CYBER CRIME  
கல்கி

சைபர் கிரைம்: திரைக்குப் பின் அதிகரிக்கும் குற்றங்கள்; சிக்கித் தவிக்கும் மக்கள்! தப்பிக்க என்ன வழி?

கல்கி டெஸ்க்

குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாகப் பிடிக்கவும் தற்போது காவல் துறையினர் பல்வேறு டெக்னாலஜிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இது, ஒருபுறம் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருப்பினும், மறுபுறம், அதே டெக்னாலஜியை பயன்படுத்தி அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் மனதை பதைபதைக்க வைக்கின்றன. அடையாளம் தெரியாத ஒரு நபர் எங்கோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு, இன்னொரு முகம் தெரியாத மனிதரை டெக்னாலஜியைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கும் நிகழ்வுகள், இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

முன்னாள் டிஜிபி கே.இராதாகிருஷ்ணன் (ஓய்வு)

இது குறித்து ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி கே.இராதாகிருஷ்ணனிடம் (ஓய்வு) கேட்டபோது,

“முதலில், உங்கள் தொலைபேசிக்கு வரும் அறிமுகமில்லாத அழைப்புகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அப்படித் தவிர்க்க முடியாத பட்சத்தில், உங்களை மிரட்டி உங்களது தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணம் கேட்டாலோ உடனடியாக அந்த அழைப்பைத் துண்டிக்க வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்களை செய்வோர் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள்தான். இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோதான் உங்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். அதுபோன்ற அழைப்புகளை எத்தனை நொடிகளுக்குள் உடனுக்குடனே உங்களால் துண்டிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் துண்டிப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்களை செய்வதற்கென்று ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. இவர்களிடம் நீங்கள் பேச்சுக் கொடுக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டாலே அவர்கள் உங்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படவும் வாய்ப்பு அதிகமாகிறது. அதனால் புதிய தொலைபேசி எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் எக்காரணம் கொண்டு அந்த அழைப்பை ஏற்க வேண்டாம். உடனடியாக அந்த அழைப்பை துண்டிப்பது நல்லது" என்று எச்சரித்துப் பேசினார்.

மேலும், இதுபோன்ற சைபர் குற்றங்களில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ள சில வழிகள் உள்ளன என்றும், அவற்றைப் பற்றியும், சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களைப் பற்றியும் விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

அதிகமாக நடைபெறும் சில சைபர் கிரைம் மோசடிகள்:

  1. TRAI (Telecom Regulatory Authority of India) அல்லது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பெயரில் நடைபெறும் போன் மோசடி. இத்தகைய மோசடியில், குற்றவாளி TRAIல் இருந்து பேசுவதாகக் கூறி, ‘உங்கள் மொபைல் எண் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் உங்களின் சேவைகள் இடைநிறுத்தப்படும் என்று கூறி, நம்முடைய தனிப்பட்ட தகவல்களை நம்மிடமிருந்து பெற முயற்சிப்பார்கள். ஆனால், உண்மையில், TRAI தனது சேவைகளை இடைநிறுத்தாது. தொலைத்தொடர்பு நிறுவனங்களால் மட்டுமே சேவைகளை இடைநிறுத்தம் செய்ய முடியும்.

  2. சுங்கத்தில் ஒரு பார்சல் சிக்கியதாகக் கூறி, நடைபெறும் மோசடி. இந்த மோசடியில், உங்கள் பெயரில் போதைப்பொருட்கள் அல்லது ஏதேனும் தடைசெய்யப்பட்ட கடத்தல் பொருட்களுடன் கூடிய பார்சல் ஒன்று சுங்கச்சாவடியில் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், அதற்குரிய அபராதப் பணத்தை செலுத்துமாறும், இல்லையென்றால் சிறைவாசம் நிச்சயம். அதுமட்டுமின்றி, வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்படும் என்றும் மிரட்டுவார்கள்.

  3. அடுத்து, டிஜிட்டல் கைது. போலீஸ் அதிகாரிகள் போன்று போன் செய்து, ஏதோ ஒரு குற்றத்தில் உங்கள் பெயர் ஈடுபட்டிருப்பதாகவும் (வங்கி மோசடி, பணப்பரிவர்த்தனை மோசடி போன்று) அதற்காக தங்களை டிஜிட்டல் கைது அல்லது ஆன்லைனில் விசாரணை மேற்கொள்ளப்போவதாகவும் அச்சுறுத்துவார்கள். ஆனால், உண்மையில் காவல்துறை டிஜிட்டல் கைதுகள் அல்லது ஆன்லைன் விசாரணைகளை நடத்துவதில்லை. நேரில் சென்றுதான் விசாரணை நடத்தி கைது செய்வார்கள்.

