தமிழ்நாட்டில் புதுகோட்டைக்கு 17 கிமீ தொலைவில் அன்னவாசல் அருகே ஊறல்மலையில் உள்ள ஒரு கிராமம்தான் 'மெய்வழிச் சாலை'. இந்த கிராமம் தனக்கெனத் தனிச் சட்டங்களையும் மதத்தையும் கொண்டு தனி உலகத்தில் வாழ்கிறது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம்! மெய்வழிச் சாலை கிராமத்தைப் பொறுத்தவரை அனைத்து மதங்களும் ஒன்று என்பதைக் கூறும் விதமாகத்தான் தங்கள் மதத்தை உருவாக்கியுள்ளனர். எந்த மதத்தில் உள்ளவர்களும் இங்குச் செல்லலாம். மதம், சாதி என்று எதுவுமே வேண்டாம் என நினைப்பவர்களும் இவர்கள் மதத்தில் சேரலாம். அதேபோல் சாதி மாற்றித் திருமணமும் செய்துக் கொள்ளலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையுள்ள ஆண்கள் தலைப்பாகை அணிந்துக் கொள்ள வேண்டும். இந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்றும் பெண்கள் அனந்தாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதே இந்த மதத்தின் நோக்கமாகும். அதேபோல் இன்று வரை அங்குள்ளவர்கள் யாரும் சண்டையிட்டுக் கொண்டதே இல்லை.
இந்த கிராமத்திற்குள் இருக்கும் மக்கள் செப்பல் அணியவே மாட்டார்கள். ஒருவேளை நாம் சுற்றிப்பார்க்க சென்றோமென்றால் செப்பலை கிராமத்திற்கு வெளியே கழட்டி வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் மின்சாரப் பயன்பாட்டே கிடையாது.
முழுவதுமாக அரிக்கேன் மற்றும் சூர்ய ஒளி விளக்குகள் மட்டும்தான் பயன்படுத்துவார்கள். அதேபோல் மது, சிகரெட், சினிமா, டிவி போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. முஸ்லீம், இந்து, கிறிஸ்துவர்கள் என அனைவருமே இங்கு வசித்தாலும் ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்றப் பண்டிகைகள் கொண்டாடுவது கிடையாது. இயற்கையைப் போற்றும் பண்டிகையான பொங்கல் பண்டிகை மட்டுமே இங்குக் கொண்டாடப்படும்.
மெய்வழி மதத்தைப் பின்பற்றும் வெளியூர் வாசிகளும் இந்த இடத்தில் பொங்கல் பண்டிகை அன்று வந்துவிடுவார்கள். மண் தரையில் குழிகள் தோண்டப்பட்டு விறகுகள் வைத்து பொங்கல் செய்வார்கள். அதேபோல் கார்த்திகை தீபத் திருவிழாவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். கிராமம் முழுவதும் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி கிராமத்தையே பிரகாசமாக்குவார்கள்.
இந்த கிராமத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் பாதுகாவலர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தால் மட்டுமே நுழைய முடியும். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் மாடி வீடுக் கட்ட அனுமதியில்லை. கூரை வீடுகளை மட்டும்தான் இங்குக் காண முடியும்.
தமிழகத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்றால் அதை உங்களால் நம்பமுடிகிறதா? இன்னும் நம்பமுடியவில்லை என்றால் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று சுற்றிப் பாருங்கள். பழங்காலத்திற்குச் சென்ற ஒரு சுவாரசிய அனுபவத்தோடுத்தான் திரும்புவீர்கள்.