கல்கி

எந்தப் பக்கத்திலிருந்தும் ஓவர் டேக் செய்யலாம். நினைத்த இடத்தில் சாலையை கடக்கலாம்.

மாலன்

மாலனின் முகநூல் பக்கத்திலிருந்து...

 வாரணாசி

காசி தமிழ் சங்கம விழாவில் பாரதி பற்றிய  உரையரங்கத்தில் Inspirational Bharathi in Banaras என்ற பொருண்மையில் பேச பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டிருந்தேன். 

"நீங்கள் தங்கப் போகும் எங்கள் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நெடுஞ்சாலை வழி செல்லும் சுருக்கு வழி. மற்றொன்று நகர் வழியாகச் செல்லும். நீங்கள் எப்படிச் செல்ல விரும்புகிறீர்கள்?" என்று விமான நிலையத்திற்கு வரவேற்க வந்திருந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவி மீரா ஆங்கிலத்தில் கேட்டபோது சற்றும் தயங்காமல் “ஊருக்குள் போவோம்“ என்றேன். "எனக்கு மனிதர்களை, அவர்களது இயக்கங்களைப் பார்க்க வேண்டும்" என்றேன்.

ஊர் பெரிய ஊர்தான். சென்னை அளவிற்கு இல்லை என்றாலும் கோவை அளவிற்கு விரிந்ததுதான். ஆனால் வீதிகள் அப்படி விரிந்தவை அல்ல... அடுத்தடுத்து இரண்டு கார்கள் போகலாம். ஆனால், பெரும்பாலான நாற்சந்திகளில் சிக்னல் கிடையாது. யாரும் எங்கும் திரும்பலாம். யூ டர்ன் எடுக்கலாம். எந்தப் பக்கத்திலிருந்தும் ஓவர் டேக் செய்யலாம். நினைத்த இடத்தில் சாலையை கடக்கலாம். 70களில் சென்னை ஜாம்பஜாரில் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் எளிதில் இங்கு வண்டி ஓட்டலாம். ஆங்காங்கே ஒருவழிப் பாதைகளில் வரக்கூடாத வழிகளில் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் நாம் இந்தியர்கள் என்பதை நிறுவிக் கொண்டிருந்தார்கள்.

கார் சிறிதும் பெரிதுமான சாலைகளில் சென்றது. ஆங்காங்கே அனேகமா எல்லாத் தெருக்களிலும் சாலையோரக் கடைகள். அவற்றில் பெரும்பாலானவை கையேந்தி பவன்கள்.

25 கி.மீயை ஒன்றரை மணி நேரத்தில் கடந்து ப.இ.ப விற்கு வந்தோம். பல்கலைக்கழகம் மிகப் பெரிது. ஒவ்வொரு விருந்தினரையும் கவனித்துக் கொள்ள ஒரு மாணவரை நியமித்திருந்தார்கள்.

மாலையில் கங்கா ஆரத்தி பார்க்கப் புறப்பட்டோம். எங்களைப் போல ஆயிரக்கணக்கானவர்களும் அதைப் பார்க்கக் கிளம்பியிருந்ததால் ஒரு புள்ளியில் காரிலிருந்து இறங்கி நடக்க வேண்டியிருந்தது.

நாங்கள்(நான், புதுச்சேரி ராஜ்ஜா, அவர் மனைவி, மாணவ நண்பர்கள்) அஸ்லி காட் என்ற இடத்தில் விசைப்படகேறினோம். அஸ்லி என்றால் இந்தியில் 80ஆம். காட் என்ற படித்துறை. கங்கையில் மொத்தம் 84படித்துறைகள் இருக்கின்றன.

கங்கையில் இரவு படகு சவாரி சுகமாக இருந்தது. நதியிலிருந்து கரையைப் பார்க்க அவை வண்ண விளக்குகளில் ஒளிர்ந்தன.

அனேகமாக ஒவ்வொரு படித்துறையிலும் கங்கை அன்னைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். புகழ்பெற்ற படித்துறைகளில் அது அமர்க்களமாக நடக்கிறது. அது ஒரு நடனம் போலிருக்கிறது.

இரவு அறைக்குத் திரும்புகையில் குளிர் உறைத்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

SCROLL FOR NEXT