ஆன்மிகம்

அதிசயங்களை நிகழ்த்தும் சனிஷிங்கனாபூர் சனி பகவான்!

ஆர்.வி.பதி

டவுள் உண்டு; ஆனால் கோயில் இல்லை, வீடுகள் உண்டு; ஆனால் கதவுகள் இல்லை, மரம் உண்டு; ஆனால் நிழல் இல்லை, பயம் உண்டு; ஆனால் எதிரிகள் இல்லை எனும் அதிசயங்களைக் கொண்ட ஒரு கிராமம் இன்றும் நமது இந்தியாவில் உள்ளது. ஆம், மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சனிஷிங்கனாபூர்தான் அந்த கிராமம். இந்த சிறிய கிராமம் பல அதிசயங்கள் நிறைந்தது. இந்த ஊரில் எந்த வீட்டிலும் கதவுகள் கிடையாது. அது மட்டுமின்றி, இந்த ஊரில் வாழும் யாரும் பூட்டு சாவியை உபயோகிப்பதில்லை.  இந்த கிராமத்தில் சண்டை சச்சரவுகள் ஏதுமில்லை. இந்த ஊரில் எந்தப் பொருளும் திருடு போவதில்லை. இதனால் இந்த கிராமத்தில் காவல் நிலையமும் இல்லை.

இந்த கிராமத்தில் அருள்பாலிக்கும் சனி பகவானை தரிசிக்க வரும் பக்தர்கள் எவரேனும் தங்களுடைய பொருட்களை எதிர்பாராதவிதமாக இந்த கிராமத்தில் தொலைத்துவிட்டால் அதில் உரியவரின் முகவரி இருந்தால் அவை தபால் மூலமாக சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். இத்தனைக்கும் காரணம் இவர்கள் சனி பகவான் மீது வைத்துள்ள பக்தியும் பயமும்தான்.  தவறு செய்தால் சனி பகவான் உடனே தண்டிப்பார் என்று திடமாக இவர்கள் நம்புகிறார்கள். இந்த ஊரில் யாராவது திருட முயற்சித்தால் அவருடைய  பார்வை பறிபோகும் அல்லது மனநலம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

நாம் சனி பகவானை சனீஸ்வரர் என்று அழைக்கிறோம். இவ்வூர் மக்கள் சனி பகவானை, ‘சனி மகராஜ்’ என்று அழைக்கிறார்கள். சனி பகவான் கோயிலில் உள்ள மூலவர் சுயம்புவாக உருவானவர். ஐந்து அடி ஒன்பது அங்குல உயரமும், ஒரு அடி ஆறு அங்குல அகலமும் உடைய கறுப்பு நிறத்தினால் ஆன சனி பகவான் இங்கே திறந்த வெளியில் வீற்றிருந்து தன்னை பக்தியுடன் நாடி வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சரி, இந்த சனி பகவானின் தோற்றம் குறித்து சற்று பார்ப்போம். சுமார் 350 வருடங்களுக்கு முன்பு ஒரு சமயம் இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்து பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஒரு பெரிய கறுப்பு நிறக் கல் ஆற்று வெள்ளத்தில் மிதந்தபடி வந்து கடைசியில் ஒரு பெரிய மரத்தின் வேர்ப்பகுதியில் தன்னை இருத்திக் கொண்டது. வெள்ளம் வடிந்த பின்னர் மாடு மேய்ப்பவர்கள் அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் வித்தியாசமாகக் காணப்பட்ட கல்லை கொம்புகளைக் கொண்டு அகற்ற முயன்றார்கள். அப்படிச் செய்தபோது அந்தக் கல்லில் இருந்து இரத்தம் வடிந்தது. அதைக் கண்டு திகைத்துப்போன அவர்கள், உடனே ஊருக்குள் சென்று நடந்த விஷயத்தைக் கூறினார்கள். அன்று இரவு சனி தேவர் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி, கல் வடிவத்தில் இருக்கும் தன்னை எடுத்துச் சென்று ஊரில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். மறுநாள் அந்த பக்தர் மூலம் இதை அறிந்த கிராமத்து மக்கள் ஒன்று கூடி சனி தேவரை ஊரில் பிரதிஷ்டை செய்ய எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியாமல் போனது.

