ஆன்மிகம்

மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

எம்.கோதண்டபாணி

லைநகர் சென்னையின் புறநகர்ப் பகுதியான மாங்காடு திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில். மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு வைகுண்டப் பெருமாள் வகையறா திருக்கோயில்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயிலின் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

வாமன அவதாரத்தில் மஹாபலி சக்கரவர்த்தி தனது யாகம் நிறைவு பெறும் பொருட்டு, யாகத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் தானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே தானம் பெறும் பொருட்டு வந்தார் வாமனர். வாமனராக வந்திருப்பவர் சாட்சாத் பகவான் மஹாவிஷ்ணு என்பதையும், அவர் கேட்டுப்பெறும் தானத்தினால் நிகழப்போகும் விபரீதங்களை தனது ஞானத்தின் மூலம் அறிந்துகொண்ட சுக்கிராச்சாரியார், அதை மன்னன் மஹாபலியிடம் தெரிவித்து தானத்தைத் தடுக்க முற்படுகிறார்.

ஆனாலும், ‘அந்த பகவானே தன்னிடம் தானம் பெற வந்திருப்பது தான் பெற்ற பெரும் பாக்கியம் என்றும், தான் வாமனருக்கு தானம் கொடுப்பதனால் ஏற்படப்போகும் எந்த விபரீதத்தையும் சந்தோஷமுடன் ஏற்றுக்கொள்வதாகவும்’ மன்னன் மஹாபலி கூறுகின்றான். மன்னனின் கூற்றை ஏற்றுகொள்ள மனமில்லாத அசுர குரு சுக்கிராச்சாரியார், ஒரு வண்டின் உருவெடுத்து தானம், அளிக்க நீர் வார்க்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக்கொள்கிறார். இதையறிந்த வாமனராக வந்த பகவான் மஹாவிஷ்ணு ஒரு தர்ப்பை புல்லினால் கமண்டலத்தின் துவாரத்தில் குத்த, அசுர குரு சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

அதன் பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் ஒருபுறமிருக்க, கண் பார்வையை இழந்த சுக்கிராச்சாரியார் தனக்கு பார்வை வேண்டி ஈசனிடம் வேண்ட, சிவபெருமான் அவரிடம், ‘பூலோகத்தில் பார்வதி தேவி பஞ்சாக்னியில் தவம் மேற்கொண்டிருக்கும் மாங்காடு திருத்தலத்துக்குச் சென்று தவம் இயற்றும்படி கூறுகிறார். அதன்படியே சுக்கிராச்சாரியாரும் மாங்காடு திருத்தலம் வந்து தவமியற்ற, அவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், சுக்கிராச்சாரியார் இழந்த கண் பார்வையை மீண்டும் அவருக்குக் கிடைக்க அருள்பாலிக்கிறார். தனக்குக் கண் பார்வை கிடைக்க அருளிய ஈசன் இந்தத் திருத்தலத்திலேய உறைந்து, பக்தர்கள் வேண்டும் வரங்களை வழங்கி அருள்பாலிக்க வேண்டும் என்று ஈசனிடம் வேண்டுகிறார் சுக்கிராச்சாரியார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இந்தத் திருத்தலத்தில், ‘ஸ்ரீவெள்ளீஸ்வரர்’ என்ற திருநாமத்தோடு உறைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மாங்காடு அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் கடந்த சில தினங்களாகவே நடைபெற்று வந்தது. அதனையடுத்து, கோயில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், தற்போது இத்திருக்கோயிலின் கும்பாபிஷேப் பெருவிழா நடைபெற உள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி கணபதி பூஜை மற்றும் ஹோமத்தோடு தொடங்கிய இந்த கும்பாபிஷேக விழா, தொடர்ந்து பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்களோடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்வேறு பக்தி நிகழ்ச்சிகள், சுவாமி திருக்கல்யாணம் மற்றும் வீதியுலாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படியெல்லாம் செய்யலாமா? செய்தால், அனுபவித்துதானே ஆகணும்!

தோட்டக்கலைப் பண்ணையில் சோதனைகளை சாதனைகளாக மாற்றிய பெண் விவசாயி ஜெயந்தி!

வானவில் ஆறு ‘கேனோ கிரிஸ்டல்ஸ்’ (Cano Crystales River) பற்றித் தெரியுமா உங்களுக்கு?

பெண் பாவம் பொல்லாதது!

உங்க வீட்ல சமையல் ருசிக்கனுமா? இதோ சில எளிய குறிப்புகள்!

SCROLL FOR NEXT