  4. அடுத்ததாக, குடும்ப உறுப்பினர் கைது. ‘குறிப்பிட்ட குற்றத்திற்காக உங்கள் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட உள்ளார். அதைத் தடுக்க பணம் செலுத்த வேண்டும்’ என்று கூறி மிரட்டுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு முடிவோ அல்லது நடவடிக்கையோ எடுப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களுடன் விசாரித்து சரிபார்த்துக் கொள்ளவும்.

  5. ‘பங்கு முதலீடுகளில் அதிக வருமானம் ஈட்டலாம். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்க’ என்ற சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் குறுஞ்செய்தி வழியாக நடைபெறும் மோசடி. ஆனால், நடைமுறைக்கு அதிகமான வருமானம் தரும் திட்டங்கள் மோசடிகளாகவே இருக்கக் கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  6. எளிய பணிகளைக் கொடுத்து, ‘இதைச் செய்து முடித்தால் பணம் நிறைய கிடைக்கும்’ என மோசடி செய்கின்றனர். முதலில், அதிக தொகையை வழங்கி, பின் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யத் தூண்டி மோசடி நடைபெறுகிறது.

  7. நிர்வாகிகள் போன்று போன் செய்து, ‘உங்கள் பெயரில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு போலியானது’ எனக் கூறி நடைபெறும் மோசடி. இப்படி ஏதேனும் அழைப்புகள் வந்தால், முதலில் உங்கள் வங்கியுடன் தொடர்பு கொண்டு சரிபார்த்துக் கொள்ளவும்.

  8. தவறாகப் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாகக் கூறி, பணத்தை திரும்பக் கேட்பது போல் நடைபெறும் மோசடி. இதில் சிக்கிக் கொள்ளாமல், முதலில் உங்களது வங்கியுடனான பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும்.

  9. ‘உங்கள் KYC காலாவதியானது. அதனைப் புதுப்பிக்க வேண்டும்’ என்று கூறி அதிகளவில் மோசடிகள் நடைபெறுகின்றன.

  10. மோசடியில் ஈடுபடுபவர்கள் போன் செய்து தங்களை வருமான வரித்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு, வங்கி விவரங்களைக் கேட்பார்கள். ஆனால், வரித்துறைகள் ஏற்கெனவே வங்கி விவரங்களைக் கொண்டுள்ளன. அதோடு, அவை நேரடியாகச் சென்று மட்டுமே தொடர்பு கொள்கின்றன.

Cyber crime

சைபர் கிரைம் மோசடிகளில் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க:

  1. முடிவோ அல்லது நடவடிக்கையோ எடுக்கும் முன்பு தகவலைச் சரிபார்க்கவும். எதையும் பொறுமையுடன் கையாளவும்.

  2. SMS அல்லது WhatsAppல் வரும் சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.

  3. வங்கிகளுடனான பரிவர்த்தனைகளை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

  4. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் தொடர்ந்து வந்தால் அந்த எண்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

  5. அதிக வருமானம் தரும் திட்டங்கள் குறித்த அழைப்புகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

  6. KYC ஐ நேரில் புதுப்பிக்கவும்.

  7. தனிப்பட்ட மற்றும் வங்கி தொடர்பான எந்த விவரங்களையும் அறிமுகமில்லாதவரிடம் பகிர வேண்டாம்.

மேற்கண்ட மோசடிகளில் சிக்கிக்கொண்டால் புகாரளிக்க:

  1. தேசிய நுகர்வோர் உதவி எண் – 1800 -11- 4000 அல்லது 1930ல் புகார்களை தெரிவிக்கவும்.

  2. http://cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் போர்டலில் புகாரளிக்கலாம்.

  3. உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்றும் புகாரளிக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை அனைவர் கைகளிலும் செல்போன்கள் இருக்கின்றன. மோசடி செய்பவர்கள் எல்லா வயதினரையும் குறிவைக்கிறார்கள். குறிப்பாக, நடுத்தர வயது மற்றும் வயதான நபர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

முடிந்த வரையில் இந்தப் பதிவை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வுடன் இருங்கள்.

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கண் திறக்கும் யோக நரசிம்மர்!

இது மட்டும் தெரிந்தால் இனி வீட்டிலேயேதான் பிரட் செய்வீங்க! 

கார்த்திகை மாதத்தில் அசைவம் சாப்பிடலாமா?

பெண்களே..! பாதுகாப்பாக இருங்கள்..!

நீண்ட தொலைவு பயணத்தினால் ஏற்படும் கால் வீக்கத்துக்கான தீர்வு!

SCROLL FOR NEXT