் எதையாவது பேசி இருக்கலாம். அல்லது அவர்களுடைய மனம் காயப்பட்டதால் அப்படிப் பேசி இருப்பார்கள். அதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். கணவன், மனைவி உறவு என்பது உலகத்திலேயே மிகவும் அற்புதமான ஒன்று! அது புனிதமானது. அதைவிட உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இருக்க முடியாது.

சோபியா லோரன் - உலகின் அழகிய பெண் எனும் சிறப்பு பெற்ற இத்தாலிய நடிகை!

How to Make a Yummy Indian Sweet Dessert - ‘Coconut Ladoo’

சரும ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? 

இளமைக்கு நாங்க கியாரண்டி நீங்க ரெடியா?

பொதி சுமக்கும் கழுதைகள் பற்றிய சில தகவல்கள்!

SCROLL FOR NEXT