ராஜஸ்தான் மாநிலம், உதய்பூருக்கு 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஏகலிங்கர் திருக்கோயில். ஆலயம் அமைந்துள்ள இடத்தை, ‘கைலாசபுரி’ எனவும் ‘ஏக்லிங்ஜி’ என உள்ளூர் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். ஏகலிங்கர் சிவபெருமானின் ஒரு வடிவம். இவர்தான் மேவாரின் உண்மையான மன்னர் என்றும், மஹாராணா அவரது திவானாக இருந்து மேவாரை ஆண்டார் என்றும் இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
கி.பி. 971ல் மேவாரின் குஹிலா வம்சத்தினர் இங்குள்ள ஆலய வளாகத்தில் ஏகலிங்கரை அமைத்து வழிபட அமைத்தனராம். இந்த ஆலயம் 15ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்ட்டு இருக்கிறது. ஆலய வளாகத்தில் 108 சன்னிதிகள் உள்ளன. இந்த ஆலயம், ஆச்சார்ய விஸ்வரூபர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்று இவ்வூர் மக்கள் சொல்கிறார்கள். துவாரகாவில் இருக்கும் சாரதா மடத்துடன் இக்கோயில் இணைக்கப்பட்டிருக்கிறது.
பெரிதுயர்ந்த மதில் சுவர்களுக்குள் ஏகலிங்கர் ஆலயம் அமைந்துள்ளது. ஏராளமான தூண்களைக் கொண்ட மண்டபம் இக்கோயிலில் உண்டு. பளிங்கு மற்றும் கிரானைட் கற்களால் இது அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 2,500 சதுர அடிப் பரப்பளவில் 65 அடி உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. கோயில் சுவர்களில் மேவாரின் சரித்திரமும், இந்த ஆலயத்தின் புகழும் பொறிக்கப்பட்டு உள்ளன.
கருவறையில் சிவபெருமான் நான்கு முகங்களோடு கருப்புப் பளிங்குக் கல்லில் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் நான்கு முகங்களும் சூரியன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோரைச் சித்தரிப்பதாக ஐதீகம்.
வாரத்தின் மற்ற நாட்களை விட சுக்ர வாரமான திங்கட்கிழமைகளில் கோயிலில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உதய்பூரில் இருந்து மஹாராணா ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த ஆலயத்துக்கு வருகை தருவாராம். ஆலயம் இரண்டு அடுக்குகளைக் கொண்டு திகழ்கிறது. பிரமிட் போன்ற அமைப்புடன் கோயில் கூரை விளங்குகிறது. வெள்ளி, கருப்பு சலவைக்கல் மற்றும் பித்தளையில் நந்தி உருவங்கள் அமைந்துள்ளன. சிவலிங்கத்துக்கு வெள்ளி நாகம் ஒன்று மாலை அணிவித்திருப்பதைப் போல அமைந்த சிற்பம் பக்தர்களை மிகவும் கவருகிறது.
பார்வதி, விநாயகர், கார்த்திகேயர், கங்கை, யமுனை. சரஸ்வதி ஆகியோருக்கும் இந்தக் கோயிலில் சிலைகள் உண்டு. இந்த ஆலயத்துக்கு வடக்கே கர்ஸ குண்டம் மற்றும் துளசி குண்டம் என்ற இரண்டு தீர்த்தக் குளங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து கொண்டுவரப்படும் நீர்தான் ஆலய வழிபாட்டுக்குப் பயன்படுகிறது. கோயிலுக்கு அருகிலேயே இந்தர்சாகர் ஏரி அமைந்துள்ளது. சிவராத்திரி திருநாள் இக்கோயிலில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கோயில் நடை அதிகாலை 4.15 முதல் 6.45 மணி வரையும், மீண்டும் காலை 10.30 முதல் 1.30 மணி வரையும், மாலை 5.15 முதல் 7.45 மணி வரையும் திறந்திருக்கும்.