new cycle... Image credit - goodmetavs.pics
கோகுலம் / Gokulam

சிறுவர் கதை - புது சைக்கிள்!

ஆர்.வி.பதி

ப்பா அன்றைய செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார். ராமுவும் கோபுவும் அப்பாவிடம் வந்து நின்றார்கள்.

“என்னடா ரெண்டு பேரும் வந்து நிக்கறீங்க?”

“அப்பா பள்ளிக்கூடம் நடந்து போறது கஷ்டமா இருக்கு. எங்களுக்கு ஆளுக்கு ஒரு புது சைக்கிள் வேணும்பா”

“ஒரு கிலோமீட்டர் தொலைவுதானேடா.  நடந்தா நல்லதுதானே”

“எங்ககூட படிக்கிற எல்லாரும் சைக்கிள் வெச்சிருக்காங்கப்பா”

“அதுக்காக நீங்களும் சைக்கிள்லே போயாகணுமா?  வேணும்னா உங்க ரெண்டு பேருக்குமா சேர்த்து பழைய சைக்கிள் ஒண்ணு வாங்கித்தர்றேன்.     ரெண்டு பேரும் டபுள்ஸ் போங்க”

”முடியாதுப்பா. எங்களுக்கு புது சைக்கிள்தான் வேணும்”

“சரி.  அப்ப ஒண்ணு பண்ணலாம்.  உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு உண்டியல் வாங்கித் தர்றேன்.  உங்க பாக்கெட் மணியிலே மிச்சம் பிடிச்சு பணத்தை அதுலே சேர்த்து வையுங்க. பணம் சேர்ந்ததும் ஆளுக்கு ஒரு புது சைக்கிள் வாங்கிக்கங்க”

அதற்கு மேல் அவர்களால் ஏதும் பேச முடியவில்லை.  அன்றே அவர்கள் இருவருக்கும் அப்பா ஆளுக்கு ஒரு பெரிய மண் உண்டியல் வாங்கித்தந்தார்.

அடுத்த நாளிலிருந்து இருவரும் அதில் ஆர்வத்தோடு பணத்தைச் சேர்க்கத் தொடங்கினார்கள்.

அப்பா தினமும் ஆளுக்கு பத்து ரூபாய் தருவார். இருவரும் அதை வைத்து பள்ளியின் வெளியே விற்கும் திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவார்கள்.  சிலசமயங்களில் சைக்கிளில் விற்கும் குச்சி ஐஸை வாங்கி சாப்பிடுவார்கள்.  இதனால் அடிக்கடி உடல்நலம் கெட்டு மருத்துவரைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

இப்போது ராமுவும் கோபுவும் உண்டியலில் பணத்தைச் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.  தன் உடன் படிக்கும் நண்பர்களிடம் இருவரும் இந்த விஷயத்தைச் சொன்னார்கள்.

“போங்கடா நீங்களும் உங்க உண்டியலும்.  நீங்க ரெண்டு பேரும் சிறுக சிறுக பணம் சேர்த்து சைக்கிளை வாங்கறதுக்குள்ளே பிளஸ்டூ முடிச்சி காலேஜுக்கே போயிடுவீங்க.”

இதைக் கேட்ட இருவருக்கும் கோபமும் வெறுப்பும் வந்தது. ஆனால் அமைதியாக இருந்தார்கள். 

என்ன செய்வது வேறு வழியில்லை.

இப்படியே ஆறு மாதங்கள் ஓடிச் சென்றன.

இப்போது உண்டியலில் எப்படியும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேர்ந்திருக்கும். இன்னும் ரெண்டாயிரம் ரூபாய் சேர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிடும். ராமு யோசித்துப் பார்த்தான்.  அப்போது அவன் மனதில் ஒரு யோசனை தோன்றியது.  கோபுவை அழைத்துப் பேசினான்.

“டேய் கோபு.  நம்ம உண்டியல்லே கொஞ்சமாத்தான் பணம் சேர்ந்திருக்கு.  ரெண்டு பேரும் சேர்த்து ஆளுக்கு ஒரு புது சைக்கிள் வாங்க இன்னும் எப்படியும் ஒரு வருஷத்துக்கே மேலே ஆயிடும்.  அதனாலே நான் ஒரு ஐடியா சொல்றேன்.  கேட்கறியா ?”

“சொல்லுடா. என்ன ஐடியான்னு பார்ப்போம்”

“நம்ம ரெண்டு பேரோட உண்டியல்லே இப்ப எப்படியும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேலே சேர்ந்திருக்கும். நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பணத்தை அப்பாகிட்டே கொடுத்த மீதி பணத்தை அவரைப்போடச் சொல்லி ஒரு புது சைக்கிள் வாங்கிடுவோம்.  நாம ரெண்டு பேரும் புது சைக்கிளை மாத்தி மாத்தி ஓட்டிக்கலாம். என்னடா சொல்றே ?”

யோசித்த கோபுவிற்கு இது சரியான ஐடியாவாகத் தோன்றியது.  கோபு இதற்குச் சம்மதித்தான்.

இருவரும் அப்பாவிடம் சென்றார்கள். விஷயத்தைச் சொன்னார்கள்.

“வெரிகுட்.  இப்படித்தான் யோசிக்கணும்.   நிச்சயம் நாளைக்கே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு புது சைக்கிள் வாங்கித்தர்றேன். இந்த ஒரு விஷயத்தாலே நீங்க நிறைய விஷயங்கள் கத்துகிட்டிருக்கீங்க.  முதலாவது சேமிக்கிற நல்ல பழக்கம். ரெண்டாவது தெருவிலே விற்கிற சுகாதாரம் இல்லாத திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்தது. மூணாவது உங்க நண்பர்கள் உங்களை சீண்டிய சமயம் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்தது. இது எல்லாத்துக்கும் மேலாக,  நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா சேர்ந்து செயல்படறது.  இந்த நல்ல விஷயங்கள் எல்லாமே நம்ம வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்.”

அடுத்தநாள் சொன்னமாதிரியே அப்பா சிறிது பணம் போட்டு கேரியர் வைத்த ஒரு புது சைக்கிளை வாங்கித் தந்தார்.

ராமுவும் கோபுவும் தங்கள் புது சைக்கிளில் மாறி மாறி ஜாலியாக பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார்கள்.

Heart Attack Vs. Cardiac Arrest: இரண்டிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

SCROLL FOR NEXT