தீபம்

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு!

ஆர்.ஜெயலட்சுமி

வாழ்வில் எப்போதும் துன்பச் சூழல், உத்தியோகத்தில் முன்னேற முடியாத பெரும் தடைகள், நோய் மற்றும் பில்லி சூனியம் போன்ற துர்தேவதை பயம் அகன்று வாழ்வில் ஒளி பெற ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு பெரும் பலன் தருவதாகும்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருக்கரங்களில் தவழும் ஸ்ரீ சக்கரத்தைதான் பெருமாளின் வடிவாகவே பக்தர்களும் அடியார்களும் வழிபடுகிறார்கள்.

ஒருசமயம் திருமால் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு சிவபெருமானை பூஜித்தார். ஈசனின் திருவிளையாடலால் அந்த பூஜையில் ஒரு தாமரை மலர் குறைந்துவிட்டது. எனவே, திருமால் அந்த ஒரு தாமரை மலருக்கு பதிலாக தனது ஒரு கண்ணையே எடுத்து பூஜிக்க, சிவபெருமான் மகிழ்ந்து திருமாலுக்கு தனது சக்தியே உருவான திருச்சக்கரத்தைத் தந்து அருள்பாலித்தாராம். இப்படி சைவமும் வைணவமும் இணைந்து பெருமை பெற்றதுதான் திருமாலின் ஸ்ரீ சக்கரமாகும். சுதர்சனத்தை வணங்கினால் திருமாலையே வணங்கியது போல் ஆகும்.

அருங்கோண வடிவத்துக்குள் அக்னி ஜுவாலை வீச, பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி பதினாறு கரங்களோடு சக்கரம் சுழன்று வருவது போன்ற பாவனையில் பிரயோக வடிவில் சக்கரத்தாழ்வார் திகழ்கிறார். சுதர்சன சக்கரத்தின் பின்புறத்தில் பெரும்பாலும் யோக நரசிம்மரின் வடிவம் இருக்கும்.

மதுரை மாவட்டம், திருமோகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி மிகவும் பிரபலமானது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் உத்ஸவ திருமேனி பார்த்துப் பரவசப்படக்கூடிய ஒன்றாக திகழ்கிறது.

மதுரையை அடுத்துள்ள அழகர்கோவிலில் திகழும் ஸ்ரீ சுதர்சன சன்னிதி மிகவும் பிரபலமானது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், இங்கு கடைப்பிடிக்கின்ற மந்திர பிரயோகங்கள் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மூலவரின் பின்புறம் இரணியனை வதம் செய்யும் கோலத்துடன்  நரசிம்மர் வடிவம் வடிக்கப்பட்டுள்ளது.

திருவரங்கத்தில் ஐந்தாவது பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. இங்குள்ள சுதர்சனருக்கு எட்டு கைகளே உள்ளன. இவரை வேண்டிக்கொண்டால் பல நன்மைகள் கிடைப்பதோடு ஞானமும் கைகூடும்.

கும்பகோணத்தில் இறைவன் சக்கரத்தைத் தாங்கி நிற்கும் கோலத்தை பெருமைப்படுத்துகின்ற விதமாக, ‘சக்கரபாணி கோயில்’ என்று தனியே உள்ளது. இங்குள்ள இறைவன் சக்கரத்தாழ்வார் வடிவிலேயே வழிபடப்படுகிறார்.

ஸ்ரீ சுதர்சன சக்கரத்துக்கு உரிய ஸ்லோகங்களைக் கூறி ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபட, அனைத்து யோகங்களும் கிடைக்கும். புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 108 பிரதட்சணம் செய்து ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, நோய்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT