உலகப் புகழ் பெற்ற ஆழித் தேரோட்டம் திருவாரூரில் நாளை ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த ஆழித் தேரோட்டம் நடைபெறுகிறது.
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டபோது முசுகுந்த சக்கரவர்த்தி உதவியுடன் அதை சமாளித்ததாகவும், அதற்குக் கைமாறாக என்ன வேண்டும் என இந்திரன் கேட்டபோது, அதற்கு அவர் திருமால் தனது நெஞ்சில் வைத்து பூஜித்த லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜை செய்யும் அந்த லிங்கத்தை ஒரு மனிதனுக்குக் கொடுக்க இந்திரனுக்கு மனம் வரவில்லை. அதனால் தேவர்களின் சிற்பியான மயனை வரவழைத்து தாம் வைத்திருந்த லிங்கத்தை போலவே போலி லிங்கம் தயார் செய்து முசுகுந்த சக்கரவர்த்திக்குக் கொடுத்தான். அது போலி லிங்கம் என முசுகுந்த சக்கரவர்த்தி கண்டறிந்ததையடுத்து வேறு வழி இல்லாமல் நிஜ லிங்கத்தையும் முசுகுந்த சக்கரவர்த்தியிடமே ஒப்படைத்தான் இந்திரன். அந்த நிஜ லிங்கம்தான் திருவாரூரில் உள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது.
இத்தகைய வரலாறு கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நடைபெறும் இந்தத் தேர்த் திருவிழாவில் ஓடும் தேரே ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாற்கடல் கலந்த தேவதாருக்களைக் கொண்டு உருவானது இந்தத் தேர். அதனாலேயே இது ஆழித்தேர் என்றானது. இந்த பிரமாண்ட தேர் பிரம்மனால் ஸ்தாபிக்கப்பட்டது. திருமாலால் வணங்கப்பட்டது. அஷ்டதிக் பாலகர்கள் தேரின் குதிரைகளாகவும், தேர் காலின் அச்சாக தேவர்களும், தேரின் அடித்தட்டாக கால தேவனும் அமர்ந்தார்கள். வார்த்தைகளால் வடிக்க இயலாத அழகிய சிற்பங்களும் தொம்பையின் ஓவியங்களும் தேவர்களை மயக்கம்முறச் செய்ததாம்.
முதன் முதலில் தோன்றிய இந்தத் தேரால், ‘ரத ஸ்தாபன சாஸ்திரம்’ என்ற புதிய சாஸ்திரமே உருவானது. திருவாரூர் தேரின் மொத்த எடை 300 டன். இந்தத் தேரை இழுக்க சுமார் 425 அடி நீளம், 21 அங்குலம் 4 டன் எடை கொண்ட நான்கு வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் தேரில் நடவாசனம் பத்மாசனம் தேவாசனம் சிம்மாசனம் என மொத்தம் நான்கு அடுக்குகள் உள்ளன. தேரின் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்தத் தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இந்தத் தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், ஐந்து டன் பனை மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அழகிய வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்கள், வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆழித்தேரின் வடம் பிடித்து இழுத்தால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
ஆழி திருவிழா முடிந்த அடுத்த நாள் தேர் அசைந்து சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கி தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் உரைப்பர். இந்த நிகழ்ச்சி, ‘தேர் தடம் பார்த்தல்’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது. தேர் அசையும் போதெல்லாம் மக்கள் கூட்டம், ‘ஆரூரா… தியாகேசா’ என்று விண்ணதிர முழக்கமிடும் ஒலி மெய்சிலிர்க்க வைக்கும். ஆழி தேர் நான்கு வீதிகளிலும் வரும் பொழுது குதிரைகள் அசையும் அழகு காண்பதற்கு கண்கொள்ளக் காட்சியாக இருக்கும். இது தவிர, சுப்பிரமணியர், விநாயகர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் திருத்தேர்களும் ஆழி தேரோட்டத்தின்போது நான்கு மாட வீதிகளில் வலம் வரும். தேர் வலம் வரும்போது குடமுழாய் என்கிற பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படும். ‘பாரின் நயனம்’ என்ற நாதஸ்வர இசைக்கருவி வாசிக்கப்படுகிறது. திருவாரூர் திருத்தேர் வைபவத்தைக் கண்டு மகிழ்வோம். திருத்தேர் வடம் பிடித்து தியாகராஜ பெருமானின் திருவருளைப் பெறுவோம்.