Do you know the history of Arudra Darshan? https://tamil.oneindia.com
ஆன்மிகம்

ஆருத்ரா தரிசனத்தின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?

ஆருத்ரா தரிசனம் (27.12.2023)

பொ.பாலாஜிகணேஷ்

டலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்த உலகப் புகழ் பெற்ற நடராஜர் ஆலயத்தில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விசேஷம் இம்மாதம் 18ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விசேஷத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்றும், ஆருத்ரா தரிசனம் நாளையும் நடைபெறும். உலகமெங்கும் இருந்து சிவனடியார்கள் கூட்டம் சிதம்பரத்தில் அருள் நடனம் புரியும் ஆடல் வல்லானின் அற்புத நடனத்தைக் காண தவம் கிடப்பார்கள். மார்கழி ஆருத்ரா தரிசனம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் சுருக்கமாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி, இதே நாளில்தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். அதேபோல், இன்றுதான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

இந்நாளிலேயே பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்று கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி வழிபடுகின்றனர்.

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாகும். மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம்தான். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை இன்னும் சிறப்பு சேர்ப்பதாகும்.

ஆருத்ரா தரிசனம்: மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோயில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும். நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான படைத்தல், அழித்தல், அருளல், மறைத்தல், காத்தல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தபோது, மகாவிஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தார் மகாலட்சுமி தாயார். கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ‘ஆஹா! அற்புதம்! அற்புதமான காட்சி!’ என்று மனமுருகி சத்தம் போட்டார்.

அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தாயாரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண் விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர்.

‘சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு. மேலும், அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூவுலகில் பிறந்து தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீயும் காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா!’ என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார்.

அவரது உடல் இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார். அந்த தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT