Color Changing Shiva Lingam - Awe-inspiring Panchavarneswarar https://www.hindutamil.in
ஆன்மிகம்

நிறம் மாறும் சிவலிங்கம் - பிரமிப்பூட்டும் பஞ்சவர்ணேஸ்வரர்!

நான்சி மலர்

கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருநல்லூர் என்ற தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவன், ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பஞ்சவர்ணத்தில் இப்பெருமான் நிறமாறுவதால் இந்த பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலில் சிவபெருமான் கல்யாணசுந்தரராகவும், பார்வதி தேவி கிரிசுந்தரியாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இக்கோயில் சிவலிங்கம் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை நிறம் மாறிக் காட்சி தருவதாக அமைந்துள்ளது.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தபோது அனைத்து தேவர்களும் ஒரே இடத்தில் கூடியதால் பூமியின் எடை ஒரே பாகத்தில் அதிகமானது. இதை சரிசெய்வதற்கு அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பி வைத்தார். அப்படி அவர் சென்று நின்ற இடமே திருநல்லூராகும். அந்த இடத்திலிருந்தே அகத்தியரும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தார். அதுமட்டுமின்றி, அங்கேயே ஒரு சிவலிங்கத்தையும் நிறுவினார். அதுவே இத்தல திருக்கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலாகும். இந்தக் கோயில் 275 பாடல்கள் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

இக்கோயில் கருவறையில் அருளும் சிவலிங்கம் எந்தப் பொருளால் ஆனாது என்பதை இதுவரை சரியாகக் கணிக்க முடியவில்லை. நாள் ஒன்றுக்கு ஐந்து முறை நிறம் மாறும் இந்த சிவலிங்கம் காலை 6 முதல் 8.24 மணி வரை செம்பு நிறத்திலும், 8.25 முதல் 10.48 மணி வரை சிவப்பு நிறத்திலும், 10.49 முதல் பகல் 1.12 மணி வரை தங்க நிறத்திலும், 1.13 முதல் 3.36 மணி வரை பச்சை நிறத்திலும், 3.37 முதல் மாலை 6 மணி வரை சொல்ல முடியாத ஒரு நிறத்திலும் காட்சி தருகிறது. அது கயிலாய மலையை வலம் வரும்போது அந்த மலை இப்படிப்பட்ட நிறத்தில்தான் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்தக் கோயிலும் கயிலாயத்துக்கு இணையான மதிப்பைப் பெறுகிறது.

திருமணத்தடை போக்கும் கல்யாணசுந்தரேஸ்வரர்: திருமணஞ்சேரியை போலவே இங்கேயும் திருமணம் தடைபடும் ஆண், பெண்களுக்காக பரிகாரங்களும், பூஜைகளும் செய்யப்படுகின்றன.

பாண்டவர்களின் தாயான குந்தி தேவி இந்தக் கோயில் குளத்தில் குளித்துவிட்டு கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசித்ததாக சில வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள வில்வ மரமே முதல் முதலாக தோன்றிய, ‘ஆதிமரம்’ என்று கூறப்படுகிறது.

பக்தியோடு கோயிலுக்குச் செல்பவர்கள் மட்டுமில்லாமல், அதிசய நிகழ்வான நிறம் மாறும் சிவலிங்கத்தைக் காண வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்தக் கோயிலுக்குச் சென்று ஈசனை தரிசனம் செய்துவிட்டு வரலாம். ஒரு நாள் முழுவதும் தங்கி, பொறுமையாகப் பார்த்தால் மட்டுமே இந்த சிவலிங்கம் நிறமாறும் அதிசயத்தைக் கண்டு தரிசிக்க முடியும்.

இக்கோயில் பாபநாசத்தில் இருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணம் - பாபநாசம் - உத்தானி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருநல்லூர் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது. ஆட்டோவில் செல்வது இன்னும் சுலபமாக இருக்கும். இக்கோயில் காலை 7.30 முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 5.30 முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

பிரண்டைத் துவையல் பெருகும் பலன்கள்!

பாகிஸ்தானின் மறைமுக எச்சரிக்கை... சாம்பியன்ஸ் ட்ராபி இந்தியாவில் நடைபெறவுள்ளதா?

SCROLL FOR NEXT