அன்றைய இரவு சனி பகவான் மீண்டும் அதே பக்தரின் கனவில் தோன்றி, தாய்மாமனும், மருமகனுமான சொந்தமுள்ள இரண்டு பேர் முயற்சித்தால் என்னை ஆற்றில் இருந்து அழைத்து வர முடியும் என்றார். அடுத்த நாள் அவர் இதை ஊரிலுள்ளவர்களுக்குத் தெரிவிக்க அவர்களும் அதேபோல உறவுக்காரர்களை வைத்து முயற்சி செய்தார்கள்.  பத்து பேர்களுக்கும் மேல் முயற்சி செய்தபோது அசைக்க முடியாத அந்தக் கல்லை சர்வ சாதாரணமாக அந்த இரண்டு பேர் சேர்ந்து சுலபமாகத் தூக்கிவிட்டார்கள். இதைக் கண்ட ஊர் மக்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். சனீஸ்வர பகவானின் உருவம் இல்லாத அந்தக் கல்லை ஓர் இடத்தில் வைத்து பூஜிக்க ஆரம்பித்தார்கள்.

வழக்கமாக கோயிலுக்குள் மூலவ மூர்த்தி கருவறைக்குள்தான் இருப்பார். ஆனால், இந்தத் தலத்தில் மூலவர் சனி பகவான் திறந்தவெளியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பாக வெட்டவெளியில் சனி பகவான் ஆறடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் என ஏதும் இல்லை.

சனி பகவானை தரிசிக்க இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதாகக் கூறப்படுகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு சனி பகவானை தரிசிக்க வருகை தருகிறார்கள். சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை நாட்களில் சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

இத்தல சனி பகவான் சன்னிதிக்கு பலர் மேற்கூரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால், அதை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் சனி பகவான் அவர்கள் கனவில் தோன்றி, ‘நான் யாருடைய நிழலிலும் வாழ விரும்பவில்லை’ என்று கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சனி பகவானுக்கு அருகே ஒரு வேப்பமரம் இருந்திருக்கிறது. அந்த மரத்தின் கிளை வளர்ந்து சனி பகவானின் மேல் அதன் நிழல் விழ முற்படும்போதெல்லாம் அது தானாகவே முறிந்து விழுந்து விடுமாம்.

சனிஷிங்கனாபூரில் யாரையாவது பாம்பு தீண்டி விட்டால் அவரை ஒரு வெள்ளைத் துணியில் கிடத்தி இந்தக் கோயிலுக்குச் கொண்டு வருவது வழக்கம். அவருடைய ஆண் உறவினர் யாராவது நீராடி ஈரத்துணியுடன் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை பாம்பு தீண்டியவருக்குத் தர, சில நிமிடங்களில் விஷம் இறங்கி பாம்பு கடிபட்டவர் பிழைத்துக் கொள்ளும் அதிசயமும் இங்கே நடைபெறுகிறது. இந்த ஊரில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். மேலும், எந்த ஒரு நல்ல காரியத்தையும் இவர்கள் சனிக்கிழமைகளிலேயே தொடங்குகிறார்கள்.

சாய்பாபாவை தரிசிக்க சீரடி வரும் அனைத்து பக்தர்களும் தவறாமல் சனிஷிங்கனாபூர் சென்று சனீஸ்வரரை தரிசித்துச் செல்லுகின்றனர். இக்கோயில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தலம் ஷீரடியிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், புனேவில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.  ஷீரடியிலிருந்து கார் மூலம் ஒரு மணி நேரத்தில் இந்தத் தலத்தினை அடையலாம். பேருந்து வசதிகள் அவ்வளவாகக் கிடையாது.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT