உலகுக்கு ஒளியைக் கொடுக்கும் கடவுளாகவும் நவகிரகங்களின் தலைவனாகவும் செயல்படுபவர் சூரிய பகவான். தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏழாம் நாள் வரும் சப்தமி திதி ரத சப்தமியாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த தினம் சூரிய ஜயந்தியாவும் அனுசரிக்கப்படுகின்றது. இந்த நாளில் விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கி, நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் பெறலாம். தயாராக வேண்டும். இன்று நாள் முழுவதும் விரதமிருந்து காலையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பொதுவாக, நாம் காலையில் குளித்து சூரியனை வணங்குவதைப் போல் வணங்கி, அவருக்கு தீபாராதனை செய்ய வேண்டும்.
ரத சப்தமி தினத்தில் நாம் சூரிய பகவானுக்குச் செய்யும் வழிபாட்டுக்கு நிகராக நாம் போடும் கோலமும் அமைய வேண்டும். வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதன் முன் சாணம் தெளித்து அரிசி மாவில் ஒரு ரதம் கோலமிட்டு, அதில் சூரியன் நடுவில் இருப்பது போன்று கோலமிடுவது சிறந்தது. இந்தக் கோலத்துக்கு அருகில் ஒரு சந்திரனின் பணம் இருப்பது போலவும் வரையவும். அந்த இடத்தில் மாவிளக்கு ஏற்றியும் பொங்கலிட்டும் வழிபட வேண்டும். அன்றைய தினத்தில் எள்ளுருண்டை செய்து தானம் செய்ய, மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
தலைமைப் பொறுப்புகளைப் பெற வேண்டி வழிபடக்கூடிய முக்கியமான கடவுள் சூரிய பகவான். அரசு வேலையில் உயர் பதவி வேண்டுவோர், பதவி தொடர்பாக தடைகள் உள்ளவர்கள், வழக்குகளில் வெற்றி வேண்டுபவர்கள் ரத சப்தமி விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுவது நன்மை தருவதாகும். குறிப்பாக, ஆற்றங்கரையில் நீராடி சூரியனை வணங்குவது மிகவும் சிறப்பு.
ஏழு எருக்க இலையின் மீது சிறிது திருநீறு வைத்துக்கொண்டு ஆண்களும், எருக்க இலையில் மஞ்சளை வைத்துக் கொண்டு பெண்களும் நீராட வேண்டும். இதனால் நீத்தார் கடன் செய்த புண்ணியம் கிடைக்கும். இப்படி நீராடுவதால் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்த புண்ணியமும் உண்டாகும். இதனால் பீஷ்மர் அருளாசி கிடைக்கும். இன்று,
‘ஓம் ஹஜ்ரத்வஜாய வித்மஹே
பார்த்த கசாய தீமஹி
தன்னோ சூரிய பிரசோதயாத்’
எனும் சூரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட, பல்வேறு நலன்களைப் பெறலாம். இம்மாதம் 28ம் தேதி ரத சப்தமி விரத வழிபாட்டு தினமாகும்.
திருமாலின் அம்சமே சூரிய பகவான் என்பதால் ரத சப்தமியன்று திருமலை திருப்பதியில் சூரிய பிரபை வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருள்வார். இன்று நாள் முழுவதும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.