Ganesha Idols 
கல்கி

கிழங்கு மாவில் விநாயகர் சிலைகள்: இந்த வருடம் இது புதுசு! இது நல்லா இருக்கே!

ரா.வ.பாலகிருஷ்ணன்

விநாயகர் சிலைகள் என்றாலே இரசாயனங்களைப் பயன்படுத்தி தான் அதிகளவில் தயாரிக்கின்றனர். களிமண்ணில் செய்யப்படும் சிலைகள் மிகவும் குறைவு. இரசாயனங்களைத் தவிர்க்கும் விதமாக இயற்கையாக கிடைக்கும் மரவள்ளிக் கிழங்கு மாவில் விநாயகர் சிலைகள் இந்த ஆண்டு வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்தியா முழுக்க ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே விநாயகர் சிலைகளை கட்டமைக்கும் பணி தொடங்கி விடும். இந்த சிலைகள் இந்தியா முழுக்க விநியோகிக்கப்பட்டு, வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பண்டிகை முடிந்த பிறகு விநாயகர் சிலைகளை கடல், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

பொதுவாக விநாயகர் சிலைகளை வடிப்பதற்கு அதிகளவில் செயற்கையான இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தால், அவை மாசுபடுவது மட்டுமின்றி, நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் இந்த சிலைகள் தண்ணீரில் கரைய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். இதனை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வந்ததற்குப் பலனாக தற்போது இதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு தற்போது இரசாயன கலப்படமின்றி விநாயகர் சிலைகளை வடிக்க சிற்பிகள் முற்பட்டுள்ளனர். இதன்படி கும்பகோணத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மரவள்ளிக் கிழங்கு மாவில் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். இந்த சிலைகள் விரைவில் தண்ணீரில் கரைந்து விடும் தன்மையைக் கொண்டவை.

இயற்கையான விநாயகர் சிலை தயாரிப்புக்காக மரவள்ளிக் கிழங்கு மாவை சேலம் மாவட்டத்தில் இருந்தும், காகிதக் கூழை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தும் மொத்த விலைக்கு வாங்குகிறார்கள். இவையிரண்டையும் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்களைப் பூசி அழகுப்படுத்திய பிறகு, விற்பனைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்தச் சிலைகள் வெகு விரைவில் மிக எளிதாக நீரில் கரைவது மட்டுமின்றி, இதிலிருக்கும் காகிதக் கூழ் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும் பயன்படும். விநாயகர் சிலைகளின் உயரம் 1 அடி முதல் 9 அடி வரை வடிவமைக்கப்படுகிறது. இதன் விலை குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுக்க கொண்டாடப்பட இருப்பதால், 4 புதிய வகை விநாயகர் சிலைகளையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் சூரசம்ஹார விநாயகர், ரங்கநாத விநாயகர், குழந்தை வரம் அருளும் விநாயகர் மற்றும் சிவரூப விநாயகர் ஆகிய நான்கும் அடங்கும்.

இரசாயன பொருட்களின் பயன்பாடு இல்லாமல், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரிக்க தொழிலாளர்கள் முன்வந்ததற்கே நாம் பாராட்ட வேண்டும். இந்த நடைமுறை இந்தியா முழுக்க கடைபிடிக்கப்பட்டால், நிச்சயமாக நீர்நிலைகளை நம்மால் பாதுகாக்க முடியும். அதோடு பொதுமக்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகும்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT