honesty! 
Motivation

நேர்மை எனும் கிரீடத்தைத் தலையில் சூடுங்கள்!

ஆர்.வி.பதி

திகாரம் மிக்க பெரிய பதவியில் இருக்கும் பலர் தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எப்போதும் தலைக்கனத்துடன் நடந்து கொள்ளுவதை நாம் அன்றாடம் பார்க்க முடிகிறது. ஒரு மனிதனுக்கு பதவி எனும் அதிகாரம் வழங்கப்படுவது தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சக மனிதர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே என்பதை ஒவ்வொரு நொடியும் உணரவேண்டும். பதவி என்பது சொர்க்கத்தின் திறவு கோல். பதவி என்பது நியாயமான முறையில் நேர்மை வழியில் பிறருக்கு உதவுவதற்காகத்தான்.ஆனால் பலர் இதை உணருவதே இல்லை.

பெரிய பதவிகளில் இருப்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். சிலர் தங்கள் அலுவலகத்திற்குச் சென்றது முதல் வீடு திரும்பும் வரையில் தான் ஒரு பெரிய அதிகாரி என்ற எண்ணத்திலேயே செயல்படுவர். அவர் வீடு திரும்பியதும் தன் பதவிக் கிரீடத்தை கழற்றி வைத்து ஒரு சாதாரண குடும்பத் தலைவராக நடந்து கொள்ளுவர். வேறு சிலரோ இருபத்திநான்கு மணி நேரமும் தான் சர்வ வல்லமை படைத்தவர் என்ற எண்ணத்துடனே வாழ்பவர். பலர் தூங்கும் போது கூட அதிகார மமதையுடன் தூங்குபவர்களாக உள்ளனர்.

தனது அதிகாரத்தை நேர்மையான முறையில் தன்னை நாடி உதவி கேட்டு வரும் மக்களுக்குச் சரியான முறையில் பயன்படுத்துபவர் அவர் வாழ்ந்த காலத்திற்குப் பிறகும் மக்களால் மதிக்கப்பட்டு அவர்களின் இதயங்களில் வாழ்பவராக இருப்பார். அத்தகையவர்களை மக்கள் அடிக்கடி நினைவுபடுத்தி அவரைப் புகழ்ந்த கொண்டே இருப்பார்கள். இத்தகையவர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்களாகவும் எண்ணிக்கையில் மிகக்குறைவானவர்களாகவும் இருப்பார்கள். மக்கள் தங்களைப் போற்றும் அதிகாரியாக வாழவேண்டும். தூற்றும்படியான அதிகாரியாக வாழவே கூடாது.

அறுபது வயதுக்குப் பிறகு பணி ஓய்விற்குப் பின்னர் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தாதவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கும். அவரிடம் பணிபுரிந்த அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சாதாரண பதவியில் இருந்தவர்கள் கூட அவரைக் கண்டால் விலகிச் செல்லும் நிலைமையை சந்திக்க நேரிடும். பதவியில் இருந்த போது விழுந்து விழுந்து வணக்கம் சொன்னவர்கள் பணி ஓய்விற்குப் பின்னர் விலகி விலகிச் செல்வதைக் காணும்போது மனதில் ஒருவித வலி ஏற்படும். பதவியில் இருக்கும்போது தேவையின்றி யாரையும் துன்புறுத்தாமல் பணியாற்ற வேண்டும். தன்னிடம் பணிபுரிபவர்கள் தவறு செய்யும்போது நிச்சயம் கண்டிக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.

பதவியில் இருக்கும் வரை மட்டுமே பிறருக்கு உதவ முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். முடிந்த வரை ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நியாயமான உதவிகளை நேர்மையான முறையில் செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களின் வாழ்த்து உங்களையும் உங்கள் தலைமுறையையும் நன்றாக வாழ வைக்கும்.

பலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் “உங்களுக்கு நிறைய செய்திருக்கலாம். ஆனால் செய்யாமல் விட்டு விட்டேன்” என்று கூறி வருத்தப்படும் பலரை நம்மால் பார்க்க முடிகிறது. பதவி அவர்களின் கண்களை மறைத்ததன் விளைவாகவே இது நிகழ்ந்திருக்கிறது.

பதவி என்பது கடவுள் உங்களுக்கு அளித்த மாபெரும் வரம். இது எல்லோருக்கும் சுலபத்தில் கிடைப்பதில்லை. பெரிய பதவியில் உள்ளவர்கள் அன்பை மனதில் சுமந்து நேர்மை எனும் கிரீடத்தை தலையில் சூடி எல்லோரும் எளிமையாக அணுகும் விதத்தில் பணியாற்றி விதிகளுக்கு உட்பட்டு நேர்மையான முறையில் நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவி செய்யுங்கள். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உங்கள் பதவி இருக்க வேண்டும். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களை மதித்து வாழ்த்துவார்கள். போற்றிப் புகழுவார்கள். ஏழை எளிய மக்களின் மனதிலிருந்து வெளிவரும் இத்தகைய வாழ்த்துகள் உங்களை ஒரு கவசம் போலக் காக்கும். இது நிச்சயம்.

கவிஞர் கண்ணதாசனின் பாடலில் ஒரு குறை! எந்த பாடல்? என்ன நடந்தது?

உங்கள் மனநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுகிறதா? சோகமும் கோபமும் வாட்டுகிறதா? புறக்கணிக்காதீர்கள்!

அச்சச்சோ! மழைக்காலத்தில் சாதாரண ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துறீங்களா? போச்சு! 

கோபத்தை தணிக்க உதவும் வாழ்வியல் மந்திரங்கள்!

மாடித் தோட்டத்தில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

SCROLL FOR NEXT